தலையங்கம்

சென்னையின் நடுவண் சதுக்கம்

சென்னையின் தொன்மைக்குச் சான்று பகரும் இடங்கள் பாதுகாக்கப்படாமல் இடிக்கப்பட்டது போக, எரியுண்டது போக, மீதமிருப்பவை மிகச் சிலவே. அவையும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றுக்குள் முடிந்துவிடக் கூடியவை.

ஆசிரியர்

சென்னையின் தொன்மைக்குச் சான்று பகரும் இடங்கள் பாதுகாக்கப்படாமல் இடிக்கப்பட்டது போக, எரியுண்டது போக, மீதமிருப்பவை மிகச் சிலவே. அவையும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றுக்குள் முடிந்துவிடக் கூடியவை.
 ரிப்பன் பில்டிங், சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா ஹால், ஜார்ஜ் கோட்டை, பிரசிடன்ஸி கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், உயர்நீதிமன்ற வளாகம், இதற்கு அடுத்த நிலையில் ராஜிவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை, எழும்பூர் ரயில் நிலையம், அரசு ஆவணக் காப்பகம் ஆகியவை இதில் அடங்கும். தொன்றுத்தொட்டே சென்னைக்கு அடையாளம் சேர்த்தவை மயிலை கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட சமயத் தலங்களும் கூவம், அடையாறு என்கிற நீர்த் தடங்களும்தான்!
 மேலே குறிப்பிட்டுள்ள சென்னையின் அடையாளங்கள் அனைத்துமே போக்குவரத்து நெரிசலால், வாகனப் புகையால், கூவத்தில் கலக்கும் சாக்கடையின் முடைநாற்றத்தால் மாசுபட்டு காணப்படுகின்றன. இந்த இடங்களைத் தூய்மையாக, அதிக இரைச்சல் மற்றும் மாசுபடாத பகுதியாக நம்மால் பராமரிக்க இயலவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் 375 ஆண்டுகள் நிறைவெய்திய ஒரு நகரத்தின் அவல நிலை இது.
 இந்தச் சூழலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் சட்டப்பேரவையில் நடுவண் சதுக்கம் (சென்ட்ரல் ஸ்கொயர்) திட்டத்தை ரூ.400 கோடியில் அறிவித்துள்ளார். அத்துடன் கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டத்தையும் முதல்வர் அறிவித்துள்ளார். இவை இரண்டும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டால், இப்பகுதி சென்னையின் மிகச் சிறந்த நடுவண் மையமாகவும் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உலகத் தரமான சதுக்கங்களில் ஒன்றாகவும் திகழும்.
 வணிகம், சுற்றுலா, பொது நிகழ்வு ஆகியவற்றுக்காக மக்கள் கூடுகின்ற அல்லது நகருக்கான அத்தனை பாதைகளும் குவிகின்ற இடங்கள்தான் சதுக்கம் என்று அழைக்கப்படுகின்றன. உலகின் எல்லாப் பெருநகர்களிலும் இத்தகைய சதுக்கம் உண்டு. பெய்ஜிங் நகரில் தியானன்மென் சதுக்கம், மாஸ்கோவில் செஞ்சதுக்கம், நியூயார்க் நகரில் டைம்ஸ் ஸ்கொயர், லண்டனில் டிராஃபல்கர் ஸ்கொயர் என பல்வேறு நகரங்களிலும் பல பெயர்களில் உள்ளன. அதன் தொன்மை பாதுகாக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் இருக்கிறது.
 சென்னையைப் பொருத்தவரை அத்தகைய மக்கள் கூடும் இடமாக மெரீனா கடற்கரை அமைந்துவிட்டதால், பொதுக்கூட்டம் நடத்தப்படும் திலகர் கட்டம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரது நினைவிடங்கள் கொண்டிருக்கும் அண்ணா சதுக்கம் ஆகியன மட்டுமே கவனம் பெற்றன. சென்னையின் தொன்மையான கட்டடங்கள் கவனம் பெறாமல் போயின.
 தற்போதைய திட்டத்தின்படி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், பூங்கா நகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் நான்கு சுரங்கப்பாதைகள் அமைத்து, கீழே அகன்ற இடப்பரப்பில் மக்கள் தங்களுக்கான வாசலை, நெருக்கடி இல்லாமல் தேடிச் செல்லும் வகையில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. இது மக்கள் போக்குவரத்தைக் குறைக்குமே தவிர, பேருந்து, தனியார் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான்.÷
 தமிழக முதல்வர் விரும்புவதைப் போல, உலகத் தரமான சென்னை நடுவண் சதுக்கம் அமைவது என்பது இதுவரை யாருமே சிந்தித்துப் பார்க்காத புதிய முயற்சி. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பயணிகள் வருவதற்கான மற்றொரு வாசல், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தையொட்டி அமைவதும். அதையொட்டியுள்ள சாலையை அகலப்படுத்தி, ரயில் நிலைய வாசல்வரை பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிச்செல்லும் பேருந்து சிறுமுனையம் அமைவதும் இந்தத் திட்டத்திற்கு மிகவும் உதவும்.
 அதேபோன்று, மருத்துவமனைக்கும் தற்போதுள்ள முகப்பு வாயிலுடன் மற்றொரு வாயிலை உருவாக்கி, பல்லவன் சாலையிலிருந்து மருத்துவமனையின் பின்புறமாக பேருந்துகள் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலத்தில் செல்லும்படி செய்தால் மருத்துவமனைக்கு வரும் மக்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வரத் தேவை இருக்காது. போக்குவரத்து மற்றும் வாகன நெரிசல் இரண்டையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.
 ரயில் நிலையத்துக்கும் மருத்துவமனைக்கும் இரண்டு பின்புற வாசல்கள் அமைப்பதும் கூட சென்னை நடுவண் சதுக்கம் அமைப்பதற்கு உதவக்கூடும். இதை மாநில அரசோ அல்லது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மட்டுமோ செய்துவிட முடியாது. இதற்கு ரயில்வேயின் ஒத்துழைப்பும் தேவை.
 நடுவண் சதுக்கம் என்பது சென்னை மாநகராட்சியால் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா, வணிக மையமாக உருவெடுக்க திட்டமிடப்படுகிறது. இதன்மூலம் ஆங்கிலேய காலத்துக் கட்டடங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலைநாடுகளில் இருப்பதுபோல ரயில் நிலையங்களைச் சுற்றி வணிக வளாகங்கள் அமையக்கூடும். இவையெல்லாம் சென்னையின் பொலிவை மேம்படுத்தும்.
 தமிழக முதல்வரின் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தருமேயானால், சென்னை நடுவண் சதுக்கம் என்பது சிங்கப்பூரின் சிராங்கன் சாலை, டோக்கியோவின் ஜின்ஸô போல சென்னையின் புகழ்மிக்க பகுதியாக திகழும்.
 பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்துக்குத் தேர்வு பெற்றுள்ள சென்னை மாநகரம், இத்திட்டம் அனுமதிக்கும் "விடுபட்டதை சரிசெய்தல்" (RETROFITTING) வகைப்பாட்டின்கீழ் நிதியுதவி பெறுவதும்கூட சாத்தியமே.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.காம்., பி.பி.ஏ. படிப்புகளுக்கு சட்டப் பேராசிரியா்களை நியமிக்கக் கோரி மனு: உயா் கல்வித் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

விடுதி உரிமையாளா் கொலை வழக்கு: ஊழியா்களிடம் போலீஸ் விசாரணை

தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் உ.வே.சா.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தவா் கைது: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT