தாய்லாந்தில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, தாய்லாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன என்றாலும்கூட, அதைக் காரணம் காட்டி ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பதை உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கடந்த 20ஆம் தேதி ராணுவத் தளபதி ஜெனரல் பிரயுத் சன்ஓச்சா ஆட்சியைக் கைப்பற்றியதற்கு ஒரு விசித்திரமான விளக்கம் அளித்தார். தாங்கள் சட்ட - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், ஆட்சியைக் கைப்பற்றுவது தங்கள் எண்ணமல்ல என்பதும்தான் அவரது விளக்கம்.
தாய்லாந்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதொன்றும் புதிதல்ல. கடந்த 80 ஆண்டுகளில் நடந்திருக்கும் 18-ஆவது ராணுவப் புரட்சி இது. 1932-இல் மன்னராட்சி முறை மாற்றப்பட்டது முதல், அரசியல் நிலையின்மை போராட்டங்களால் ஏற்படுத்தப்படும் போதெல்லாம், ராணுவம் மூக்கை நுழைத்துவிடுவது வழக்கமாகிவிட்டது. இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது.
இதேபோல 2006ஆம் ஆண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் யிங்லக் ஷினவத்ராவின் சகோதரர் தக்ஷிண் ஷினவத்ரா அப்போது பிரதமராக இருந்தார். தாய்லாந்து கிராமப்புற ஏழைகள் மத்தியில் இப்போதும் தக்ஷிண் ஷினவத்ராதான் கதாநாயகன். வெளிநாட்டில் தலைமறைவாக வாழும் தக்ஷிண் ஷினவத்ரா தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகப் புனையப்பட்டவை என்று கூறினாலும், அவரது ஆட்சி நேர்மையான ஆட்சியாக இருக்கவில்லை என்பதை அவரது மனசாட்சியே கூறும்.
கடந்த ஆறு மாதமாக, "மக்கள் ஜனநாயக மறுமலர்ச்சிக் குழு' என்கிற பெயரில் தக்ஷிண் ஷினவத்ராவின் எதிர்ப்பாளர்கள், பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். யிங்லக் தனது சகோதரர் தக்ஷிணின் பினாமியாக ஆட்சி நடத்துகிறார் என்பதுதான் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம். சில வாரங்களுக்கு முன்னால், அரசியல் சட்ட அறமன்றம் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவும் அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒன்பது பேரும் பதவி விலக வேண்டும் என்று உத்தரவிட்டது முதல், நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
யிங்லக் ஷினவத்ராவின் "சர்வாதிகாரத்திற்கு எதிரான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி' ஆதரவாளர்களுக்கும், மன்னராட்சி முறையை ஆதரிக்கும் "மக்கள் ஜனநாயக மறுமலர்ச்சிக் குழு'வின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில்தான், ராணுவத் தளபதி ஜெனரல் பிரயுத் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறார். இதற்கு பெயரளவில் முதல் குடிமகனாகவும், மன்னராகவும் தொடரும் தாய்லாந்து மன்னர் பூமியால் அதுல்ல தேஜின் ஆதரவு இருக்கிறது என்பதுதான் எதிர்பாராத திருப்பம். தனது அதிகாரத்தைப் பறித்த ஜனநாயக ஆட்சி முறையை மன்னர் விரும்பாததில் வியப்பொன்றுமில்லை.
தாய்லாந்து நாட்டின் பிரச்னை சற்று விசித்திரமானது. ஊழலில் திளைத்து, பல முறைகேடுகளில் ஈடுபட்டவராக இருந்தாலும், இப்போதும் தாய்லாந்து நாட்டில் ஏழை எளிய மக்களும், கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகளும் கோடீஸ்வரர்களான ஷினவத்ரா குடும்பத்தின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். தக்ஷிண் ஷினவத்ராவின் ஆதரவாளர்கள் சிவப்பு சட்டைப் படையினர் என்று அறியப்படு
கிறார்கள்.
நகர்ப்புற மத்தியதர வகுப்பினரும், வியாபாரிகளும், ராஜகுடும்ப விசுவாசிகளும் தக்ஷிண் ஷினவத்ராவின் ஆட்சிக்கு எதிரான மனோபாவம் உடையவர்கள். மஞ்சள் சட்டைப் படையினர் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இவர்கள் ராணுவ ஆட்சியை வரவேற்பவர்கள். ராணுவ ஆட்சியில் நகர்ப்புறங்களின் வளர்ச்சி மட்டுமே முன்னுரிமை பெறுவதுதான் இவர்கள் ராணுவத்தை ஆதரிப்பதற்குக் காரணம்.
தாய்லாந்தில் ராணுவப் புரட்சி ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், இந்திய ராணுவம் தாய்லாந்தில் கூட்டு ராணுவப் பயிற்சிக்காகச் சென்றிருப்பது எதிர்பாராத நிகழ்வு. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ராணுவப்புரட்சியைக் கண்டித்திருக்கின்றன. அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றுவிட்டது.
தாய்லாந்தின் பிரச்னைக்குத் தீர்வு தேர்தலாக இருக்குமே தவிர, நிச்சயமாக ராணுவ ஆட்சியாக இருக்க முடியாது. தாய்லாந்தில் ஜனநாயகம் தழைக்க உதவ வேண்டிய கடமை இந்தியாவுக்கும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.