தலையங்கம்

ராகுல்ஜி, அடுத்தது என்ன?

கடந்த ஞாயிறன்று தில்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டியிருந்த விவசாயிகள் பேரணி உண்மையிலேயே பிரம்மாண்டமானதுதான்.

ஆசிரியர்

கடந்த ஞாயிறன்று தில்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டியிருந்த விவசாயிகள் பேரணி உண்மையிலேயே பிரம்மாண்டமானதுதான். காங்கிரஸ் மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியின் பேரணியாக இருந்தாலும் "அழைத்து' வரப்படுவது என்பது வழக்கமாகிவிட்ட நிலையில், அந்தந்தக் கட்சியின் செல்வத்தையும் செல்வாக்கையும் பொருத்துக் கூட்டம் சேர்க்கப்படுவதும் புதிதல்ல.

தில்லியின் அண்டை மாநிலங்களான ராஜஸ்தானிலிருந்தும், ஹரியாணாவிலிருந்தும் ரயிலிலும், பேருந்திலும், லாரியிலும் அழைத்து வரப்பட்டிருந்த அந்த விவசாயிகளில் பலருக்கும் தாங்கள் எதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பதே கூடத் தெரியவில்லை என்பதை, அவர்களது தொலைக்காட்சிப் பேட்டிகள் வெளிச்சம் போட்டன. "நிலம் கையகப்படுத்துதல் மசோதா' விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, தனது தேர்தல் வெற்றிக்கு உதவி செய்த வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு வழங்குவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்படும் சட்டம் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அழைத்து வரப்பட்ட விவசாயிகளுக்கு உணர்த்துவதுதான் அந்தப் பேரணியின் நோக்கம் என்று யாராவது நினைத்தால் அவர்கள் ஏமாந்துவிடுவார்கள்.

அந்தப் பேரணியின் நோக்கம் நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்று தோன்றவில்லை. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு ஏற்பட்ட படுதோல்வியையும் தோல்வியின் பின்னணியில் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியற்றவர் என்று காங்கிரஸார் மத்தியிலேயே ராகுல் காந்தி பற்றி ஏற்பட்டிருந்த பரவலான கருத்தையும் மாற்றுவதற்காக நகர்த்தப்பட்டிருக்கும் விளம்பர உத்திதான் இது என்று தோன்றுகிறது. ராகுல் காந்தியின் மீதான அவநம்பிக்கையைப் போக்கி, காங்கிரஸ் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகத்தான் இந்தப் பேரணி தோற்றமளித்தது.

சில மாதங்களுக்கு முன்னால், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் காணாமல் போனார். மேலைநாட்டு ஊடகங்களில் ஏகப்பட்ட ஊகங்கள். தலைப்புச் செய்திகள். ஆனால், ராகுல் காந்தி காணாமல் போகிறார். காங்கிரஸ்காரர்கள் உள்பட யாருமே கவலைப்படவில்லை. யோசித்துப் பார்ப்போம். அத்வானியோ, லாலு பிரசாத் யாதவோ, சீதாராம் யெச்சூரியோ, உத்தவ் தாக்கரேயோ, ஒமர் அப்துல்லாவோ, மு.க. ஸ்டாலினோ காணாமல் போயிருந்தால் இந்தியாவே அல்லோல கல்லோலப் படாவிட்டாலும், நமது காட்சி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்காதா? ராகுல் காந்தியை யாருமே பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத்தான் அது உணர்த்துகிறது.

ராகுல் காந்தி ஓய்வெடுக்கப் போயிருக்கிறார் என்று காங்கிரஸ் தலைமை சமாதானம் சொன்னது. தலைவர்கள் ஓய்வெடுக்கப் போவதில் தவறில்லை. ஆனால், வருங்காலத்தில் பிரதமராக, கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மிகப்பெரிய அரசியல் கட்சியின் துணைத் தலைவர், நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதா ஓய்வெடுக்கப் போவார்? கொஞ்சமாவது பொறுப்புணர்வு வேண்டாமா?

ஆமாம் ராகுல் எங்கேதான் போனார்? கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தாய் ஏர்வேஸ் விமானத்தில் தில்லியிலிருந்து பாங்காக்கிற்கு அவர் சென்றதாக தாய்லாந்து நாட்டு நுழைவு இசைவு (விசா) குறிப்பிடுகிறது. அங்கிருந்து அவர் லண்டன் சென்றிருக்கிறார். அங்கே சில நாள்கள் தங்கிவிட்டு இத்தாலிக்குச் சென்று விட்டார். இத்தாலியில் தனது தாய் மாமனின் வீட்டில் ஒரு வாரமும், குடும்ப நண்

பரான சதீஷ் சர்மாவின் மகன் வீட்டில் சில நாள்களும் தங்கி இருந்து விட்டு, மியான்மர் நாட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே ஒரு மாதம் தங்கியிருந்து "விபாசனா' என்கிற தியானப் பயிற்சியில் ஈடுபட்டு மனப் புத்துணர்வு பெற்றிருக்கிறார். அங்கிருந்து கடந்த 16-ஆம் தேதி 56 நாள் வெளிநாட்டு வாசத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பி இருக்கிறார்.

அவர் திரும்பி வருவதும், அடுத்த மூன்றாவது நாளே தில்லியில் மிகப்பெரிய பேரணி கூட்டப்படுவதும் நிச்சயமாகத் திட்டமிடாமல் நடந்திருக்க முடியாது. சந்தையில் மதிப்பிழந்துவிட்ட பொருளை பரபரப்பான விளம்பரத்துடன் மறுபடியும் மக்களைக் கவர்ந்து விற்பனை செய்யும் முயற்சி போன்றதுதான், ராகுல் மாயமானது, மிகுந்த ஊடகப் பரபரப்புடன் திரும்பி வருவது, பிரம்மாண்டமான பேரணியைக் கூட்டுவது எல்லாமுமே என்று நினைக்கத் தோன்றுகிறது.

ராகுல் காந்தி திரும்பி வந்து விட்டார். பிரம்மாண்டமாகப் பேரணி நடத்தப்பட்டு விட்டது. மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கோட்டும் சூட்டும் போட்ட பெரு முதலாளிகளுக்கான அரசாக மத்திய அரசு செயல்படுகிறது என்றும் ராகுல் காந்தி ராம்லீலா மைதானத்தில் முழங்கினார். எல்லாம் சரி, அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுகிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, நேரு குடும்பத்தை விட்டால் அதற்குத் தலைமை ஏற்று நடத்த மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள, தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுள்ள இன்னொரு தலைவரில்லை. சோனியா காந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்ட மூத்த தலைவர்கள், ஆரம்பத்திலிருந்து தொடங்கப் போகிறேன் என்று கூறும் ராகுல் காந்தியின் அரசியல் அரிச்சுவடித்தனத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்பது சந்தேகம். மூத்த தலைவர்கள் ஒதுக்கப்பட்டாலோ, ஒதுங்கிவிட்டாலோ அமைப்பு ரீதியாகக் கட்சியை வழிநடத்தும் திறமை ராகுல் ஆதரவாளர்களுக்கு இருக்கிறதா என்பதும் கேள்விக்குறி.

பேரணி நடத்தியதால் மட்டும் காங்கிரஸ் வலுப்பட்டுவிடாது. அடுத்து என்ன செய்யப் போகிறார் ராகுல்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT