தலையங்கம்

இது போதாது!

இந்த விவகாரத்தில் முகநூல் (ஃபேஸ்புக்) பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது தெளிவு. ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, "ஃபிரீபேசிக்' என்ற இணைய சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியிருந்தது. இதன் சேவை ரிலையன்ஸ் செயல்படும் மாநிலங்களில் மட்டுமே கிடைத்த காரணத்தாலும், பல செயலிகளை பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை என்பதாலும் ஃபேஸ்புக் கொண்டுவந்த இந்த சேவைக்குப் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்

கடந்த சில மாதங்களாகப் பெரிதும் பேசப்பட்ட இணைய சமநிலையை உறுதி செய்துள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்). இதன் மூலம் இந்தியாவில் இணையப் பயன்பாட்டாளர் அனைவரும் ஒரேவிதமான கட்டணத்தில் இணைய சேவையைப் பயன்படுத்த முடியும்.
 இந்த விவகாரத்தில் முகநூல் (ஃபேஸ்புக்) பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது தெளிவு. ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, "ஃபிரீபேசிக்' என்ற இணைய சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியிருந்தது. இதன் சேவை ரிலையன்ஸ் செயல்படும் மாநிலங்களில் மட்டுமே கிடைத்த காரணத்தாலும், பல செயலிகளை பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை என்பதாலும் ஃபேஸ்புக் கொண்டுவந்த இந்த சேவைக்குப் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டது.
 இதையடுத்து, கட்டண வேறுபாடுகள் குறித்த கருத்துக்கேட்பை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் டிராய் தொடங்கியது. இதில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் அனைவரையும் ரிலையன்ஸ் நிறுவனம் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கச் செய்தது. இருப்பினும்கூட, சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்திய "ஃபிரீபேசிக்' சேவை நிறுத்தப்பட வேண்டும் என்று டிராய் கருத்துத் தெரிவித்தது. தற்போது, மிகத் தெளிவாக, உறுதியான முடிவை வெளியிட்டுள்ளது.
 உடனடியாக அமலுக்கு வரும் டிராய் உத்தரவின்படி, இனி இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைவருக்கும் வேறுபாடில்லாமல் இணைய சேவை கட்டணம் வசூலிக்க வேண்டும். பிளான், பேக்கேஜ், வவுச்சர் என்ற புதுப்புது பெயர்களில் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் இனி கூடாது. இணைய சேவைக் கட்டணம் (டேட்டா சார்ஜ்) என்பதை அனைத்து நிறுவனங்களும் ஒரே அளவிலேயே நிர்ணயிக்க வேண்டும். நுகர்வோரைக் கவர்ந்திழுக்க (ரிலையன்ஸ் ஃபேஸ்புக் ஒப்பந்தம் போன்று) எந்தவித நிறுவனத்துடனும், சேவை வழங்குவோருடனும் கட்டண பாகுபாட்டுக்கு வழிவகுக்கும்படியான ஒப்பந்தமோ அல்லது ஏற்பாடோ செய்துகொள்ளக் கூடாது. மீறினால், ஒரு நாளைக்கு ரூ.50,000 வீதம் அபராதம் விதிக்கப்படும்.
 இன்றியமையாக் காலங்களில் (வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளின்போது) கட்டணத்தைக் குறைத்து சேவை வழங்கலாம். அதையும்கூட டிராய்க்கு ஒருவாரத்துக்குள் தெரிவித்து, டிராய் திருப்தி அடையாவிட்டால், அதை ரத்து செய்து அபராதமும் செலுத்த வேண்டும் என்று டிராய் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் எல்லோருக்கும் இணைய சமநிலை உறுதியாகியுள்ளது. இதே உறுதியை தனியார் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்த டிராய் முயல வேண்டும்.
 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவை. தெனாலிராமன் பாணியில், குதிரை ஒரு ரூபாய்; குரங்கு நூறு ரூபாய். இரண்டையும் சேர்த்துதான் விற்பேன் என்கின்ற கதையாய், பல சலுகைகளை இணைத்து வணிகம் செய்து வருகிறார்கள்.
 தற்போது தரைவழித் தொடர்பு, வை-ஃபை மோடம் ஆகியவற்றை இணைத்து குறைந்தபட்சம் ரூ.1,000-லிருந்து ரூ.1,200 வரை மாதக் கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். இதில் ஒரு நுகர்வோர் குறிப்பிடும் மூன்று அல்லது நான்கு செல்லிடப் பேசிகளும் இதே வை-ஃபை சேவைக்குள் கட்டணமின்றி வந்துவிடுவார்கள் என்று கவர்ந்து இழுக்கிறார்கள். இதில் அவர்கள் சொல்கிற உறுதிகளுக்கும், நுகர்வோர் நடைமுறையில் பெறும் சேவையிலும் பெரும் வேறுபாடு இருக்கிறது. இதில் நட்டப்படுவோர் பெரும்பாலும் நுகர்வோராகவே இருக்கின்றனர்.
 பேக்கேஜ், பிளான், வவுச்சர் என்ற திட்டங்களுடன் டேட்டா கட்டணத்தை இனிமேல் கூட்டக் கூடாது என்று கூறியுள்ள டிராய், தற்போது நடைமுறையில் ஏமாற்றப்பட்டு இருக்கும் நுகர்வோரைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட பேக்கேஜ், பிளான், வவுச்சர் சேவையை எந்த இழப்பும் இல்லாமல் ரத்து செய்து, புதிதாக மாற்ற வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், டிராய் செய்யவில்லை. இனிமேல் என்ற ஒரு வார்த்தையுடன், இந்த நிறுவனங்களின் கொள்ளையைப் புறந்தள்ளிவிட்டது.
 இணைய சேவை என்பதில் மட்டுமல்ல, சாதாரணக் குறுந்தகவல் கட்டணங்களைக்கூட இன்னும் சீர்மை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். ஒரு குறுந்தகவல் அனுப்ப ரூ.1 கழிக்கப்படுகிறது. டிராய் ஏற்கெனவே, உள்நாட்டு குறுந்தகவலுக்கு 25 காசுகளும், ஒரு நிமிடம் பேசிட 80 காசுகளும் கட்டணமாக சென்ற ஆண்டு திருத்தி அமைத்தது. இப்போது 50 காசுகளுக்கும் குறைவாகப் பேச முடிகிறது. ஆனால், குறுந்தகவலுக்கு மட்டும் இப்போதும் ரூ.1 கழிக்கப்படுகிறது. டிராய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 அதைப்போன்று, அழைப்பு முறிவுகள் (கால் டிராப்) பிரச்னையிலும் நடவடிக்கை இல்லை. ஓர் அழைப்பு முறிவுக்கு ரூ.1 வீதம் ஒரு நுகர்வோருக்கு ஒரு நாளைக்கு ரூ.3 வரை அபராதமாக திருப்பி அளிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாகவும் டிராய் தெரிவித்தது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆயிரம் காரணங்களைச் சொல்லி சாக்குப்போக்குக் காட்டி வருகிறதே தவிர, கடந்த ஒரு மாதத்தில் எத்தனை நுகர்வோருக்கு அழைப்பு முறிவுக்காக பணம் கிடைத்தது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
 அபராதம், உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகளில் தடாலடியாக இறங்கினால் மட்டுமே, இந்த நிறுவனங்கள் கட்டுப்படும். நுகர்வோர் விழித்துக் கொள்ளாத வரையில், அரசும் விழித்துக் கொள்ளாது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT