இணையதளங்களில் சிறார்களை ஆபாசக் காட்சிப் பொருளாகக் காட்டுவது தடுக்கப்பட வேண்டும் என்று கோரிய பொதுநல வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கடுமையான கருத்து தெரிவித்தது. அதைக் காரணம் காட்டி 857 ஆபாச இணையதளங்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. ஆனால், இதற்கு சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் எதிர்ப்பு வந்ததால் அந்தத் தடையை அரசு விலக்கிக் கொண்டது. சிறார்களை ஆபாசமாகக் காட்டும் இணையதளங்கள் மீதான தடை மட்டுமே தொடரும் என்றும், அத்தகைய இணையப் பதிவேற்றங்களைத் தவிர்க்க வேண்டியது சேவை நிறுவனங்களின் பொறுப்பு என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆபாச இணையதளங்களுக்கு அரசு தடை விதித்தபோது "தனிமனித உரிமை' பறிக்கப்படுவதாகப் பேசப்பட்டது. அச்சு ஊடகங்களில் எழுதப்பட்டது. காட்சி ஊடகங்களில் அனல் தெறிக்கும் விவாதங்கள் ஒளிபரப்பப்பட்டன. கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து தனி மனித அந்தரங்கத்தில் அரசு தலையிடாது என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிடும் நிலை உருவாகியிருக்கிறது. ஆபாச இணையதளங்களை முடக்குவது தனி மனித உரிமையில் தலையிடுவதாக ஆகுமா, ஆபாச இணையதளங்களை என்னதான் செய்வது, இது சரியா, தவறா என்பது முடிவற்ற விவாதத்தில் முடிகிறது.
ஆபாச இணையதளத்தை முடக்குவதை எதிர்ப்போர் வைக்கும் வாதம் இது: வாத்ஸôயனர் எழுதிய காம சூத்திரம் நூல் உலகம் முழுவதும் பாலியல், உளவியல் கல்விக்கான அறிவியல் நூலாகக் கருதப்படும் நிலையில், இந்தியாவில் ஏன் ஆபாசப் படங்களைத் தடுக்க வேண்டும்? கோயில் கோபுரங்களில் உள்ள சுதை, சிற்பங்களில் ஆபாச வடிவங்கள் இருக்கத்தானே செய்கின்றன என்கிற வாதங்களை முன்வைக்கிறார்கள்.
மதுவைவிட அதிக போதை தருவது காமம். மதுவை உண்டால்தான் போதை. காமம் அப்படியல்ல. "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு' என்கிறார் வள்ளுவர். "குன்றேறி ஒளிப்பினும் காமம் சுடுமே நீரில் குளிப்பினும் காமம் சுடுமே..' என்கிறது ஒரு பாடல்.
அன்றைய தினம் காமத்தை, பாலியலை விழைந்தோர் அதனை வீட்டுக்கு வெளியே சென்று தேடி அடையும் நிலைமை இருந்தது. இன்றைய தொழில்நுட்பம் அதை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இதுதான் இன்றைய சிக்கலே.
ஆபாச இணையதளங்கள் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே என்ற கட்டுப்பாடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆபாச இணையதளங்களைத் திறக்க, ஒருவர் தனது இணைய முகவரி, கடவுச்சொல்லைப் பதிவு செய்தால், சேவை நிறுவனத்தின் தற்சோதனைக்குப் பிறகே இந்த ஆபாச இணையதளம் திறக்கப்பட வேண்டும்.
ஆனால், பல்வேறு ஆபாசத் தளங்கள் எந்தத் தடையும் இல்லாமல் திறக்கின்றன. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத நிலை உள்ளது. கூகுளில் அதிகம் தேடப்படும் நபர் இந்தியாவில் யார் தெரியுமா? கனடாவின் ஆபாசப் பட நடிகையும், இன்று இந்தியத் திரைப்படக் கவர்ச்சி நடிகையுமான சன்னி லியோன். இந்தியாவைப் பொருத்தவரை இணையதளங்களில் இளைஞர்கள் மிக அதிகமாகத் தேடுவதும், பார்ப்பதும் இதுபோன்ற ஆபாசப் படங்களைத்தான் என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மை.
இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, ஆபாசப் புத்தகம், ஆபாசப் படம், ஆபாசத் திரைப்படம் தயாரிப்பது, அச்சிடுவது, வெளியிடுவது குற்றம். தண்டனை உண்டு. ஆனால், ஆபாசப் புத்தகத்தைப் படிப்பது, படம் பார்ப்பது தனிநபர் அந்தரங்கம். இந்த "அந்தரங்க'த்துக்காக, ஒரு கும்பல் திருட்டுத்தனமாக ஆபாசப் படம் தயாரிக்கிறது. வெளிநாடுகளில் அரசு அனுமதியுடன் எடுக்கப்படும் ஆபாசக் காட்சித் தொகுப்புகளைவிட, இந்தியாவில் ரகசிய கேமராவில் படம் பிடிக்கப்படும் ஆபாசக் காட்சித் தொகுப்புகளே அதிகமாகக் கிடைக்கின்றன. அந்தரங்கம் புனிதமானது என்பது மிகச் சரி. இன்னொருவர் அந்தரங்கத்தை இவர்கள் அந்தரங்கமாகப் பார்ப்பது எந்த வகையில் புனிதம்?
தடை செய்தால் தனி மனித அந்தரங்கத்தில் அரசு தலையிடுவதாக எதிர்க்கிறார்கள். தடை செய்யாவிட்டால், இந்த ஆபாசம் தனி மனித வாழ்க்கையில் நுழைகிறது. அதிலும் குறிப்பாக, வளர்இளம் பருவத்து மாணவர்களின் வாழ்க்கையில் நுழைந்து சீரழிக்கிறது.
வகுப்பறையில் மாணவ - மாணவியர் தங்கள் செல்லிடப்பேசியில் ஆபாசப் படக் காட்சித் தொகுப்புகளைப் பார்த்ததால் தண்டிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. பள்ளிகள் மட்டுமல்ல, இதற்கு அலுவலகம், வீடு என்று விதிவிலக்கே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதெல்லாம் ஏன்? சில ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் சிலர் தங்கள் செல்லிடப்பேசியில் அவை நடக்கும்போதே ஆபாசப் படங்கள் பார்த்ததாகத் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது நினைவிருக்கலாம்.
சிறார்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் படங்களைப் பதிவிடும் இணையதளங்களை மட்டும் முடக்கினால் போதுமா? சிறுவர்கள் அதைப் பார்க்கும் வாய்ப்புகளை முடக்க வேண்டாமா? இள வயதுத் திருமணம் தவறு என்றால், இள வயதினருக்கு ஆபாசக் காட்சிகள் தடையின்றிக் கிடைக்கப் பெறுவது மட்டும் சரியானதாகுமா?
வளர் இளம் பருவத்தினருக்கான எச்சரிக்கைப் பாடலாக, "பருவ மழை பொழிய பொழிய பயிர் எல்லாம் செழிக்காதோ.. இவள் பருவ மழையாலே வாழ்க்கை பாலைவனமாகியதே...' என்று ஜெயகாந்தன் எழுதியிருப்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். தனி மனித உரிமை வருங்கால சந்ததியினரை பாதிக்குமேயானால், அதை எப்படி ஏற்றுக் கொள்வது? 18 வயது நிரம்பாதவர்களுக்கு இணையத்திலும், பொதுவாழ்விலும் ஆபாசக் காட்சிகள் கிடைக்காதபடி செய்வது அவசியம். அவசியம்.. அவசியம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.