நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான டிசம்பர் 23-ஆம் தேதியன்று மக்களவை அமளியால் முடங்கியது. மாநிலங்களவையில் எந்த விவாதமும் இல்லாமல் மூன்று மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
வர்த்தக நீதிமன்றங்கள் மற்றும் மேல்முறையீடு மன்றங்கள் மசோதா, சமரசத் தீர்வுகள் திருத்த மசோதா, அணு மின்னாற்றல் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் மீதும் எந்தக் கட்சியும் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து விவாதிக்கவே இல்லை. இடதுசாரிகள்கூட இந்த மசோதா குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருந்ததுதான் ஆச்சரியம்.
குடிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்களில் குவியும் கணிசமான வழக்குகளை இனிமேல் அமைக்கப்பட இருக்கும் வர்த்தக நீதிமன்றங்கள் விசாரிக்கும். இதனால், அதிக வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதேபோன்று, சமரசத் தீர்வுகள் திருத்தச் சட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அல்லது அரசுக்கும் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். இந்த இரண்டு மசோதாக்களும் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதில் தவறில்லை. ஆனால், அணுமின் ஆற்றல் திருத்த மசோதாவும் விவாதம் இல்லாமல் நிறைவேறியது என்பதுதான் வியப்பை ஏற்படுத்துகிறது.
தற்போதைய அணுமின் ஆற்றல் சட்டத் திருத்தத்தின்படி, இந்தியாவில் அணுமின் உற்பத்தி, அதன் பயன்பாடு, கட்டுப்பாடு, மேம்பாடு அனைத்துக்கும் முழு உரிமை பெற்றிருப்பது இந்திய அரசு மட்டுமே. அணுமின் நிலையங்களை அரசு நிறுவனம் மட்டுமே நடத்த முடியும். அதன் பங்குகள் 51%-ஆக இருக்கும். இந்திய அணுமின் கழகம் (என்.இ.பி.சி.) மட்டுமே அணுமின் நிலையங்களை நடத்த முடியும் என்பதில் இந்த சட்டத் திருத்தம் மாறுதலைச் செய்கிறது.
இந்தியாவில் அணுமின் உற்பத்தி நிலையங்கள் 51% பங்குகளைப் பெற்ற பொதுத் துறை நிறுவனமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தச் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு பங்குகளை வேறு அரசுத் துறை நிறுவனங்களும் கூட்டு நிறுவனம் என்பதாக வைத்திருக்கலாம். உதாரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அரசுத் துறை பங்குகள் 51% இருக்க வேண்டும். இதில் இந்திய அணுமின் கழகத்துடன், தமிழ்நாடு மின்சார வாரியம் கூட்டாக சேர்ந்து 20% அல்லது 30% பங்குகளை வைத்து, கூட்டு நிறுவனமாக செயல்பட முடியும். பங்குகளின் விகிதத்தின்படி அணுமின் நிலைய இயக்குநர்கள் குழு அமைக்கப்படும்.
அணுமின் உற்பத்தி மற்றும் அணுமின் உற்பத்திக்கான பொருள்கள் இறக்குமதி அல்லது ஏற்றுமதி என அனைத்து உரிமங்களும் அந்த அணுமின் நிலையம், பொதுத் துறை நிறுவனமாக இருக்கும் வரைதான் உண்டு. பொதுத் துறை நிறுவனமாக செயல்பட இயலாத நிலையில், மின் உற்பத்தி மற்றும் அணுமின் கருவிகள் தயாரிப்பு, இறக்குமதி இவற்றுக்கான அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்கிறது சட்டம். சட்டத்தில் இப்படி ஒரு திருத்தம் கொண்டு வருவதற்குக் காரணம் இருக்கிறது. 49% பங்குகளைப் பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள், பங்குதாரர்களாக இருக்கும் சில அரசுத் துறை நிறுவனங்களைத் தங்களுக்கு ஆதரவாக வைத்துக்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபட்டால், மத்திய அரசு தனது பங்குகளை விலக்கிக்கொண்டு, உரிமத்தை முடக்கி விடுவோம் என்று எச்சரிக்கவே இந்த விதிமுறை. இந்தத் திருத்தம் தொலைநோக்குப் பார்வையுடன் இயற்றப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
21 அணுமின் நிலையங்கள் மூலம் 5,680 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றுள்ள இந்திய அரசு, தற்போது மேலும் 10 அணுமின் நிலையங்களைக் கட்டி முடிக்கும் தறுவாயில் இருப்பதால், கூடுதலாக 7,700 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் (மொத்தம் 13,380 மெகாவாட்) அதிகரிக்கும். இதுதவிர, இந்தியப் பிரதமரும் அமைச்சர்களும் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷியா என எந்த நாட்டிற்குப் போனாலும், அணுமின் தொடர்பான ஓர் ஒப்பந்தம் இல்லாமல் திரும்புவதே இல்லை.
நிலக்கரி பயன்பாடு, பசுமைஇல்ல வாயு உற்பத்திக்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருப்பதால், அனல்மின் நிலையங்களைவிட, அணுமின் நிலையங்களுக்கே அதிக முன்னுரிமை தரப்படுகிறது. அணுமின் நிலையங்களுக்கு அதிகமான எதிர்ப்பு தெரிவிப்பவை மாநில அரசுகள்தான். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருப்பதும் மாநில அரசுகளே. மாநில மின்வாரிய அமைப்புகளையும் இத்திட்டத்தில் பங்குதாரர்களாக மாற்றுவதன் மூலம், அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான எதிர்ப்புகளைக் குறைத்துவிட முடியும். அதனால்தான், பொதுத் துறை நிறுவனம் என்பது அரசு அல்லது அரசுத் துறைகளின் பங்குகளை 51% வைத்திருக்கும் நிறுவனம் என்கிற சொற்றொடரை இந்தச் சட்டத்தில் புகுத்தி இருக்கிறார்கள்.
அணுஉலை விபத்து சேதத்தில் குடிமை பொறுப்பேற்பு சட்டத்தின்படி ரூ.1,500 கோடி காப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் தொடங்கியுள்ளது. இந்த காப்பீடு திட்டம் மற்றும் இதற்கான சந்தா ஆகியவற்றுக்கு மத்திய அரசின் அணுமின் ஆற்றல் துறை (டி.ஏ.இ.) மட்டுமே பொறுப்பா? அல்லது இந்திய அணுமின் கழகத்துடன் கூட்டு அமைத்து பங்குகள் வாங்கப்போகும் அரசுத் துறை நிறுவனங்கள் எத்தகைய பொறுப்பேற்கும்? இதுகுறித்து சட்டத் திருத்தத்தில் தெளிவு இல்லை.
இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் சில கேள்விகள் கேட்டிருக்கலாம். இனி கேட்க முடியாது. முக்கியமான மசோதாவை விவாதமே இல்லாமல், எதிர்க்கட்சிகள் கேள்வியும் கேட்காமல் நிறைவேற்ற வழிகோலியிருக்கிறார்கள். விவாதத்திற்கே இனி வழியில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.