பேச்சுரிமையல்ல, அஃப்சல் குரு!
தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று முழக்கமிட்டுப் பேரணி நடத்துவதற்கும், "அஃப்சல் குருவைத் தூக்கிலிட்ட அரசு ஒழிக' என்று முழக்கம் எழுப்புதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால், இந்த இரண்டையும் ஒரே பேரணியில் நடத்தும்போது, இது பேச்சுரிமையா அல்லது பயங்கரவாதத்தின் மாரீசக் குரலா என்பதைப் பொதுநபர்கள் அடையாளம் காண்பது சிக்கலான ஒன்று.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டது. இப்போது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது. இரண்டு இடங்களிலும் பிரச்னையின் ஆரம்பம் ஒன்றுதான்: அஃப்சல் குரு.
÷தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று முழக்கமிட்டுப் பேரணி நடத்துவதற்கும், "அஃப்சல் குருவைத் தூக்கிலிட்ட அரசு ஒழிக' என்று முழக்கம் எழுப்புதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால், இந்த இரண்டையும் ஒரே பேரணியில் நடத்தும்போது, இது பேச்சுரிமையா அல்லது பயங்கரவாதத்தின் மாரீசக் குரலா என்பதைப் பொதுநபர்கள் அடையாளம் காண்பது சிக்கலான ஒன்று.
÷ஹைதராபாதில் தூக்குத் தண்டனைக்கு எதிரான பேரணியில், இத்தகைய இருவகை முழக்கங்களும் எழுந்ததால்தான் இரு மாணவர் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, அடிதடியாக மாறியது. அதில் ரோஹித் உள்ளிட்டோரின் ஆய்வு ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனிடையே ரோகித் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலையை தலித் பிரச்னையாகக் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாற்ற முற்பட்டன. அஃப்சல் குரு பற்றிய பேச்சால்தான் இரு மாணவர் அமைப்புகளிடையே தகராறே தொடங்கியது என்பது வசதியாக மறைக்கவும், மறக்கவும் பட்டது.
÷கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக சம்பவத்தில், அஃப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்காக இந்திய அரசை விமர்சிக்கும் முழக்கம் எழுப்பப்பட்டுள்ளது. ஒளிபரப்பான காட்சித் தொகுப்புகளில் மாணவர்கள் தாங்கியிருக்கும் பதாகைகளின் இடையே அஃப்சல் குரு படம் மிகத் தெளிவாகத் தூக்கிப் பிடிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
÷அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) வேட்பாளரைத் தோற்கடித்து இடதுசாரி மாணவரான கன்னைய குமார் வென்றுவிட்டார் என்பதால் அவர் மீது தேச விரோத வழக்கு போடப்பட்டுள்ளது என்று இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கூறினாலும், முழக்கம் எழுப்பப்பட்டிருப்பதும், அஃப்சல் குரு முகம் வரையப்பட்ட பதாகை தாங்கிவரப்பட்டிருப்பதும் வெளிப்படையானவை.
÷பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னைய குமார் நீதிபதியிடம் குறிப்பிடுகையில், இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துக்கும் இடையே தகராறு ஏற்படும் சூழல் இருந்ததாகவும், அதைத் தடுக்கவே தான் சென்றதாகவும் கூறியதாக செய்திகள் மூலம் அறிகிறோம். இந்த நிகழ்வில் எழுப்பப்பட்ட முழக்கத்தோடு கன்னைய குமாருக்குத் தொடர்பில்லை என்று தோன்றினாலும், அவர் 2012-இல் காஷ்மீர் சென்று சிலரை சந்தித்து வந்திருக்கிறார் என்பதையும், அவருக்கு லஷ்கர்-இ-தொய்பா தொடர்பு இருப்பதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் கூறியிருக்கிறார்.
÷நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய காஷ்மீரியான அஃப்சல் குரு, நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர். பிப்ரவரி 9, 2013-இல் காங்கிரஸ் தலைமையிலான அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். இதற்காக அரசை விமர்சிப்பது சரியா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிறகுதான் இந்திய மாணவர் உலகமும், அரசியல்வாதிகளும் இந்தப் பிரச்னையைப் பெரிதாக்குவது குறித்தும், பலமுனைப் போராட்டங்கள் குறித்தும் தீர்மானிக்க வேண்டும்.
÷பல்கலைக்கழகங்கள் போராட்டக் களங்களாக மாறுவதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில், குறிப்பாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இதுவரை மாணவர் சங்கப் பொறுப்புகளில் இடதுசாரிகளே இருந்தனர். பேராசிரியர்களும்கூட இடதுசாரி சிந்தனை உள்ளவர்களாகவே இருந்து வந்தனர். இப்பல்கலைக்கழகம் ஓர் இடதுசாரி சிந்தனையாளர்களின் அரசியல் களம் என்பது இந்தியாவில் அனைவரும் அறிந்த ஒன்று.
÷இந்த மாணவர்கள் அரசின் குறைபாடுகளை விமர்சிப்பதும், ஆய்வுகள் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களைக் காட்டி அரசின் கொள்கை முடிவுகளைத் தவறு என்று சொல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதுதான். ஆனால், அறிவுஜீவிகள் எல்லாரும் இடதுசாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்லவே. இந்திய அரசியல் சூழலுக்கு ஏற்றபடி இப்போது இந்தப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி சிந்தனை இல்லாத அறிவுஜீவிகள் வருவது அதிகரித்து வருவதுதான் பிரச்னைக்குக் காரணம். வலதுசாரி அறிவுஜீவிகள் அதிகரித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சகிப்பின்மையின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டங்கள்.
÷ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கன்னைய குமார் இடதுசாரி சிந்தனையாளர். இணைச் செயலர் வலது சாரி சிந்தனையாளர். 14 ஆண்டுகளுக்குப் பிறகு பல்கலைக்கழக மாணவர் குழுவில் ஒரு வலதுசாரி இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே, இது இடது, வலதுசாரி சிந்தனையாளர்களுக்கு இடையேயான பலப்பரிட்சை என்றும் கொள்ளலாம்.
÷எது தேச விரோதம், எது பேச்சுரிமை என்பதை பலப்பரிட்சை செய்பவர்கள் சிந்திப்பதில்லை. தேச விரோதம் சார்ந்த பேச்சுக்களை, பேச்சுரிமையாகக் கொள்ள முடியாது!