ஜனவரி 1-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு சோதனை அடிப்படையில் தில்லி அரசு நடைமுறைப்படுத்தவிருக்கும் வாகனக் கட்டுப்பாடு திட்டம் எதிர்பார்த்த பலனைத் தராது என்று இப்போதே பேச, எழுதத் தொடங்கிவிட்டார்கள். வாரத்தில் ஒரு நாள் மகிழுந்துகளுக்கு ஓய்வு என்கிற திட்டம் தரக்கூடிய முழுப்பலனை தற்போதைய வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் அடைவது கடினம்.
ஒற்றைப்படை எண் கொண்ட மகிழுந்துகள் ஒற்றைப்படை தேதியிலும், இரட்டைப்படை எண் கொண்டவை இரட்டைப்படைத் தேதியிலும் மட்டுமே இயங்க வேண்டும் என்றும், இதனால் தில்லியின் சாலைகளில் மகிழுந்துகளின் எண்ணிக்கை பாதியாகக் குறையும் என்றும் தில்லி முதல்வர் கேஜரிவால் அறிவித்தபோது, இதற்கு தடை விதிக்க நீதிமன்றமும்கூட மறுத்துவிட்டது. என்ன செய்தாகிலும் தில்லியின் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக இருந்தது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தற்போது தில்லி அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த வாகனக் கட்டுப்பாட்டில் இருசக்கர வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் தில்லியில் ஏற்படுத்தும் காற்று மாசு 31%. ஆனால், அவர்களுக்கு வாகனக் கட்டுப்பாடு இல்லை. மேலும், ஒரேயொரு பெண் ஓட்டுநர் அல்லது 12 வயதுக்குள்பட்ட குழந்தையுடன் பெண் ஓட்டிச் செல்லும் மகிழுந்துகளுக்கும், அவசர மருத்துவ காரணங்களுக்காக செல்லும் மகிழுந்துகளுக்கும் விதிவிலக்கு அளித்திருப்பதும், ஞாயிற்றுக்கிழமையில் எந்தத் தடையும் கிடையாது என்பதும் இத்திட்டத்தை முற்றிலுமாக நீர்த்துப்போக வைத்துவிட்டன.
வாகனக் கட்டுப்பாடு அமலுக்கு வரும்போது, மக்களுக்கு இடையூறு இல்லாத போக்குவரத்து வசதியை அளிக்க, தில்லியில் இருக்கும் சுமார் 14,000 தனியார் பேருந்துகளை, தில்லி போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயக்குவதற்கு முதல்வர் கேஜரிவால் அழைப்பு விடுத்தார். 6,000 பேருந்துகள் தேவை. ஆனால், வெறுமனே 600 தனியார் பேருந்துகள் மட்டுமே இத்திட்டத்துக்கு பதிவு செய்துள்ளன.
தில்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாகன எண்ணிக்கை பெருக அனுமதித்துவிட்டு, தற்போது வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த புதுப்புது வழிகளைத் தேடும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போது தில்லியில் 28 லட்சம் மகிழுந்துகள், 57 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 79,000 வாடகை மகிழுந்துகள், 81,000 ஆட்டோக்கள் உள்ளன. ஆய்வுப் புள்ளிவிவரப்படி 33 லட்சம் குடும்பங்களில் 21% குடும்பங்களில் மகிழுந்துகள் வைத்திருக்கிறார்கள். 70% குடும்பங்களில் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன.
மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மூன்று மாநகரங்களின் மொத்த வாகன எண்ணிக்கையைவிட, தில்லியில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். தில்லியில் நான்கு பேருக்கு ஒரு மகிழுந்து, மூன்று பேருக்கு ஓர் இரு சக்கர வாகனம் என்கிற கணக்கில் வாகனங்கள் இருக்கின்றன. பொதுப்போக்குவரத்து அனைத்தும், பேருந்துகள், வாடகை மகிழுந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்துமே இயற்கை எரிவாயுவில்தான் இயங்க வேண்டும் என்கிற சட்டம் இருந்தும்கூட, காற்று மாசு கட்டுப்பாட்டில் இல்லாத நிலைமை.
இந்தியச் சாலைகளை இருமடங்கு அகலமாக்குதல் சாத்தியமில்லை. ஆனால், மகிழுந்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது சாத்தியமே. ஆகவேதான், மகிழுந்துகளுக்கு ஒருநாள் ஓய்வு, ஒற்றைப்படைத் தேதியில் ஒற்றைப்படை எண் கொண்ட மகிழுந்துகள் என்கிற திட்டம் எல்லாமும் சோதனை அடிப்படையில் செய்து பார்க்கிறார்கள். ஆனால், மகிழுந்துகளின் எண்ணிக்கையை விற்பனை நிலையிலேயே கட்டுப்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்படுவதே இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வாக அமையும்.
ஒருபுறம் வங்கிகளும், தனியார் நிதிநிறுவனங்களும் மகிழுந்துகளும், இருசக்கர வாகனங்களும் வாங்குவதற்கான கடனுதவியை வாரி வழங்குகின்றன. இப்படிக் கடனுதவி வழங்குவதில் மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, அரசேகூட அரசு வங்கிகள் மூலம் ஊக்கப்படுத்துகிறது. சாலைகளுக்குத் தகுந்தபடி மோட்டார் வாகனத் தயாரிப்பு இருக்க வேண்டும் என்கிற அக்கறை கொஞ்சமும் இல்லாமல், மோட்டார் வாகனத் தொழிலின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசின் குறுகிய கண்ணோட்டம்தான் இதற்குக் காரணம். இந்தியாவில் தயாரிக்கப்படும் மகிழுந்துகளை ஏற்றுமதி செய்வதில் அக்கறை காட்டாமல், இந்தியாவில் விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் தவறான நடவடிக்கைதான் இதற்குக் காரணம்.
சொந்த வீடு, வாடகை வீடு எதுவாக இருந்தாலும் மகிழுந்து நிறுத்தும் இடம் இல்லையென்றால் அந்த மகிழுந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பதிவு செய்யாது என்ற நிலை உருவானால், மகிழுந்துகள் வாங்குவோர் எண்ணிக்கை குறையும். மகிழுந்து நிறுத்த இடம் இல்லை என்றால், அவர் மகிழுந்து வாங்க இயலாது என்ற நிலை இந்தியாவில் இல்லை. சென்னை பெருமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, சேதமடைந்த மகிழுந்துகள் அனைத்தும் தெருவில் நிறுத்தப்பட்ட மகிழுந்துகளே! வீட்டுக்குள் இடமில்லாமல் இரவில் தெருவில் நிறுத்தப்படும் மகிழுந்துகளுக்கும், கட்டணப் பகுதியில் நிறுத்தும் மகிழுந்துகள்தவிர, மற்ற பொது இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மகிழுந்துகளை நிறுத்தினால் அபராதம் விதிப்பதுமான நடவடிக்கைகளால் பாதிக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் பெருநகரை விட்டுத் தானே வெளியேறிவிடும்.
குறைந்த கட்டணத்தில் நிறைந்த வசதிகளுடன் அதிக அளவில் பொதுப்போக்குவரத்தை உறுதிப்படுத்துவது மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.