சமையல் எரிவாயு மானியத்தை படிப்படியாகக் குறைத்து, நுகர்வோர் மனதில் மானியம் ஒரு பொருட்டாகவே இல்லாத மனநிலையை உருவாக்கி, எரிவாயு உருளைகள் அனைத்தும் பொதுச்சந்தையில் ஒரே விலையில் விற்கின்ற நிலைமையை மத்திய அரசு மெல்ல மெல்ல, உருவாக்கி வருகிறது. வரிசெலுத்தத் தக்க வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளவர்களுக்கு மானியம் கிடையாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பு, மானியத்திலிருந்து மக்களை மெல்லப் பிரிக்கும் முயற்சி.
ஒரு குடும்பத்தில் யாருடைய பெயரில் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதோ அவரது வருமான வரி விவரம் மட்டுமே தற்போது உடனடியாக அரசுக்குக் கிடைக்கும். எரிவாயு இணைப்புப் பெற்றவர்கள் யாருமே தங்கள் குடும்பத்தில் மனைவி, மகன் அல்லது மகள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதாலும், அண்மையில் குடும்ப அட்டை பிரதிகள் வழங்கப்பட்ட போதிலும், அவர்களது தொழில் வருவாய் குறித்துத் தனியாக விவரங்கள் தரப்படவில்லை என்பதாலும், நுகர்வோர் வருவாய் குறித்த விவரம் மட்டுமே, அவரது பான் (வருமான வரி எண்), ஆதார் எண் மூலமாக உடனடியாக அறியப்படும். அவர்களுக்கான மானியம் மட்டுமே வரும் ஜனவரி முதல் நிறுத்தப்படும்.
தற்போது அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி 2014-15 ஆண்டு வருமான வரி படிவத்தில், வரிசெலுத்தத் தக்க வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருப்போர் அதிகபட்சம் 63 லட்சம் பேர் மட்டுமே. வரி செலுத்தத் தக்க வருமானம் என்பது, அரசு அறிவித்துள்ள சலுகைகளின்படி வருமானத்தை கழித்து வரக்கூடிய தொகை.
ஆகவே அடுத்தக் கட்டமாக, வெகுவிரைவில், வரிசெலுத்தத் தக்க வருமானம் என்பதை, ஆண்டின் மொத்த வருமானம் என்று மாற்றுவார்கள். அப்போது இன்னும் அதிகமான நுகர்வோர் மானியத்தை இழக்க நேரிடும். அடுத்ததாக, குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் மானியம் கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகும்.
ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தும் நடைமுறை ஆகியவற்றால் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் நிலவிய போலி இணைப்புகள், ஒழிக்கப்பட்டன. அரசுக்கு இதனால் ஆண்டுக்கு ரூ.15,000 கோடி மானியம் மிச்சமானது.
தற்போது எரிவாயு உருளைக்கான மானியம் மட்டுமே ரூ.39,100 கோடி. இதில் 57.6 லட்சம் நுகர்வோர் தங்களுக்கு மானியம் வேண்டியதில்லை என்று விட்டுக் கொடுத்திருப்பதால் இந்த மானியத்தின் அளவு 35,700 கோடியாக குறைந்துள்ளது. இப்போது ரூ.10 லட்சம் வரிசெலுத்தத்தக்க வருமானம் என்ற நிபந்தனை மூலம் அரசுக்கு மானியச் சுமை ரூ.34,300 கோடியாகக் குறையும் எனக் கணிக்கிறார்கள்.
ஆகவே, சமையல் எரிவாயு மானியம் ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்தக் கட்டமாக குடும்ப வருமானத்தை முன்னிலைப் படுத்துவார்கள் என்பது நிச்சயம். இதற்கிடையே, 5 கிலோ, 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகள் மிக எளிதாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கிடைக்கத் தொடங்கிவிடும். அரிசி பருப்பு வாங்குவதைப் போல, ஓர் எரிவாயு உருளையும் வாங்குகிற மனநிலை உருவாகிவிடும். எரிவாயு உருளைக்கான மானியம் என்ற பேச்சுக்கு இடமில்லாத காலம் உருவாகும்.
ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் சம்பாதிப்பதை ஒட்டுமொத்தமாக ஓர் அரசினால் கண்டறிய முடியுமா என்ற கேள்வி பத்து ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருந்திருக்கும். இப்போது, அந்தக் கேள்விக்கான பதில், முடியும் என்பதுதான். அதற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் ஆதார் அட்டை விவரம் இருந்தால் போதுமானது. இப்போது மானியம் பெறும் பயனாளிகள், ஓய்வூதியம் பெறுவோர் கண்டிப்பாக தங்கள் ஆதார் எண் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. அடுத்து, சம்பளம், ஊதியம், வங்கிப் பரிவர்த்தனை அனைத்திலும் ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுவிட்டால், எந்த நபரும் தனது வருமானத்தைக் குறைத்துக் காட்டுவது மிகமிகக் கடினம்.
ரூபாய் 10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவது தேவையில்லைதான். அது அரசுக்குத் தேவையில்லாத சுமை என்பது உண்மை. அதேநேரத்தில், ஆட்சியாளர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் சில கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பக்கூடும்.
தங்களைக் கோடீஸ்வரர்களாக தேர்தலின்போது வேட்புமனுவில் குறிப்பிட்டிருப்பவர்கள் அவர்களது சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை விட்டுக்கொடுக்க முன்வருவார்களா? உறுப்பினர்கள் தங்களுக்குத் தாங்களே சம்பளம், ஓய்வூதியம், படி, சலுகைகள் ஆகியவற்றை உயர்த்திக்கொள்வதை நிறுத்துவார்களா? செயல்படாமல் அவை முடங்கும் நாள்களுக்கான சம்பளம், படி ஆகியவற்றை தியாகம் செய்யத் தயாராவார்களா?
காந்தியடிகள், பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அந்த காந்தியடிகளின் வழிவந்தவர்களாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியும், காந்தியடிகள் பிறந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பெருமை பேசிக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசும், தாங்கள் முன்னுதாரணமாக இருந்தபிறகு பொதுமக்களுக்கான மானியங்களை விட்டுக்கொடுக்கச் சொல்லவோ, விலக்கிக் கொள்ளவோ செய்திருந்தால் நாடே போற்றியிருக்கும். எரிவாயு மானியத்திற்கான வருமான வரம்பை ஏற்றுக்கொண்டிருக்கும்.
நியாயமான நடவடிக்கைதான். ஆனால், பொதுஜனத்துக்கு ஒரு நீதி. அரசியல்வாதிகளுக்கு இன்னொரு நீதி என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.