தலையங்கம்

இப்படியும் செய்யலாம்!

தமிழ்நாட்டில் குறைந்த விலை துவரம் பருப்பு, ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யும் நடைமுறை நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மாநகரங்களில் கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகளில் சுமார் 27,000 கிலோ விற்பனை நடைபெற்றுள்ளது.

ஆசிரியர்

தமிழ்நாட்டில் குறைந்த விலை துவரம் பருப்பு, ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யும் நடைமுறை நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மாநகரங்களில் கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகளில் சுமார் 27,000 கிலோ விற்பனை நடைபெற்றுள்ளது.
 கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகளில் இந்த அளவுக்கு அதிகமாக பருப்பு விற்பனை நடைபெற்றதில்லை. சென்னையில் 15,628 கிலோ முதல் நாளில் விற்பனையாகியுள்ளது. இது வழக்கத்தைவிட பல மடங்கு அதிகம். திருச்சியில் 14 கடைகளில் 5,816 கிலோ விற்பனை நடந்துள்ளது. ஆனால், திருச்சியின் இந்தக் கடைகளில் சராசரியாக ஒரு நாளுக்கு 250 கிலோ முதல் 400 கிலோ வரை மட்டுமே விற்பனையாகும்.
 குறைந்த விலை துவரம் பருப்பை வாங்க வந்தவர்களில் உயர் வருவாய் பிரிவினரும் இருந்தனர் என்றாலும், பெரும்பாலானவர்கள் நடுத்தர வருவாய்ப் பிரிவினர்தான். இவர்களில் பலரும் குறைந்த விலையில் பருப்பு கிடைக்கிறது என்பதால், இந்த அங்காடிகளுக்கு முதல்முறையாக வருகை தந்தவர்கள். விலை குறைவு என்பதற்காக இந்த அங்காடிகளுக்கு வந்த ஒரு சில பெண்கள், அரை கிலோ பொட்டலங்களை மட்டுமே வாங்கினர். சமைத்துப் பார்த்து நன்றாக இருந்தால் இன்னும் வாங்குவோம் என்றும் வெளிப்படையாகவே கூறவும் செய்தனர். குறைந்த விலைப் பருப்புத் திட்டம் தமிழக நடுத்தர வருவாய்க் குடும்பங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
 கூட்டுறவுத் துறை பல்பொருள் அங்காடிகளை மக்கள் தவிர்ப்பதன் காரணம், இங்கே தரமான பொருள்களை அதிகாரிகள் கொள்முதல் செய்ய மாட்டார்கள் என்றும், அதிகாரிகள் தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் வியாபாரிகளிடம் தரமற்ற பொருளை வாங்கி விற்பனைக்கு வைப்பார்கள் என்றும் பரவலாக மக்களிடம் ஒரு கருத்து உருவாகி இருப்பதுதான். பொது விநியோகக் கடைகளில் பருப்பு விற்கப்பட்டாலும், நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதை வாங்குவதில்லை. அவர்களது அட்டைக் கணக்கில் அவை "ஏற்றப்பட்டு', சிறு உணவகங்களுக்கு விற்கப்படுகிறது என்பது பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனம். அதில் உண்மை இல்லாமல் இல்லை.
 துவரம் பருப்பு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அங்காடிகளுக்கு மக்கள் வருவார்கள் என்றால், இந்த அங்காடிகளில் அனைத்துப் பொருள்களையும் ஏன் தரமாகவும், குறைந்த லாபத்திலும் விற்பனை செய்யக் கூடாது என்கிற எதிர்பார்ப்பு எழுகிறது.
 ஒரு குடும்பத்தின் அடிப்படை உணவுப் பொருள்களின் தேவை என்பவை: அரிசி, பருப்பு, புளி, மிளகாய், சமையல் எண்ணெய் ஆகியவை. ஆனால், இன்றைய நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் மளிகைச் சாமான் பட்டியலில் இதன் அளவும், இதற்கான தொகையும் சரிபாதியில் குறைவு. ஒரு நடுத்தரக் குடும்பங்கள், நகரின் சங்கிலித்தொடர் கடைகளில் பொருள்கள் வாங்கினால் அதில் பாதிக்கும் மேற்பட்ட செலவு எதற்கானது என்று பார்த்தால், துணி துவைக்கும் சோப்பு, சோப்பு பவுடர், உடலுக்கான குளியல் சோப்புகள், சென்ட் வகைகள், பற்பசை, தலைமுடிக்கான வாசனை எண்ணெய், ஹார்லிக்ஸ் போன்ற ஊட்டச்சத்து உணவுகள், அவசர உணவுத் தயாரிப்புக்கான கார்ன்பிளேக்ஸ் வகைகள் (இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய இரண்டு நிமிட நூடுல்ஸ் இரு மாதங்களில் சந்தைக்கு மீண்டும் வந்துவிடும்), பிரெட், பிஸ்கட், நொறுக்குத்தீனிப் பொட்டலங்கள் இத்தியாதிகள்தான்.
 உயர், நடுத்தர வருவாய்ப் பிரிவினரைப்போல மாத வருவாய் ரூ.50,000-க்கும் கீழே உள்ள குறைந்த வருவாய்ப் பிரிவினர் இப்பொழுதும் அருகில் உள்ள பலசரக்குக் கடைகளைத்தான் தங்கள் தேவைக்கு நாடுகிறார்கள். விலைவாசி உயர்வால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இவர்கள்தான்.
 தற்போது மக்கள் நலன் கருதி, துவரம் பருப்பை விலையைக் குறைத்து கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யும் தமிழக அரசு, குறைந்த வருவாய் நடுத்தரப் பிரிவினர் அதிகம் பயன்படுத்தும் மளிகைச் சாமான்கள் அனைத்தையும் குறைந்த விலையில் விற்பனை செய்யாவிட்டாலும் வணிக இலச்சினை கொண்ட அனைத்துப் பொருள்களையும், அதன் தயாரிப்பாளர்கள் வழங்கும் விலையில் நியாயமான லாபத்துடன் (அதுவும்கூட நடைமுறைச் செலவுக்காகத்தான்) விலை நிர்ணயித்து விற்றால், அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
 பருப்பு, அரிசி ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற பொருள்களை வாங்க முடிவதைப் போன்று, வணிக இலச்சினை கொண்ட மளிகைச் சாமான்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றில் ஊழல் செய்ய இயலாது. ஆகவே, வணிக இலச்சினை கொண்ட அனைத்துப் பொருள்களையும் கூட்டுறவுத் துறை பல்பொருள் அங்காடிகளின் மூலம் வழங்க முடியுமானால் மக்கள் அதிக அளவில் பயன் அடைவார்கள். இங்கு விற்பனையாகும் பொருள்களுக்கு தமிழக அரசு வரிச் சலுகை அளிக்குமேயானால், அது மிகப் பெரிய அளவில் மக்களின் வரவேற்பைப் பெறும்.
 நடுத்தர வருவாய்ப் பிரிவினர் "ஒரு முறை' இலவசங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வகையில் சேமிப்பு கிடைப்பதையே விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டுறவு அங்காடிகள் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. மீண்டும் அதை மீட்டெடுக்க முடியும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

தமிழ் மொழி அறிஞா் க. மு. செல்லப்பா பிறந்த நாள்: முதல்வா் மு. க. ஸ்டாலின் வாழ்த்து

கண்ணகி நகா் அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய 50 நூல்கள்: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு வெளியிட்டாா்

ஏஐ குறித்த ஐநா சுயாதீன அறிவியல் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியா் பி.ரவீந்திரன்

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

SCROLL FOR NEXT