நோயாளிகளின் மருத்துவச் செலவைக் குறைக்கும் செயல்பாடுகளில் மத்திய சுகாதாரத் துறை ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி சில பயனுள்ள மாற்றங்களை செய்து வருகிறது. அண்மையில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கான 18 மாத்திரைகளை விலைக்கட்டுப்பாட்டு சட்டத்துக்குள் கொண்டுவந்து, அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்தது. தற்போது இதய அறுவைச் சிகிச்சையில் தமனியில் பொருத்தப்படும் வலைக்குழாய் (STENT) விலையை அதிகபட்சமாக ரூ.28,000 என நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
தமனியில் கொழுப்பு சேர்ந்து, இரத்த ஓட்டம் தடைபடுவதைத் தவிர்க்க, குழாய்போலச் சுருட்டப்பட்ட உலோக வலை, அறுவைச் சிகிச்சை மூலம் தமனியில் பொருத்தி வைக்கப்படுகிறது. இந்த வலைக்குழாய்க்கு விலையாக இந்தியத் தயாரிப்பு என்றால் ரூ.30,000, இறக்குமதி செய்யப்பட்ட வலைக்குழாய் என்றால் ரூ.1.20 லட்சம் வரை நோயாளிகளிடமிருந்து பெறப்படுகிறது. இதுதவிர, அறுவைச் சிகிச்சை மற்றும் மருத்துவமனைச் செலவுகள் தனி.
நோயாளிகளிடம் இத்தகைய வலைக்குழாய் பற்றி மருத்துவமனைகள் விவரிக்கும் தொனியே, அந்த நோயாளி இறக்குமதி செய்யப்பட்ட வலைக்குழாயைத் தேர்வு செய்ய வைத்துவிடும். இதுபோன்று தமனியில் பொருத்தப்படும் வலைக்குழாயில் மோசடிகள் நடைபெறுவதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. சில நிகழ்வுகளில் இறக்குமதி செய்யப்படும் வலைக்குழாய்க்கான கட்டணத்தைப் பெற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே தரத்திலான விலைக் குறைவான வலைக்குழாய் பொருத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு. தமனியில் வலைக்குழாய் பொருத்தும் சிகிச்சையில் நோயாளிகள் ஏமாற்றப்படுவதும் அல்லது தேவையின்றி அதிகப் பணத்தை இழப்பதும் கூறப்படும் புகார்களில் சில.
தேசிய சுகாதார நடைமுறைகள் ஆதார மையத்தின் (நேஷனல் ஹெல்த் சிஸ்டம் ரிசோர்ஸ் சென்டர்) வல்லுநர்கள் குழு, சாதாரண வலைக்குழாய் ரூ.19,000, மருத்துவகுணமுள்ள வலைக்குழாய் ரூ.28,000 என அதிகபட்சமாக விலை நிர்ணயிக்கலாம் என்று தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. ஜனவரி இறுதிக்குள் இந்த விலை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதே இதற்கு வழக்கம்போல விலைக் குறைப்பு என்கிற பெயரில் தரத்தில் சமரசம் கூடாது என்று எதிர்க்குரல் எழத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் செய்யப்படும் தமனி வலைக்குழாய் தரமானவைதான். இந்தியா-அமெரிக்கா உடன்பாட்டின்கீழ் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஏற்றுமதித் தரத்தில் வலைக்குழாய் தயாரிக்கப்படுகிறது. இந்திய இதய அறுவைச் சிகிச்சை கழகத்தின் புள்ளிவிவரப்படி, சிகிச்சையில் பொருத்தப்படும் 10 வலைக்குழாய்களில் நான்கு இந்திய தயாரிப்பு ஆகும்.
இதேபோன்று எலும்பு, மூட்டு, இடுப்பு அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உலோகத் தகடுகளுக்கும் விலை நிர்ணயம் செய்வது மிகவும் அவசியம். இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் இறப்போர் விவரங்கள் மட்டுமே அதிக கவனம் பெறுகின்றன. ஆனால், கை,கால்கள் முறிந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளில் 99 சதவீதம் பேருக்கு உலோகத் தகடுகளை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துவதுதான் வழக்கமாக இருக்கிறது. இதற்கான உலோகத் தகடுகள் விலையும்கூட மிக மிக அதிகமாக உள்ளது.
மூட்டு அறுவைச் சிகிச்சையில் பொருத்தப்படும் உலோக இணைப்புகள் ரூ.80,000 வரை ஆகிறது. அதேபோன்று, இடுப்பு எலும்பு முறிவுக்காக பொருத்தப்படும் தகடுகளுக்கு ரூ.1.25 லட்சம் வரை ஆகிறது. இவற்றை உள்நாட்டிலேயே சிறப்பாகத் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கும் விலையை அரசே நிர்ணயிக்க முடியும்.
இதேபோன்று, தற்போது பல் மருத்துவத்தில் இம்பிளான்ட் என்ற தொழில்நுட்பம் மிக அதிக எண்ணிக்கையில் கையாளப்படுகிறது. வேர் சிகிச்சை அளித்தல், பல்லுக்கு மூடிபோடுதல் இவையெல்லாம் பழசாகிவிட்டன. இப்போது இம்பிளான்ட் தொழில்நுட்பம்தான் பரவலாக இருக்கிறது. பற்கள் இருந்த இடத்தில் ஓர் ஆணியை எலும்பில் திருகி வைத்து அதன்மீது செயற்கைப் பல் பொருத்தப்படும் இந்த தொழில்நுட்பத்துக்கு, ஓர் ஆணிக்கு ரூ.15,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதற்கும் மத்திய அரசு அதிகபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும்.
இந்த உலோகக் கருவிகளைப் பொருத்தவரை மருத்துவ உலகின் தார்மீகத்தைக் குலைத்தவர்கள் இதன் தயாரிப்பாளர்களும், விற்பனைப் பிரதிநிதிகளும்தான். விலைக் கழிவுப் பலனை மருத்துவர்களுக்கும், மருத்துவமனைக்கும் நேரடியாக வழங்கி, ஆசைக் காட்டி விலையை அதிகரிக்கிறார்கள்.
இந்தியாவில் விபத்துக் காப்பீடு போல, மருத்துவக் காப்பீடு பெற்றிருப்போர் குறைவு. இந்தியாவில், உயிர்காக்கும் சிகிச்சை திட்டத்தில் இதயஅறுவைச் சிகிச்சை இடம்பெறுகிறது. ஆனால், எலும்பு முறிவு, பற்சிகிச்சை போன்ற சிகிச்சைகள் இடம் பெறவில்லை. பெரும்பாலோர் தங்கள் சொந்த சேமிப்புகளையே செலவழிக்க நேர்கிறது. ஆகவே, எலும்பு சிகிச்சைக்கான உலோகத் தகடுகள், பற்சிகிச்சைக்கான ஆணிகள் அனைத்துக்கும் மத்திய அரசு விரைவில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இந்தியாவைப் போன்று கீழ், நடுத்தர வருவாய் பிரிவினரும், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களும் அதிக அளவில் வாழும் சூழலில் அவர்களது கல்வி, மருத்துவத்துக்கான செலவினங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.