வரலாறு காணாத தேர்தல் தோல்வி எந்தவொரு அரசியல் கட்சியையும் நிலைகுலையச் செய்வது இயல்பு. ஆனால், காங்கிரஸ் கட்சி அந்தத் தோல்வியை எதிர்கொள்ளும் விதம்தான் ஆச்சரியப்பட வைக்கிறது.
காங்கிரஸ் கட்சி இந்திய ஜனநாயகத்தின் வேருக்கு வலிமை சேர்த்த பங்களிப்புகள் ஏராளம், ஏராளம். அப்படிப்பட்ட கட்சி, மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தவுடன், தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்வதை விடுத்து, பொறுப்பான எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுவது என்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க முற்படுவதை விட்டு, அமைச்சர் ஸ்மிருதி இரானி பி.ஏ. பட்டதாரியா, பி.காம். பட்டதாரியா, அவர் தனது துறையை நிர்வகிக்கும் திறமையுள்ளவரா இல்லையா போன்ற சில்லறைச் சில்மிஷச் சர்ச்சைகளில் ஈடுபடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
சுதந்திர இந்தியாவில் நடந்த 16 மக்களவைத் தேர்தல்களில், இந்த அளவுக்கு மோசமான தோல்வியைக் காங்கிரஸ் அடைந்ததில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தகுதி பெறுவதற்கான, மக்களவையின் மொத்த இடங்களில் 10 விழுக்காடு இடங்களைக்கூடப் பெற முடியாத அளவுக்குத் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பிரதமர் தனது அமைச்சரவையிலுள்ள 10 முக்கியமான, அனுபவசாலி அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து, "அரசியல் பிரச்னைகளுக்கான அமைச்சரவைக் குழு'வை ஏற்படுத்துவார். மன்மோகன் சிங் அரசின் இந்தக் குழுவில் இடம்பெற்ற 10 பேரில் ஆறு பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டனர். ப. சிதம்பரம் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிடவே இல்லை. போட்டியிட்ட ஆறு பேரில் ஐந்து பேர் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கும் 48 இடங்களில் 35 இடங்களை சோனியா காந்தி, ராகுல் காந்தி, கமல்நாத், வீரப்ப மொய்லி, ஜோதிராதித்யா சிந்தியா போன்று அவரவர் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்குப் பெற்றவர்கள் மட்டுமே வென்றிருக்கிறார்கள். 2009இல் 29% இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குவிகிதம் 2014இல் 19.3% ஆக சரித்திர வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அடுத்தக்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு, கேரளம், கர்நாடகம் போன்ற இரண்டு மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்களைப் பட்டியலிட முடியும் என்றாலும், மிக முக்கியமான காரணம் அந்தக் கட்சி முற்றிலுமாகத் தொண்டர்களை இழந்துவிட்ட, தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சியாக மாறிவிட்டிருப்பதுதான். அந்தத் தலைவர்களும் சரி, நேரு குடும்பத்தின் விசுவாசிகள் என்கிற நிலையில், கட்சித் தலைமைக்குத் துதிபாடுவதன் மூலம் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள்தான். இதுதான் காங்கிரஸைப் புற்றுநோயாக அரித்து அழித்துக் கொண்டிருக்கிறது.
தனது தோல்விக்கான நிஜக் காரணத்தை விட்டுவிட்டு, யார் மீதாவது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளும் போக்கு காங்கிரஸின் வழக்கமாகி விட்டிருக்கிறது. 1996இல் தோல்விக்கான காரணமாக நரசிம்மராவின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளைக் காரணம் காட்டிய காங்கிரஸ் தலைமை, இப்போது மன்மோகன் சிங் மீது பழிசுமத்த முற்படும் என்று நிச்சயம் நம்பலாம்.
நூறு நாள் வேலைத் திட்டம், உணவுக்கான உரிமைத் திட்டம், நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் போன்றவை எல்லாம், இலவச விநியோகம் போல எந்தவொரு ஆட்சிக்கும் கைகொடுக்காது என்பதுகூட நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது. அதேபோல, வாக்குவங்கி அரசியலின் காலம் முடிந்து போய், வளர்ச்சியை முன்னிறுத்தித் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே மக்கள் ஆதரவு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இருக்கும் என்பதையும் காங்கிரஸ் தலைமை உணர மறுக்கிறது. சிறுபான்மையினரை "மோடி, மோடி' என்று பயமுறுத்தி அவர்களது வாக்குவங்கியைக் குறிவைத்தது காங்கிரஸ். "அனைவருடனும், அனைவருடைய வளர்ச்சிக்காகவும்' என்கிற நரேந்திர மோடியின் கோஷத்துக்கு முன்னால் அந்தப் பூச்சாண்டி அடிபட்டுப் போய்விட்டது.
காங்கிரஸைப் புனர் நிர்மாணம் செய்வது என்பது எளிதானதாக இருக்கப் போவதில்லை. முறையான உறுப்பினர் சேர்க்கை, உள்கட்சித் தேர்தல் ஆகியவை ஒருவேளை அந்தக் கட்சியை முற்றிலும் அழிந்துவிடாமல் காப்பாற்றக்கூடும். நியமன முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, குறைந்தபட்சம் உடனடியாக காங்கிரஸ் செயற்குழுவுக்காவது தேர்தலை நடத்தினால், காங்கிரஸ் கட்சியை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து, பொது வார்டுக்குக் கொண்டு வரலாம். இல்லையென்றால், 1885 டிசம்பர் 28ஆம் தேதி ஆங்கிலேயரான ஆலன் ஆக்டேவியன் ஹூயூமால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் முடிவுரையை இத்தாலியரான சோனியா காந்தி எழுத நேரிடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.