தலையங்கம்

இது தில்லிக்கு மட்டுமல்ல...

ஊதிய நிலுவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடனான தில்லி மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர் வேலைநிறுத்தம் தாற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. கோரிக்கை நியாயமாகவே இருந்தாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால் வேலை நிறுத்தத்தை தொடரக்கூடாது என்கிற தில்லி உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தங்களது போராட்டத்தைத்

ஆசிரியர்

ஊதிய நிலுவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடனான தில்லி மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர் வேலைநிறுத்தம் தாற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. கோரிக்கை நியாயமாகவே இருந்தாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால் வேலை நிறுத்தத்தை தொடரக்கூடாது என்கிற தில்லி உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தங்களது போராட்டத்தைத் தாற்காலிகமாக துப்புரவு தொழிலாளர் சங்கம் கைவிட்டிருக்கிறது.
 பிரச்னையின் தீவிரத்தைத் தணிக்க, தில்லி துணைநிலை ஆளுநர் நஸீப் ஜங் ரூ.300 கோடி கடன் கிடைக்க ஏற்பாடு செய்தபோதிலும், முதல்வர் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு ரூ.693 கோடியை உடனடியாக விடுவித்தபோதிலும்கூட, இவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள மறுத்து, தொடர்ந்து போராடினார்கள். தில்லி மாநகராட்சிகளின் பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு விட்டனர். ஆனாலும், துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்று வலியுறுத்தினார்கள்.
 தெருக்களில் குவிந்திருந்த குப்பை போதாதென்று இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்ட அரசியல் குப்பைதான் அதைவிட நாற்றமெடுத்தது. வடக்கு, கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் பாஜக பதவிப் பொறுப்பில் இருப்பதால், முதல்வர் கேஜரிவால் இந்த மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று புகார் கூறினாலும், வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு முறையே ரூ.892 கோடி, ரூ.465 கோடி, ரூ.668 கோடி நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தில்லி அரசு புள்ளிவிவரத்துடன் கூறுகிறது. மேலும் தில்லி நாறினால் அது கேஜரிவாலுக்கு மட்டுமல்ல, தலைநகர மாநகராட்சிகளை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வுக்கும் நற்பெயரை பெற்றுத்தராது என்பதை தில்லி மாநில பா.ஜ.க.வினர் புரிந்துகொள்ளாதது மிகப்பெரிய வேதனை.
 எந்தவொரு பிரச்னையிலும் மத்திய அரசுடன் மோதல்போக்கைக் கடைப்பிடித்து அரசியலாக்குவதை தில்லி முதல்வர் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்னையிலும் அவர் அந்த வாய்ப்பை நழுவவிடவில்லை.
 தற்போது, தில்லியில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல், இந்தியாவின் அனைத்து மாநகராட்சிகளுக்கும் பொருந்தும். ஏனெனில், மாநகராட்சிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட முழுமுதற் காரணம் அங்கு நடைபெறும் ஊழல்தான். எல்லா மாநகராட்சி, நகராட்சிகளும் தங்கள் வருவாய்க்கு மீறிய திட்டங்களைத் தீட்டுகின்றன. இதற்குக் காரணம், திட்ட மதிப்பீடு உயர, உயர அதில் தங்கள் பங்கும் உயரும் என்ற ஓர் எண்ணத்தைத் தவிர, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் என்பது மிகமிகக் குறைவு.
 உலக வங்கி நிதியுதவியுடன் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவார்கள். ஆனால், அதற்காக ஒவ்வொரு வீட்டுக்குமான கட்டணத்தை வசூலிப்பதில் முனைப்பு காட்டுவதில்லை. அதேபோல, உலக வங்கி நிர்ணயிக்கும் குடிநீர்க் கட்டணத்தை வசூலிக்க, வாக்குவங்கி இடம் தருவதில்லை. அப்படியிருந்தால் உலக வங்கியிடம் பெற்ற கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது?
 லாரிகளில் குடிநீர் வழங்குவதில் இந்தியாவிலுள்ள பெரும்பாலான நகராட்சி, மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெறுகிறது என்கிறது தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை. குடிநீர் லாரிகளின் எண்ணிக்கை, அந்த லாரிகளின் குடிநீர் கொள்ளளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு, நீரேற்று நிலையத்தின் மின்கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த சம்பவங்களில் ஊழல் வெளிப்படையாகத் தெரிந்தாலும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
 குப்பைகளைக் கையாளுவதற்குப் போதுமான வாகனங்கள், துப்புரவுப் பணியாளர்கள் இருந்தும்கூட, சில பகுதிகளைத் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்குகிறது மாநகராட்சிகள். இதற்காக, ஒரு தொகையை அந்த ஒப்பந்த நிறுவனத்துக்குக் கொடுத்தாக வேண்டும். இதனால், துப்புரவுப் பணிக்கான மாநகராட்சியின் செலவு இரட்டிப்பாகிறது. இது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
 மாநகராட்சிகளில் விளம்பரப் பதாகைகள் வைக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் 10 இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்க அனுமதி வாங்கி, அதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, நகரில் 100 இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைக்கிறார்கள். இது தெரியாமல் நடக்கும் செயல் அல்ல. தெரிந்தே நடக்கிறது. இதற்குக் காரணம், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல். இப்படி மாநகராட்சிகள் தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வருவாயை ஊழல் காரணமாக இழப்பதும், அதனால் பற்றாக்குறையுடன் தொடர்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது.
 மத்திய அரசும் தில்லி அரசும் விடுவிக்கும் தொகை தவிர, சொத்து வரி, குடிநீர் வரி, வாகன நிறுத்தக் கட்டண ஒப்பந்தங்கள், விளம்பரப் பதாகை வைப்பதற்கான கட்டணங்கள் இவையெல்லாம் இருந்தும் தில்லியிலுள்ள மாநகராட்சிகளுக்கு ஏன் இந்த நிதித் தட்டுப்பாடு? தில்லியிலுள்ள மாநகராட்சிகள் இதுவரை ரூ.1,555 கோடி சொத்து வரியை வசூலிக்காமல் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஊதிய நிலுவைக்கு யார் காரணம்? என்ற கேள்விகள் கேட்கப்படாமல் இதை வெறும் அரசியலாகப் பார்ப்பது முறையன்று.
 தில்லியிலுள்ள மூன்று மாநகராட்சிகளையும், தில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது. வரவிலும் ஊழல், செலவிலும் ஊழல் என்பதே இச்சிக்கலுக்குக் காரணம். இது தில்லிக்கு மட்டுமல்ல, எல்லா மாநகராட்சிகளுக்கும் பொருந்தும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT