முகப்பு
தலையங்கம்

தொடர்கிறதே இப்படி...

குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பேரணிகள், கருத்தரங்குகள் நடந்துகொண்டிருந்த கடந்த வியாழக்கிழமையன்று, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்ததைப் போன்ற பாலியல் வன்கலவிச் சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றிருப்பது தமிழக மக்களின் மனதை உறையச் செய்தது.

Updated On : 16 ஜூன், 2014 at 1:44 AM
பகிர்:

குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பேரணிகள், கருத்தரங்குகள் நடந்துகொண்டிருந்த கடந்த வியாழக்கிழமையன்று, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்ததைப் போன்ற பாலியல் வன்கலவிச் சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றிருப்பது தமிழக மக்களின் மனதை உறையச் செய்தது.

பொள்ளாச்சி டிஇஎல்சி தேவாலாய மாணவர் விடுதியில், இரண்டு மர்ம நபர்கள் நுழைந்து, மாணவர்களை மிரட்டி, ஒருவரை காயப்படுத்திய பிறகு இரு சிறுமியரை (இருவரும் சுமார் 10 வயதினர்) கடத்திச் சென்று வன்கலவி செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற இடம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. சிறுமியர் கடத்தப்பட்ட பின்னர் மாணவர்கள் எழுப்பிய கூக்குரலுக்கு செவிமடுப்பார் அங்கு யாருமில்லை.

இந்த சம்பவத்துக்கு அடிப்படைக் காரணம், விடுதிக்காப்பாளர் விடுப்பில் சென்றதும், அவருக்கு மாற்றாக இருக்க வேண்டியவர் வீட்டிலேயே தூங்கியதால், விடுதிக் காவலர் பணியில் இல்லை என்பதும்தான். வன்கலவி செய்த குற்றவாளிகளைக் காட்டிலும் மிக மோசமான குற்றவாளிகள் இக்குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிய, அலட்சியமாக இருந்த பணியாளர்கள்தான்.

Advertisement

இந்தச் சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 48 மணி நேரத்துக்குள் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விடுதிக் காப்பாளரும் கைதாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ.3 லட்சம் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பதும், இந்தக் குழந்தைகள் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார்கள் என்பதும் ஆறுதலான செய்திகள். இருப்பினும், தமிழ்நாட்டில் இத்தகைய சம்பவங்கள் வெளியே தெரியாமல் பல விடுதிகளில் நடந்து வந்திருக்கின்றன என்பதும் இதுநாள் வரை இதுகுறித்து அதிக அக்கறை காட்டப்படவில்லை என்பதுமே கசப்பான உண்மை.

தமிழ்நாட்டில் ஆதி திராவிட, பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகளுக்குள் இளம் ரவுடிகள் அத்துமீறி புகுவதும், சில தருணங்களின் விடுதிக் காப்பாளர் இசைவுடன் உள்ளே வருவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கொலை மிரட்டல் காரணமாக இத்தகைய சம்பவங்களை மாணவியரும் விடுதிக்காப்பாளர்களும் வெளியே பேசுவதில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மாணவியர் விடுதிகள், பாதுகாப்பு இல்லங்கள், தனியார் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் நடத்தப்படும் தங்கு விடுதிகள் போன்றவை எத்தகைய பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றுவதில்லை. பல விடுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் உள்ளே புக முடியாதபடி சுற்றுச்சுவர்களோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ இருப்பதில்லை. பெரும்பாலான விடுதிகளில் விடுதிக் காப்பாளர் அங்கே தங்குவதே இல்லை. தங்கியிருக்கும் மாணவியரில் ஒரு சீனியரை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீடு செல்லும் விடுதிக் காப்பாளர்களே அதிகம். இவையெல்லாம் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவியர் விடுதிகளையும் பட்டியலிடவும், அவர்களது பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு நடத்தவும் வேண்டிய இன்றியமையாத் தேவை இந்த சம்பவத்தின் மூலம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் உணவு, மாணவியர் எண்ணிக்கையோடு முடித்துக்கொள்கிறார்கள். சுகாதார வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை. விடுதி இருக்கும் பகுதியில் காவல்துறையின் ரோந்து அன்றாடம் இருக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று நினைப்பதுகூட இல்லை.

ஒரு மாணவி மாலை 6 மணிக்குள் விடுதிக்குத் திரும்பவில்லை என்றாலோ, அல்லது விடுதிக்குள் யாரோ புகுந்துவிட்டதாக சந்தேகம் இருந்தாலோ அவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டிய மகளிர் காவல்நிலைய அதிகாரியின் செல்போன் எண்கள் இவர்களிடம் தரப்பட வேண்டும். ஆபத்தான வேளையில் விடுதியில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதி மாணவியர் விடுதிகளில் அவசியம் தேவை.

"அமைதிப் பூங்காவான தமிழகம்' என்று பேசுகிறோமே தவிர, பரவலாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களைப் பற்றித் தமிழ்ச் சமுதாயம் உணர்வுபூர்வமான கவலையும், அக்கறையும் செலுத்தவில்லை. வன்முறையையும், மிருகத்தனமான உணர்வுகளையும் தூண்டும் காட்சிகள் மேலதிகமாக சினிமா, ஊடகங்களில் இடம்பெறுவதும், மகளிருக்கெதிராக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

இந்தியாவில் வன்கலவிச் சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும்பீதியையும் சலனத்தையும் ஏற்படுத்துவதாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு இல்லாமல் போனதாக உணரச் செய்வதாக இருப்பதாலும், இந்த சம்பவம் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், தேர்தல் தோல்விக்கு பதிலடியாக, தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்டதா என்பதையும் புலனாய்வு செய்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.