தலையங்கம்

ஏமாற்றத்தில் விவசாயிகள்!

நீர்ம எரிவாயுவை (எல்.பி.ஜி.) தமிழ்நாடு வழியாகக் கொண்டு செல்லும் இந்திய எரிவாயு ஆணையத்தின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியிருப்பதால், மீண்டும் தமிழ்நாட்டில் ஏழு மாவட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கையையும், தமிழக அரசின் முறையீட்டையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பதில் மனம் தளர்ந்திருக்கிறார்கள். அவர்களது கலக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆசிரியர்

நீர்ம எரிவாயுவை (எல்.பி.ஜி.) தமிழ்நாடு வழியாகக் கொண்டு செல்லும் இந்திய எரிவாயு ஆணையத்தின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியிருப்பதால், மீண்டும் தமிழ்நாட்டில் ஏழு மாவட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கையையும், தமிழக அரசின் முறையீட்டையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பதில் மனம் தளர்ந்திருக்கிறார்கள். அவர்களது கலக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிகழாண்டு ஜனவரி மாதத்திலான சந்தை நிலவரப்படி, கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடு வழங்கும்போது, முந்தைய 10% என்பதற்குப் பதிலாக, 30% கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்குமே தவிர, நிறைவைத் தந்துவிடாது.

தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞரிடம், வாக்கு வங்கியை மனதில் கொண்டு விவசாயிகளின் எதிர்ப்பை ஆதரித்தீர்கள் என்று வெளிப்படையாகவே நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது நாட்டின் நலன் கருதிய திட்டம் என்பதால் இதற்குத் தடையாக இருத்தல் கூடாது என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக இருக்கிறது. நீதிபதிகளின் புரிதல் தவறானது என்று நாம் எடுத்துரைக்கத் தவறிவிட்டோம் என்று தோன்றுகிறது.

இது வெறும் வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்; அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்; சில கட்சிகளின் விவசாய அணிகள் சார்பில் பங்கேற்கவும் செய்தனர். இந்த எரிவாயுக் குழாய்களால் தங்கள் விளைநிலம் பாழாகும் என்கிற விவசாயிகளின் கருத்தில் உண்மை இருந்ததுதான் அதற்குக் காரணம்.

காயங்குளம் முதல் மங்களூர் வரையிலான எரிவாயுக் குழாய் பதிப்பதில், கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே சுமார் 310 கி.மீ. தூரத்தை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாகக் கொண்டு செல்வதற்கு மூன்று மாநிலங்களிலேயும் எதிர்ப்புகள் இருந்தன. இதில் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்படக் காரணம், மிகக் குறைவான இழப்பீடு, கெயில் விதித்த நிபந்தனைகள் ஆகியவை இரண்டும்தான்.

இத்திட்டத்தின்படி, சுமார் 20 மீட்டர் அகலம் கொண்ட நிலத்தை மட்டுமே கெயில் தனது எரிவாயுக் குழாய் பதிக்க எடுத்துக்கொள்ளும் என்றாலும், அந்தப் பகுதியில் எத்தகைய சாகுபடி செய்ய வேண்டும், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கக் கூடாது, வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என்று பல நிபந்தனைகளை விதிக்கின்றது. நிலம் கையகப்படுத்தும் திட்டத்திலும்கூட, கொஞ்சமும் நெளிவு சுளிவு இல்லாமல், ஏற்கெனவே இருக்கும் கிணறுகளை மூடும்படியாகவும், இருக்கும் பண்ணை வீடுகளை இடிக்கும் விதமாகவும் இந்த வழித்தடம் கறாராக, கொஞ்சமும் வளைந்து கொடுக்காமல் இருந்தது. ஆகவேதான், இந்த அளவுக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.

இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடா அருகே ஒரு கிராமத்தின் வழியாக போடப்பட்டிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து எரிந்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் இருந்த விவசாய வீடுகள் அனைத்தும் நாசமாகின. இதன் பிறகு, இத்திட்டத்தின் மீது விவசாயிகளுக்கு அச்சம் அதிகரித்தது.

இத்திட்டத்தை, நெடுஞ்சாலைகளின் ஓரமாகவே மேற்கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை கெயில் நிராகரித்துவிட்டது. நெடுஞ்சாலைகளில் நிலம் கையகப்படுத்தினால் திட்ட மதிப்பீடு மேலும் பல மடங்கு அதிகரிக்கும். அத்துடன் இத்திட்டத்துக்காக குழிகள் வெட்டும்போது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கும் என்று பதில் கூறப்பட்டது.

உண்மையில், கெயில் நீதிமன்றத்தில் சொல்லத் தயங்கிய காரணங்கள் சிலவும் உண்டு. இந்தக் குழாய்களை மண்ணில் புதைத்துவிட்டால், தொடர்ந்த கண்காணிப்புக்கு அவசியமில்லை. அதனால் கூடுதல் செலவுகளும் இருக்காது. நெடுஞ்சாலைகளில் அமைத்தால், எரிவாயுவை திருடும் சம்பவங்கள் நடைபெறும். ஆந்திரத்தில் ஏற்பட்டது போன்று, அழுத்தம் காரணமாக எரிவாயு வெடித்து தீ விபத்து ஏற்பட்டால், நெடுஞ்சாலையில் சில பேருந்துகள் பற்றி எரியுமானால், மிகப்பெரும் விபத்தாக மாறிவிடும் என்ற அச்சமும் இதற்குக் காரணம்.

இப்போது நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில், கெயில் தனது திட்டத்தைத் தொடங்கும்போது, பயிர் சாகுபடிகளுக்கு நிபந்தனைகளை விதிப்பதைத் தவிர்க்க வேண்டும். நிலத்தின் மீது டிராக்டரைப் பயன்படுத்தி, நிலத்தை உழுதால் அல்லது மண்ணைப் புரட்டினால் கீழே இருக்கும் எரிவாயுக் குழாய் உடையும் என்ற அச்சத்தால்தான் இந்த நிபந்தனைகளை கெயில் விதிக்கிறது. அப்படியானால், விவசாயி இழக்கும் நிலத்துக்கு மட்டுமல்ல, பயிருக்கும் சேர்த்தல்லவா இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை தமிழக பா.ஜ.க., மத்திய அரசை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்.

தேவையெனில், விவசாய நிலத்தின் வழியாக எரிவாயுக் குழாய் செல்லும் வழித்தடத்தை முள்வேலியிட்டு, அதற்கு வெளியேயான நிலத்தில் அவரவர் விரும்பியபடி சாகுபடி செய்யவும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் அனுமதிக்க வேண்டும். கூடுதல் செலவைக் காரணம் காட்டி, விவசாயிகளை தொல்லைக்கு ஆளாக்குதல் கூடாது.

இந்தத் தீர்ப்பினால் மகிழ்ச்சி அடைபவர்கள் ஏழு மாவட்டத்தில் உள்ள தொழிற்கூடங்கள்தான். அவர்களுக்குத் தடையற்று எரிவாயு கிடைக்கும். இந்தத் தீர்ப்பு பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு. மேற்புறத்தில் இனிப்பு, கீழ்ப்புறத்தில் கசப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT