தலையங்கம்

அமெரிக்க அடாவடித்தனம்!

சிக்கன நடவடிக்கையாக, மேற்கண்ட விசாக்களில் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்வார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா, பாரீஸ் புவிவெப்ப மாநாடு குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசியபோது, இந்த விவகாரம் குறித்து மோடி பேசியதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்தது. இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதாவை மாற்றுவது அத்தனை எளிதல்ல.

ஆசிரியர்

அமெரிக்காவில் பணியாற்ற ஊழியர்களை அனுப்பும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய எச்1பி மற்றும் எல்1 விசா (பணி அனுமதி) கட்டணத்தை உயர்த்த அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
 அதாவது, குறைந்தபட்சம் 50 பணியாளர்களை கொண்டுள்ள நிறுவனத்தில், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்த (எச்1பி), இடமாறுதல் அளிக்கப்பட்ட (எல்1) பணியாளர்களாக இருப்பின் அவர்களது விசா கட்டணம் 2016 முதல் எச்1பி விசா பெற 4,000 அமெரிக்க டாலர்களும் (முன்பு 2,000 டாலர்), எல்1 விசா பெற 4,500 அமெரிக்க டாலர்களும் (முன்பு 2,250 டாலர்) ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
 இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ.6,600 கோடி) வருவாய் கிடைக்கும். இந்த வருவாயில் முதல் ஒரு பில்லியன் டாலர் 9/11 இழப்பீடு மற்றும் நல்வாழ்வு நிதியில் சேர்க்கப்படும். தொடரும் வருவாய் கருவூலத்தில் சேர்க்கப்படும். இந்த நடைமுறை அடுத்த 10 ஆண்டுகளுக்கு (முன்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் கட்டணத்தை மாற்றி அமைத்தார்கள்) தொடரும்.
 இதனால், தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள விப்ரோ, டி.சி.எஸ். உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். சிக்கன நடவடிக்கையாக, மேற்கண்ட விசாக்களில் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்வார்கள்.
 அமெரிக்க அதிபர் ஒபாமா, பாரீஸ் புவிவெப்ப மாநாடு குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசியபோது, இந்த விவகாரம் குறித்து மோடி பேசியதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்தது. இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதாவை மாற்றுவது அத்தனை எளிதல்ல.
 ஏற்கெனவே, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, அவரது அமெரிக்கப் பயணத்தின்போது, எச்1பி விசா பெறுவோரின் மனைவி அல்லது கணவனும் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி அளிக்கும் முடிவை அமெரிக்கா அறிவித்தது.
 இந்த விசாக்கள் பெற்றால் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளுக்கு பணியாற்றலாம். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு பெறலாம். இவ்வாறு விசா பெற்றுச் செல்வோர் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 85%, சீனாவின் பங்கு 5%.
 எல்1 விசா என்பது, ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது பணியாளரை அமெரிக்காவுக்கு இடமாறுதல் செய்கிறது என்பதே. ஆகவே, அந்தப் பணியாளரின் படிப்பு, தொழில்திறன் எதைப் பற்றியும் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பணியாளருக்கு ஓர் அமெரிக்கக் குடிமகனுக்கு எத்தகைய ஊதியம் வழங்கப்படுமோ அதே அளவு அல்லது அதிகமாக வழங்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை. ஆகவே, இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் பல கணினி பொறியாளர்களும் எல்1 விசாவில் அனுப்பப்படுவதே அதிகம்.
 எச்1பி விசா என்பது முழுக்க முழுக்க ஒரு நபரின் தொழில் திறன் சார்ந்தது. அவரது படிப்பு, அவர் எந்தத் தொழிலுக்கு அனுப்பப்படுகிறாரோ, அந்தத் தொழிலில் அவரது திறமைக்கான அனுபவச் சான்று என நிபந்தனைகள் இருப்பதுடன், அந்தப் பணித்தகுதிக்கு ஓர் அமெரிக்கர் என்ன சம்பளம் பெறுவாரோ அதே ஊதியம் அவருக்கு அமெரிக்காவில் வழங்கப்பட்டாக வேண்டும். இந்த விசாவிலும் பன்னாட்டு நிறுவனங்கள் பணியாளர்களை அனுப்புகின்றன. ஆனால், ஊதியம் கணக்கில் மட்டுமே இருக்கும், தரப்படுவதில்லை.
 இந்தியர்களை அதிக அளவு இவ்வாறாக இடமாறுதல், பணிபுரிதல் விசாக்களில் அனுப்புவதன் மூலம் இந்த நிறுவனங்கள், அமெரிக்காவில் மிகக் குறைந்த கூலிக்கு இந்தியர்களை அனுப்பி, மேலும் லாபம் சம்பாதிக்கின்றன என்பதே அமெரிக்கர்களின் கருத்து. இத்தகைய நடைமுறையால், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பையும் தட்டிப் பறிக்கிறார்கள் என்பதே, இத்தகைய விசாக்களை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடைய குற்றச்சாட்டு. இதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது.
 2014-ஆம் ஆண்டு பணிஅனுமதி பெற்றுச் சென்ற 3.15 லட்சம் பேரில் 2.20 லட்சம் பேர் இந்தியர்கள். இதில் 82,263 பேர் முதல்முறையாக விசா பெற்றவர்கள். 1,38,023 பேர் தொடர்ந்து பணியாற்ற விசா பெற்றவர்கள்.
 அமெரிக்காவில் இது தேர்தல் நேரம். புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்கு பிரச்னையாக மாறி வருகிறார்கள் என்ற முழக்கம் இன்று அமெரிக்க வேட்பாளர்களுக்கு அதிக மதிப்பீட்டை, கவனத்தைத் தருகிறது. ஆகவே, டொனால்டு டிரம்ப் போன்றோர் பேச்சுக்கு ஆதரவு கிடைக்கவும் செய்கிறது. சக் கிரேஸ்லி, டிக் டர்பின் உள்ளிட்ட செனட்டர்கள் இந்திய நிறுவனங்களை மட்டும் குறிவைத்துக் கடுமையான தண்டனை வழங்கும் விதத்தில் சட்டமியற்ற முற்பட்டிருக்கிறார்கள்.
 அமெரிக்காவின் பலமே, ஏனைய நாடுகளின் திறமைசாலிகளை பயன்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அமெரிக்காவில் வேலைக்குச் செல்பவர்கள் அவர்களது அறிவுசார் பங்களிப்பாலும், உழைப்பாலும் அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறார்களே தவிர, பாரமாக இருப்பவர்கள் அல்ல. அதேபோல, வேலைவாய்ப்பு என்பது எந்தவொரு நாட்டுக்கான, பகுதிக்கான தனியுரிமையும் அல்ல.
 ஊர் உலகுக்கெல்லாம், தாராளமயமாக்கலைப் போதித்து, போட்டியின் மூலம்தான் பொருளாதாரம் மேம்படும் என்று தெரிவிக்கும் அமெரிக்கா, தனக்கு என்று வரும்போது வேலைவாய்ப்பு உள்பட அனைத்தையும் பொத்தி மூடிப் பாதுகாத்துக் கொள்வது என்ன நியாயம்? தனக்கு மட்டும் நீதி, மற்றவர்களுக்கு அநீதி என்பதுதான் அமெரிக்காவின் பொதுவிதி போலிருக்கிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT