எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஒரு பிரச்னைக்காகக் குரல் கொடுப்பதும், ஆளும் கட்சியாக மாறிவிட்டால், அந்தப் பிரச்னை பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருப்பதும் நமது அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதில், காங்கிரஸ், பா.ஜ.க. என்கிற வேறுபாடெல்லாம் கிடையாது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் "லோக்பால்' சட்டம்.
அரசியல் கட்சிகள் தங்களது கடமையில் தவறுவதால்தான் நீதிமன்றம், தனது வரம்பைமீறித் தலையிட்டு, ஆட்சியாளர்களுக்கு இலவச ஆலோசனைகளையும், அவசர வழிகாட்டுதல்களையும் சொல்ல முனைகிறது. உயர்மட்ட ஊழல் குறித்து விவாதிக்கும் "லோக்பால்' பதவியை ஏற்படுத்துவதிலும், அதற்கு தகுந்த நபரைத் தேர்ந்தெடுத்து நியமிப்பதிலும் அரசு காட்டும் தயக்கத்தையும் தாமதத்தையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது.
"லோக்பால்', "லோக் ஆயுக்த' சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், அப்படியொரு அமைப்பு ஏற்படுத்தப்படவும் இல்லை, அதற்குத் தகுந்த நபர்
களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கவும் இல்லை. இதற்கு அரசு கூறும் நொண்டிச்சாக்கும் காரணங்களும் ஏற்கும்படியாகவும் இல்லை.
"லோக்பால்' நியமனத் தேர்வுக் குழுவில், பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரபல வழக்குரைஞர் ஒருவர் என்று ஐந்து பேர் இடம் பெறுகிறார்கள். இந்த ஐந்து பேரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்தைப் பெறும் கட்சிக்கு, மக்களவையில் குறைந்தது 55 இடங்
களாவது இருக்க வேண்டும். இன்றைய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு கட்சிக்கும் மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்துப் பெறும் அளவுக்கு 55 உறுப்பினர்கள் இல்லாத நிலையில்,
அப்படியொரு அங்கீகாரம் யாருக்கும் இல்லாமல் இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருப்பதால் தேர்வுக் குழு கூடி ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றும், அதனால் "லோக்பால்' நியமிக்கப்படாமல் இருக்கிறது என்றும் அரசு கூறுவது ஏற்புடையதாக இல்லை. காரணம், வேறு சில நியமனங்கள் அரசால் செய்யப்பட்டிருப்பதும் அதற்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேவைப்படாத நிலை ஏற்பட்டிருப்பதும்தான்.
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தலைமைத் தகவல் ஆணையர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மத்திய புலனாய்வுத் துறையின் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனங்களுக்கும்கூட தேர்வுக் குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெற்றாக வேண்டும் என்கிற நிபந்தனை இருந்தது. அதற்கெல்லாம் மக்களவையில் அதிக எண்ணிக்கை
யிலான உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் தேர்வுக் குழுவில் இடம் பெறலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டுவந்து நியமனங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அதே நடைமுறையைக் கையாண்டு "லோக்பால்' அமைப்பிற்கும் ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருக்கிறது. அதற்குப் பின்னும் அரசு எதுவும் செய்யாமல் மெüனம் காக்கிறது.
அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டு அதன் விளைவாக உருவானதுதான் "லோக்பால்' சட்டம். அண்ணா ஹசாரேயின் போராட்டத்தையும், "லோக்பால்' சட்டத்தையும் எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜ.க. ஆதரித்து வந்தது. அதன்மூலம் அரசியல் ஆதாயமும் பெற்றது. ஆனால், மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே ஊழலுக்கு எதிரான கண்
காணிப்பு அமைப்பான "லோக்பால்' ஏற்படுத்துவதை பா.ஜ.க. அரசு தவிர்த்து வருகிறது.
"லோக்பால்', "லோக் ஆயுக்த' அமைப்புகள்மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது என்பது உலகறிந்த உண்மை. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது, "லோக் ஆயுக்த' நியமனம் தொடர்பாக மாநில ஆளுநருடன் அவருக்குக் கடுமையான கருத்து வேறுபாடு நிலவியது. அதனால், அவரது தலைமையிலான மத்திய அரசு "லோக்பால்', "லோக் ஆயுக்த' சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுவது வியப்பை ஏற்படுத்தவில்லை.
உச்சநீதிமன்றம் அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்திருப்பதுடன், "லோக்பால்' அமைப்பை ஏற்படுத்தத் தயங்குவதால், ஊழலுக்கு எதிரான அரசின் முனைப்பு கேள்விக்குறியாக இருப்பதாக நேரடிக் குற்றச்சாட்டையும் முன் வைத்திருக்கிறது. "லோக்பால்' நியமனத்துக்கு வழிகோலும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால், உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கிறது. இதுவே, நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையில் அடுத்த மோதலாக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பொது வெளியில் அனைத்துக் கட்சிகளும் "லோக்பால்' நிய
மனத்துக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதால், இதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவருவதில் சிக்கலே இல்லை. ஆனால், அப்படியொரு சட்டமும், அமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிற எண்ணம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இருக்க வேண்டும். அது இருக்கிறதா என்பதுதான் ஐயப்பாடு!
"லோக்பால்' நியமனம் குறித்து உச்சநீதிமன்றத்திற்கு இருக்கும் அக்கறை, எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களில் யாருமே இதுகுறித்துக் கவலைப்படவில்லை. மாநில அரசுகளும் "லோக் ஆயுக்த' குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. அண்ணா ஹசாரே போன்ற ஒருவர், நாடுதழுவிய அளவில் மீண்டும் ஓர் இயக்கத்தைத் தொடங்கினால் ஒழிய "லோக்பால்' சட்டம் உயிர்த்தெழுமா என்பது சந்தேகமாக இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.