தலையங்கம்

மோடிதான் புத்திசாலி!

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

ஆசிரியர்

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றம் நடைபெறாமல் தடுக்கும் எதிர்க்கட்சிகளின் போக்கை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். "நாடாளுமன்ற அமைப்பில் இடையூறு ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. விவாதத்தின் மூலம் பிரச்னைகளை அலசி ஆராயத்தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்களே தவிர, தர்னாவில் ஈடுபடுவதற்கும், அவை நடவடிக்கைகளை முடக்குவதற்கும் அல்ல. அப்படி இடையூறு ஏற்படுத்துவது என்பது பெரும்பான்மையைக் காயப்படுத்துவது போலாகும்' என்று குடியரசுத் தலைவர் கூறியிருக்கும் அறிவுரை நூற்றுக்கு நூறு உண்மை.
குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருப்பதுபோல, இந்தியாவின் நிதியாதாரம் குறைவாக இருந்த காலங்களில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு நேரம் விவாதத்துக்கு செலவிட்டதுபோய், இப்போது இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியிருக்கும் சூழலில், விவாதமே இல்லாமல் அமளியில் ஈடுபட்டு மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது மிகப்பெரிய குற்றம். இது ஜனநாயகத்துக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் செய்யப்படும் துரோகம்.
எதிர்க்கட்சிகளை அரவணைத்துக்கொண்டு அவையை நடத்த வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சியுடையது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், அவையில் விவாதம் நடப்பதை உறுதி செய்து, அதன்மூலம் அரசைப் புள்ளிவிவரங்களுடனும், தகுந்த காரண காரியங்களுடனும் விமர்சிக்க வேண்டிய வாய்ப்பை உறுதி செய்வதுதான் எதிர்க்கட்சிகளின் பலம். இதைத்தான் பி. ராமமூர்த்தி, பூபேஷ் குப்தா, பிலு மோடி, என்.ஜி. கோரே, ராம் மனோகர் லோகியா, மது லிமயே, இந்திரஜித் குப்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி முன்னோடிகள் திறம்படச் செய்தார்கள். அவர்கள் பேச எழுந்தால் பிரதமரும் அமைச்சர்களும் வியர்வையில் குளிப்பார்கள். அரசின் பல முடிவுகளையே எதிர்க்கட்சி ஜாம்பவான்கள் மாற்ற வைத்திருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை அவர்கள் அமளியில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைந்திருப்பது ரூ.500, ரூ.1000 செலாவணிகளைச் செல்லாததாக்கிய அரசின் முடிவு. இத்தகைய முக்கியமான முடிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்கு பதிலாக, அவையை நடத்தவிடாமல் செய்வது என்பது ஆரோக்கியமான விவாதம் நடைபெறாமல் செய்வது என்றுதான் பொருள்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, பிரதமர் அவைக்கு வந்து தாங்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்பது. அவர்களது கோரிக்கைப்படி, பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்தார். உடனேயே, பிரதமர் பேச வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஒருநாள் மாநிலங்களவையில் பேசுவதற்குத் தயாராக பிரதமர் மோடி வந்தார். அப்போது, அவரை "மோசடிக்காரர்', "ஏமாற்றுப் பேர்வழி' என்றெல்லாம் கூச்சலிட்டபடி அவையின் மையப் பகுதியில் எதிர்க்கட்சியினர் குழுமியதும் அவர் எழுந்து போய்விட்டார்.
எதிர்க்கட்சிகளின் எண்ணம், அவை நடக்க வேண்டும், விவாதம் நடைபெற வேண்டும் என்பதல்ல என்பதைத்தான் அவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் அவர்கள் எந்தவகையில் அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறார்கள் என்று புரியவில்லை. இதற்கு பதிலாக விவாதத்தை முடுக்கிவிட்டு, அரசின் முடிவுக்கு எதிராக தங்களது கருத்துகளை முன்வைத்து அரசை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவது அல்லவா புத்திசாலித்தனம்?
எல்லா எதிர்க்கட்சிகளும் கருப்புப் பணத்துக்கும், ஊழலுக்கும் எதிரான கருத்தை வரவேற்கின்றன. அவற்றுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் வரவேற்கின்றன. ஆனால், செலாவணியைச் செல்லாமல் ஆக்குவதன் முலம் கருப்புப் பணமும், ஊழலும் எந்தவிதத்திலும் குறையாது, தடுக்கப்படாது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கருத்து என்றால் அதை அவையில் எடுத்துரைத்து, அரசின் முடிவு தவறானது என்று நிரூபிப்பதுதான் அவர்களுக்கு அரசியல் ரீதியாக லாபம் ஈட்டித்தரும்.
கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி இதுவரை 18 நாட்கள் இரு அவைகளும் கூடியிருக்கின்றன. மக்களவையில் 2016-17 நிதியாண்டுக்கான துணைமானியக் கோரிக்கை, வரிகள் தொடர்பான சட்டங்களின் திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேறி இருக்கின்றன. ஊழல் தடுப்புச் சட்டம் (திருத்தம்) 2013, இடித்துரைப்
பாளர் பாதுகாப்புச் சட்டம் (திருத்தம்) 2015, மகப்பேறுச் சலுகைகள் சட்டம் 2016, மனைவணிக ஒழுங்காற்றல் சட்டம் உள்ளிட்ட பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேறக் காத்திருக்கின்றன.
மக்களவையிலாவது ஒருசில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அவை நடைபெறுகிறது. மாநிலங்களவையில் எந்தவொரு மசோதாவும் நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, அது குறித்து விவாதிக்கப்படவுமில்லை. தினந்தோறும் கூச்சலும், குழப்பமும், அமளியுமாக அவை முடக்கப்படுவதுதான் தொடர்கிறது. நாடாளுமன்ற முடக்கத்தினால் திரிசங்கு சொர்க்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது முக்கிய மசோதாவான ஜி.எஸ்.டி. மசோதா.
அமளி துமளியால் அவையின் நடவடிக்கைகளை முடக்கிப் போடுவதுதான் ஜனநாயகம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால், அவர்களுக்காக நாம் பரிதாபப்படத்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி புத்திசாலி. எதிர்க்கட்சிகளின் உதவியோடு, தனது அரசைப் பற்றிய அதிகாரபூர்வமான விமர்சனங்கள் எதுவும் அவைக் குறிப்பில் பதிவாகாமல், பாதுகாத்துக் கொள்கிறார். அது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT