தலையங்கம்

முற்றுகிறது புற்று!

உலக அரங்கில் மக்கள்தொகையிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சீனாவுக்கு அடுத்தபடியான இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது என்பது மட்டும்தான் பலருக்கும் தெரியும்.

ஆசிரியர்

உலக அரங்கில் மக்கள்தொகையிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சீனாவுக்கு அடுத்தபடியான இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது என்பது மட்டும்தான் பலருக்கும் தெரியும். இன்னொரு பிரச்னையிலும் இந்தியா சீனாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், அதற்காக நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது; கூடாது!

"லான்செட் ஒன்காலஜி' என்கிற சர்வதேச மருத்துவப் பத்திரிகையில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரைகளும், புள்ளிவிவரங்களும் உலகிலுள்ள புற்றுநோயாளிகளில் மிக அதிகமானவர்கள் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆண்டொன்றுக்கு இந்தியாவில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதில் ஏறத்தாழ ஆறேழு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். புற்றுநோய் விஷயத்தில் இந்தியாவை சீனாவுடன் போட்டி போட வைத்துவிடுமோ என்கிற அச்சம் சமூக ஆர்வலர்களைப் பயமுறுத்துகிறது.

சீனாவின் நிலைமை நம்மைவிட மிகவும் மோசம். ஆண்டொன்றுக்கு முப்பது லட்சம் புதிய நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். அவர்களில் 22 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 2012ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, உலக அளவில் 82 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 70% அதிகரித்து 1.3 கோடி பேராக உயரக்கூடும் என்று தெரிகிறது.

இந்தியாவில், அடுத்த 10 ஆண்டுகளில் 1 கோடி 70 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதில் ஒரு கோடி 20 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதுதான் கேள்வி.

ஆண்களைப் பொருத்தவரை, நுரையீரல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். இதற்குக் காரணம் புகையிலைப் பழக்கம்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக, புகை பிடிப்பது, புகையிலை மெல்லுவது ஆகிய பழக்கங்கள்தான் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்க்குக் காரணமாக அமைகின்றன. இந்தியாவில் 35% பேர் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 14% புகை பிடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. நமது மக்கள்தொகையில் 28 கோடி பேர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.

புகையிலை நிறுவனங்களின் கோரப்பிடியிலிருந்து இவர்களை விடுவிக்கவும், புதிதாக யாரும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுக்கவும் அரசு முனைப்புடன் செயல்படாமல் இருப்பதுதான் இந்த அவலத்துக்குக் காரணம்.

ஊடகங்களில் புகையிலை தொடர்பான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், புகை பிடிப்பது நாகரிகத்தின், ஆண்மையின் அடையாளம் என்பது போன்ற தோற்றத்தை புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் மறைமுகமாக நிலைநிறுத்துகின்றன. மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட சில கடுமையான நடவடிக்கைகள் அடுத்து வந்த அமைச்சரால் தொடராமல் போனது இந்தியாவின் துரதிருஷ்டம்.

பெண்களைப் பொருத்தவரை, மார்பகப் புற்றுநோயும், கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயும்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. மார்பகப் புற்றுநோய் நகர்ப்புறங்களில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்குதான் கிராமப்புறங்களில் காணப்படுகிறது. இதற்குக் காரணம், நகர்ப்புற வாழ்க்கை முறைதான் என்று கூறப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் முழுமையானவை என்று சொல்லிவிட முடியாது. கிராமப்புற அளவில் மருத்துவமனைகளில் முனைப்புடன் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படாத நிலையில், மேலும் அதிகமானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். அரசு மருத்துவமனைகள் கிராமப்புற அளவில் முறையாகச் செயல்பட்டால் ஒழிய இந்த நிலைமையில், குறிப்பாக சிகிச்சையில் மாற்றங்களை ஏற்படுத்துவது கஷ்டம்.

இன்றைய நிலையில் 5,000 புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைதான் காணப்படுகிறது. புற்றுநோய்க்கான மருந்துகளும், மருத்துவமும் அதிகச் செலவாகும் நிலையில், தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிப்பதால் மட்டுமே உயிரிழப்பைத் தடுக்கலாம்; மருத்துவச் செலவுக்கான பொருள் விரயத்தையும் தவிர்க்கலாம்.

மத்திய, மாநில அரசுகள் உடனே விழித்துக்கொண்டு எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்னை இது. இதைத் தனியாரிடம் விட்டுவிட்டுப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க நினைக்கக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT