தலையங்கம்

மோடியால் முடியும்!

பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்கும் நிலையில், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் இடமளிக்கப் போகிறாரா, இல்லை பாஜகவினர் மட்டுமே அவரது அமைச்சரவை சகாக்களாக இருக்கப் போகிறார்களா என்கிற கேள்வி,

ஆசிரியர்

பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்கும் நிலையில், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் இடமளிக்கப் போகிறாரா, இல்லை பாஜகவினர் மட்டுமே அவரது அமைச்சரவை சகாக்களாக இருக்கப் போகிறார்களா என்கிற கேள்வி, தேர்தல் முடிவுகள் வெளிவந்தது முதலே உலவத் தொடங்கிவிட்டது. அமைச்சரவையில் பங்கு பெற விரும்பவில்லை என்று லோக் ஜனசக்திக் கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, ஏனைய கூட்டணிக் கட்சிகளும் பாஜகவினர் மட்டுமே அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைய வழிகோலுவார்களேயானால், ஓரளவுக்குத் தனது கட்சிக்காரர்களை மோடி திருப்திப்படுத்தக்கூடும்.

கேரளம் மற்றும் ஒரு சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் பாஜக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், பிராந்தியப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் மோடிக்குச் சிக்கல் எழ வாய்ப்பில்லை. தனது கட்சியிலேயே உள்ள மூத்த தலைவர்களில் எத்தனை பேரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது, அவர்களுக்கு எந்தெந்த முக்கியமான துறைகளை ஒதுக்குவது என்பதில்தான் நரேந்திர மோடியின் சாமர்த்தியமும் சாணக்கியத்தனமும் எடை போடப்படும்.

அமைச்சரவை அமைப்பதுடன் பிரச்னை முடிந்துவிடாது. நரேந்திர மோடி இளைஞர்கள் மத்தியில் அதிமேலான எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறார். இந்தியாவில் 29 வயதுக்குட்பட்டவர்களில் 13.3 விழுக்காட்டினர் வேலை தேடி அலைபவர்கள். பட்டப்படிப்பு முடித்திருப்பவர்களில் மூன்றில் ஒருவருக்கு வேலை கிடைக்காத நிலைமை. முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களில் நகர்ப்புறங்களில் 26 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் 36.6 விழுக்காட்டினரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த பிரச்னை, விலைவாசி உயர்வு. நரேந்திர மோடியின் தாக்கம் அலையாக மாறியதற்குக் காரணம், நடுத்தர வர்க்கத்தினர் அவர்மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு. மோடி என்று பெயர் இருப்பதாலேயே அவர் ஏதாவது மோடி மஸ்தான் மாயாஜாலம் செய்து விலைவாசியைக் குறைப்பார், வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றுவார், ஊழலை ஒழித்து விடுவார் என்றெல்லாம் அதீத எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் வாக்களித்த மக்கள். இந்த அதீத எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டால், அதுவே கோபமாக மாறித் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி விடுவார்கள்.

இதையெல்லாம் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி நன்றாகவே உணர்ந்திருக்கிறார் என்பதை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த உரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துகள் நரேந்திர மோடி என்கிற மனிதரை மட்டுமல்ல, தலைவரையும் அவரது தன்னம்பிக்கையையும், தெளிவான சிந்தனையையும் அடையாளம் காட்டுகின்றன.

"எனக்குப் பதவி முக்கியமல்ல. நான் பதவியைவிடப் பொறுப்புக்கு முன்னுரிமை கொடுப்பவன்' என்கிற நரேந்திர மோடியின் கூற்று, பாஜக உறுப்பினர்களுக்கு "தயவு செய்து அமைச்சர் பதவிக்கு ஆலாய் பறக்காதீர்கள்' என்று விடுக்கப்பட்டிருக்கும் வேண்டுகோள்.

அமைய இருக்கும் புதிய அரசு ஏழைகளை, இளைஞர்களை, தாய்மார்களைப் பற்றிச் சிந்திக்கும் அரசாக இருக்கும். கிராமப்புறத்தவர்கள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் உணர்வைப் பிரதிபலிக்கும் அவர்களது அரசாக இருக்கும்' என்கிற மோடியின் அறிவிப்பு, அமைய இருக்கும் பாஜக ஆட்சி, முழுக்க முழுக்க "கார்பரேட்' நிறுவனங்களுக்கு சாதகமான ஆட்சியாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை போக்குகிறது.

"இதற்கு முன்னால் அமைந்த பல அரசுகள் அதனதன் வழியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பங்களித்திருக்கின்றன. அவர்கள் அதற்காகப் பாராட்டப்பட வேண்டும். அவர்களது நல்ல பணி எங்கள் ஆட்சியில் தொடரும்' என நரேந்திர மோடி கூறுவார் என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மாநில முதல்வர் என்கிற நிலையிலிருந்து தேசியத் தலைவராக அவர் உயர்ந்திருப்பதை இது உறுதி செய்கிறது.

"எல்லோருடனும், எல்லோருடைய வளர்ச்சிக்காகவும் என்பதுதான் எங்கள் அரசின் கோஷமாகவும், குறிக்கோளாகவும் இருக்கும்' என்கிற மோடியின் அறிவிப்புதான், அமைய இருக்கும் அவரது அரசின் மீதான நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் அடித்தளமிடுவதாக இருக்கும். சிறுபான்மையினரையும் அடித்தட்டு மக்களையும் அரவணைத்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல நரேந்திர மோடி விழைகிறார் என்பதைத்தான் இது தெரிவிக்கிறது.

நரேந்திர மோடியின் சிந்தனை செயல்வடிவம் பெற்றால், இந்தியா வல்லரசாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT