தலையங்கம்

கல்வியே உன் விலை என்ன?

சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளாகிவிட்ட பிறகும் நம்மால் உலகத்தரமான, அதே நேரத்தில் இந்திய மண்ணுக்கு ஏற்ற வகையிலுமான கல்விக் கொள்கையையோ,

ஆசிரியர்

சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளாகிவிட்ட பிறகும் நம்மால் உலகத்தரமான, அதே நேரத்தில் இந்திய மண்ணுக்கு ஏற்ற வகையிலுமான கல்விக் கொள்கையையோ, தெளிவான கற்பித்தல் முறையையோ இன்னும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி விட்டிருக்கிறோமே தவிர, அதை முழுமையாகவும் முறையாகவும் நம்மால் நடைமுறைப்படுத்த முடிந்திருக்கிறதா என்றால் இல்லை. இன்னமும்கூட, இந்தியாவில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் வருவாய் குறைந்த பிரிவினருக்கான 25 விழுக்காடு இடங்களை ஒதுக்குவதாகத் தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.), தன்னுடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கூடங்களில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதத்தில் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் அந்தப் பள்ளிகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவது மட்டுமல்லாமல், வாரியத்தின் நேரடிக் கண்காணிப்புக்கும் அவை உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (ம.இ.க.வா.) தனது அமைப்பின் கீழ் தொடங்கப்படும் பள்ளிக்கூடங்களில் இரண்டு விதிமுறைகளைக் கட்டாயமாக்கியிருக்கிறது. முதலாவது, அந்தப் பள்ளிக்கூடங்களின் கல்விக் கட்டணம், அந்தப் பள்ளியின் மாணவர்களுக்கு வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். இரண்டாவது, அந்தப் பள்ளிகள் தங்களது கட்டண அமைப்பை, அதாவது எந்தெந்தப் பிரிவில், எதற்காக, எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை அவரவர் இணையதளத்தில் தெளிவாகவும், விரிவாகவும் வெளியிட்டாக வேண்டும். இந்த இணையதளங்கள் ம.இ.க.வா.இன் இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த இரு நிபந்தனைகளும் முதலில் ஆலோசனைகளாக எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. இப்போது, இவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தாக வேண்டும் என்று ம.இ.க.வா. கூறியிருக்கிறது. தனது கல்வி முறையுடன் இணைந்திருக்கும் பள்ளிகள் அவற்றின் இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல வசதிகள் பெற்றவைதானா, அதற்கேற்ப மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ம.இ.க.வா. மட்டுமல்ல, பொதுமக்களும் கண்காணிக்கவும், தவறு நடந்தால் அதைத் தட்டிக் கேட்கவும், வாரியத்திடம் புகார் சொல்லவும் வழிகோலப்பட்டிருக்கிறது.
இது ம.இ.க.வா. தன்னிச்சையாக எடுத்திருக்கும் முடிவு என்று கூறிவிட முடியாது. கடந்த மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றுதான், ம.இ.க.வா.இன் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெற்றோர் சங்கம் ஒன்று, கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் பள்ளிகளில் நிலவும் கட்டணக் கொள்ளையையும், பொதுவாகக் கல்வித் துறையில் பரவலாகக் காணப்படும் பொறுப்பின்மையையும், ஊழலையும் எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நிலையில்தான், தெலங்கானா மாநிலத்தில் ம.இ.க.வா.உடன் இணைந்த பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறது.
பெற்றோர் சங்கத்தின் வழக்கு, மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது, கல்விக் கட்டணம் குறித்துப் பல்வேறு தரப்பினரின் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், மாநில அரசுகள் மாவட்ட அளவில் பள்ளிக் கட்டண ஒழுங்காற்றுக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், ம.இ.க.வா. உள்ளிட்ட எல்லாவித கல்வி முறையைச் சேர்ந்த தனியார் பள்ளிகளின் கட்டணமும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் தொடர்ச்சியாகத்தான் இப்போது ம.இ.க.வா. இந்த இரண்டு நிபந்தனைகளையும் கட்டாயமாக்க முற்பட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளானாலும் சரி, தனியார் மெட்ரிகுலேஷன், ம.இ.க.வா. பள்ளிகள் போன்ற எந்த வகையிலான கல்விமுறைப் பள்ளிகளானாலும் சரி ஊழலும், ஒரே மாதிரியல்லாத கல்விக் கட்டணமும் தரமில்லாத வருங்கால சந்ததியினரை உருவாக்கும். கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்தால், அது கல்வியை முழுக்க முழுக்க வணிகமயமாக்குவதாக அமைந்துவிடும். அதன்விளைவு, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துமே தவிர, சமச்சீரான, அனைவருக்கும் சம வாய்ப்புள்ள சமுதாயம் உருவாகாமல் போகும்.
கல்வியைப் பொருத்தவரை, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் சாமானியர்களுக்கும் இடம் தரப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது, பெரும்பாலான பள்ளிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தெரியாததல்ல. அவர்களும் சரி, அந்தந்தப் பகுதி மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களும் சரி இது குறித்துத் தெரியாதவர்களல்ல. ஆனால், அவர்கள் யாருமே கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அக்கறை செலுத்தாமல் இருப்பதுதான், அந்தச் சட்டம் முழுமையாக வெற்றி பெறாமல் போனதற்குக் காரணம்.
அடித்தட்டு மக்களின் குழந்தைகள் தங்களது பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் படிப்பதைத் தனியார் பள்ளி நிர்வாகங்கள் விரும்பவதில்லை. தனியார் கல்விச் சாலைகள் பலவும் அரசியல் தொடர்புடையவர்களால் நடத்தப்படுவதால், கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்துவதில்லை.
இந்தியக் கல்வி முறையில் மிகப்பெரிய குறைபாடு, அனைவருக்கும் தரமான கல்வி என்பது கானல் நீராக இருப்பதுதான். தொடக்கப் பள்ளி நிலையிலேயே வேறுபாடு காணத் தொடங்கி விடுகிறது. அடித்தட்டு மக்களுக்கு ஒருவிதக் கல்வியும், வசதி படைத்தவர்களுக்குத் தரமான கல்வியும் என்பது அங்கேயே தொடங்கிவிடுவதால், கீழ் மத்தியதர, அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படித்து முடித்து வேலைவாய்ப்புக்கு வரும்போது, வேறுபாடுகளால் பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள். கல்லூரியில் சேர்வதிலும் சரி, அப்படியே சேர்ந்தாலும் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதிலும் சரி, இவர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், அனைவருக்கும் அரசுக் கல்விச் சாலைகளில்தான் பள்ளிக் கல்வி. உயர்கல்வியில்தான் தனியார் அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் சமச்சீரான கல்வித் தகுதியும், வாய்ப்பும் அனைவருக்கும் உறுதிப்படுத்தப்படுகிறது. அதேபோல, ஆசிரியர்கள் நியமனத்திலும் திறமையும் தகுதியுமே முதன்மைப்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, தொடர்ந்து அவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும், அதில் தேர்ச்சியும் பெற்றாக வேண்டும்.
சமூக நீதி என்கிற பெயரில் ஒரு சிலருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக, லட்சக்கணக்கான வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை நாம் பாதித்துக் கொண்டிருக்கிறோம். வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளின் வருங்காலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள், மற்றவர்கள்?
நம்மை சமத்துவ சமுதாயம் என்று எந்த அடிப்படையில் சொல்லிக் கொள்கிறோம் என்பது புரியவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT