கடந்த 2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு, "தேசிய மருத்துவக் கொள்கை-2015'-இன் வரைவை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கிறது மத்திய அரசு. இது இன்றியமையாத் தேவை.
மருத்துவ சாதனைகளுக்கு வழி வகுத்த நவீன தொழில்நுட்பம், அபரிமிதமான மருத்துவச் செலவினால், "வழியடைக்கும் கல்'லாகவும் அமைந்து விடுகிறது. வருமானத்தின் பெரும் பகுதி மருத்துவத்துக்கும், கல்விக்கும் மட்டுமே செலவாகிவிடுகின்றது என்பதே இன்றைய நிலை. ஒரு குடும்பத்தின் மருத்துவச் செலவு, உணவுக்காகச் செலவிடும் தொகையில் 10%க்கு அதிகமாக இருந்தால், அது தாளமுடியாத மருத்துவச் சுமை, அது அக்குடும்பத்தை வறுமையில் தள்ளும் என்கிறது கொள்கை வரைவு.
மருத்துவத்துக்காக மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகை தனிநபருக்கு சற்றொப்ப ரூ.1,200. இதை ரூ.3,500-ஆக உயர்த்த வேண்டும் என்கிறது கொள்கை வரைவு. இதற்காக மத்திய அரசின் மருத்துவக் கொள்கை வரைவில் அழுத்தம் பெறுவன:
1. கல்வி உரிமைச் சட்டம் போல, மருத்துவ உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து, அனைவருக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்தல், 2. கல்வி வரி போன்று, மருத்துவ வரி வசூலிப்பதன் மூலம் மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, 3. மருத்துவக் காப்பீட்டை அனைவருக்கும் வழங்குதல், 4. மருத்துவமனை, மருத்துவர், செவிலியர் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவர்களை சிகிச்சை அளிக்க அனுமதிப்பது (அதாவது அரசு - தனியார் பங்கேற்பு) ஆகியவைதான்.
மருத்துவம் எனது உரிமை என்று சட்டம் கொண்டுவர, பத்து லட்சம் பேருக்கு 1,000 படுக்கைகள் என்ற அளவில் மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும். இது, தற்போது கல்வித் துறையில் நேர்ந்திருப்பதைப் போல, தனியார் மருத்துவமனைகளின் பெருக்கத்தால்தான் சாத்தியமாகும். கொள்கை வரைவு குறிப்பிடு
வதைப் போல, 72% மருத்துவச் சேவை தனி மருத்துவ ஆலோசகர்களால் வழங்கப்பட்டு வந்த நிலைமை மிகவும் குறைந்துபோய், பெருநிறுவன மருத்துவமனை மற்றும் மருத்துவமனைகள் பெருகி வருகின்றன. இதனால், சிறு காய்ச்சலுக்கு பக்கத்தில் இருந்த மருத்துவரிடம் குறைந்த கட்டணத்தில் ஆலோசனை பெறும் நிலைமை மாறி, மருத்துவமனையின் முதல்நிலை கட்டணத்தைச் செலுத்திய பிறகே, சிறுநோய்க்கும் மருத்துவம் பார்க்கவும், அந்த மருத்துவ
மனையின் லாபப் பசிக்கு சிறு இரையாக மாற வேண்டிய கட்டாயத்துக்கும் மக்கள் ஆளாகிறார்கள்.
மருத்துவத் துறையில் 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதால், தனியாரின் 4 கோடி டாலர் முதலீடு, 2020-ஆம் ஆண்டில் 24 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்படுகிறது. தனியார் மருத்துவர், தனியார் மருத்துவமனைகள்தான் தற்போது 80 விழுக்காடு வெளிநோயாளிகளுக்கும், 60 விழுக்காடு உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கின்றன. மேலும் தனியார் பெருநிறுவன மருத்துவமனைகள் அதிகரிக்குமேயானால், நிலைமை படுமோசமாகிவிடும்.
இருப்பினும், மருத்துவக் காப்பீட்டை அனைவருக்கும் வழங்குவதால், மருத்துவச் செலவை ஈடு செய்ய முடியும் என்று அரசு நம்புகிறது. தற்போது சில மாநிலங்களில் செயல்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போன்றே, நாடு தழுவிய அளவிலானதொரு காப்பீட்டுத் திட்டத்தை, ஆதார் அட்டை அல்லது சுகாதார அட்டை போன்ற ஓர் அடையாளக் குறியீட்டுடன் இணைந்ததாக அறிமுகம் செய்ய விரும்புகிறது மத்திய அரசு.
காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்குமான "நட்பு" ஊழலுக்கு வகை செய்வதையும், மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்குப் புறம்பாக, நோயாளிகளிடம் வேறு பெயர்களில் மருத்துவர்கள் பணம் வசூலிப்பதையும் இந்தக் கொள்கை வரைவு ஒப்புக்கொள்கிறது. அதைத் தடுப்பதற்கான வழிவகைகள் ஆராயப்படும் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறது கொள்கை வரைவு.
மருந்து உற்பத்தி செய்ய உலக நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு ஆராய்ச்சிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 143 அரசு மருத்துவக் கல்லூரிகள், 150 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும், 2007-ஆம் ஆண்டு வெளியான மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளில் 97% வெறும் 9 கல்லூரிகளின் பங்களிப்பு. மருத்துவக் கல்லூரிகளின் பெயர்களில் மட்டுமே இந்தியாவில் இப்போது ஆராய்ச்சி இடம் பெறுகிறது.
இந்தியாவில் இயங்கும் மருந்து நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உரிமம் பெறுவதில்தான் அக்கறை காட்டுகின்றனவே தவிர, மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதில்லை. அதற்கு நிறைய முதலீடு தேவை என்பது அவர்களின் வாதம். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பில் இந்தியா எந்தச் சாதனையும் செய்யவில்லை. இந்தக் கொள்கை வரைவு ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.
மருந்துகளின் விலையை அரசு கட்டுப்படுத்துவது, மருந்துகளை அதன் வேதியியல் பெயரில் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க, விற்கச் செய்வது குறித்தோ, ஸ்கேன், ரத்த வங்கி போன்ற துணை மருத்துவ அமைப்புகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்தோ கொள்கை வரைவில் குறிப்புகள் இல்லை. மருத்துவச் செலவின் பெரும் பகுதி இந்தத் துணை மருத்துவ அமைப்புகளால்தான் ஏற்படுகிறது.
இந்திய மருத்துவம் பயின்றோர், ஊசி போட்டால் போலி மருத்துவர் என்று கைது செய்யப்படும் அவலநிலையை மாற்ற இந்தக் கொள்கை வரைவில் எந்தக் குறிப்பும் இல்லை. சித்த மருத்துவர்கள் இப்போதே இதில் தங்களுக்கான சலுகைகளை வரையறுத்துக்கொள்ள களத்தில் இறங்குவது நல்லது. சில குறைகளும் விடுபடல்களும் இருந்தாலும், அரசின் முயற்சி பாராட்டுக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.