ஆறுதலளிக்கும் முடிவு!
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மே 7ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மேற்பார்வைக் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மே 7ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மேற்பார்வைக் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் தலைமையிலான இந்தக் குழுவில், தங்கள் பிரதிநிதியாக யாரை நியமிப்பது என்பதை மட்டுமே இனி கேரளம் யோசித்தாக வேண்டும். இந்தக் குழுவைத் தவிர்க்கவே முடியாது.
இனியாவது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை அரசியலாக்குவதை கேரள அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அணை பாதுகாப்பாக இருக்கிறது; நீர் தேக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் நீதிமன்றம் அணையின் உறுதியை ஏற்கிறது என்கின்றபோது, "இது 119 ஆண்டுகளாகிவிட்ட பழைய அணை, நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதி' என்றெல்லாம் கேரள அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருப்பது அறிவீனம்.
வல்லுநர் குழுவில் இடம்பெற்ற கே.சி. தாமஸ் 1979இல் மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக இருந்தவர். அவர் அணை பலப்படுத்தப்பட்ட வேளையில் புதிய அணையைக் காட்டிலும் பலமாக இருக்கிறது என்று கூறியவரும் அவர்தான்.
Advertisement
அதுமட்டுமல்ல, இந்த அணை, புவியீர்ப்பு விசைக்கு இயைவான "கிராவிடி டேம்' என்பதால், அணைச்சுவரை மேலும் தடிமனாக்கும் பணிகளை 1979, 89, 91 ஆகிய மூன்று கால கட்டங்களில் கேரள அரசு சொன்னபடி செய்து முடித்துள்ளது தமிழக அரசு. இவ்வளவுக்குப் பின்னரும் அணையின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவிப்பது கேரள அரசின் உள்நோக்கத்தையே வெளிக்காட்டுகிறது.
அணையின் நீர் தேக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால், நீர்ப்பரப்பில் பல சுற்றுலாப் பகுதிகளும், உயர்குடியினருக்கான ஓய்வுவிடுதிகளும் மூழ்கக்கூடும். கேரளத்தின் தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அந்தப் புறம்போக்கு நிலங்களில் அமைத்துக் கொண்டிருக்கும் எஸ்டேட்டுகளும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மூழ்கக் கூடும்.
முல்லைப்பெரியாறு அணையில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. 1970இல் மின்உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, கேரளம் மின்மிகை மாநிலமாக இருந்ததால் அவர்கள் இதுகுறித்து வலியுறுத்தவில்லை. இப்போது கேரளத்தின் மின் தேவையும் அதிகரித்து விட்டிருப்பதால் அவர்களால் மொத்த மின் உற்பத்தியையும் தமிழகம் எடுத்துக் கொள்வதை சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன்னொரு அணையைக் கட்டி, இடுக்கி மின்நிலையத்துக்கு அந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ள கேரளம் விழைகிறது.
தமிழ்நாட்டுக்கு வழங்கும் நீருக்கு கூடுதல் விலை பெறலாம் என்கின்ற எண்ணமும் கூட கேரளத்தின் எதிர்ப்புக்குக் காரணமாக இருக்கக் கூடும். கேரள அரசு தமிழகத்துடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். தண்ணீருக்கு கூடுதல் பணம் வேண்டுமா? மின்சாரம் வேண்டுமா? அல்லது அதற்கான உரிமத்தொகை வேண்டுமா? எது வேண்டும் என்பதை கலந்து பேசித் தீர்வு காண்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதை விடுத்து அணை உடைந்துவிடும் என்று சொல்வது அர்த்தமற்றது.
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், கேரள எதிர்க்கட்சியான இடதுசாரிகளும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் நியாயமாக நடந்து கொள்ளாததற்குக் காரணம், அதன்மூலம் தமிழகத்தில் அவர்களுக்கு அரசியல் லாபம் இல்லை என்பதுதான். தமிழகத்துக்கு நியாயம் வழங்கி கேரளத்தில் தங்கள் செல்வாக்கை இழக்க அவர்கள் விரும்பவில்லை.
இப்போதைய பா.ஜ.க. அரசுக்கு கேரளத்தைவிட தமிழகத்தின் மீதுதான் அதிக நம்பிக்கை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் கேரளத்தைவிட தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் அதிகம் என்று தெளிவுபடுத்தி இருக்கின்றன. அதுகூட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரவை தமிழகத்திற்கு நியாயம் வழங்கி இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
தமிழகத்தில் தேசியக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் சாத்தியமே இல்லை என்பதுதான், தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகள்கூட நடுவண் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுவதன் முக்கியக் காரணம். மத்திய அரசில் அங்கம் வகித்த தமிழகக் கட்சிகளும் பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளையும் நலனையும் விட்டுக் கொடுத்ததும்கூட இன்னொரு காரணம்.
காவிரிப் பிரச்னையிலும் மத்திய அரசு இதே அணுகுமுறையைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.