முகப்பு
தலையங்கம்

இதிலும் கவனம் தேவை!

பிப்ரவரி 14-ஆம் தேதி மும்பை எதிர்கொள்ள நேர்ந்திருக்கக்கூடிய மிகப்பெரும் அவலம் இறைவிருப்பினால் இழப்பு ஏற்படுத்தாமல் கடந்து சென்றிருக்கிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தொழிலதிபர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்திருக்கும் மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்கவிருந்த கலைநிகழ்ச்சி மேடை மிகப்பெரும் தீ விபத்தில் சாம்பலானது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

பிப்ரவரி 14-ஆம் தேதி மும்பை எதிர்கொள்ள நேர்ந்திருக்கக்கூடிய மிகப்பெரும் அவலம் இறைவிருப்பினால் இழப்பு ஏற்படுத்தாமல் கடந்து சென்றிருக்கிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தொழிலதிபர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்திருக்கும் மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்கவிருந்த கலைநிகழ்ச்சி மேடை மிகப்பெரும் தீ விபத்தில் சாம்பலானது. இருப்பினும், இந்தத் தீ விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை. யாரும் காயமடையவும் இல்லை.
 அமிதாப் பச்சன், ஆமிர் கான், விவேக் ஒபராய் உள்ளிட்ட கலையுலக பிரபலங்கள், நடனக் கலைஞர்கள், சிறப்பு விருந்தினர்கள் என 500 பேர் மேடை அருகிலும், சுமார் ஐம்பதாயிரம் பேர் மேடையைச் சுற்றிலும் இருந்தபோதிலும், தீ தென்பட்ட உடனே அனைவரும் அவரவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த வழியாக விரைந்து வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
 தீ விபத்து நேரிட்ட 10 நிமிடங்களில் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். எதிர்பாராத நேர்வுகளில் வெளியேறுவதற்காக ஏற்கெனவே பல வழிகள் அமைக்கப்பட்டிருந்த காரணத்தால், பார்வையாளர்கள் வெளியேறுவதில் நெரிசல் ஏற்படவில்லை. என்றாலும்கூட, மும்பை நிர்வாகம் இன்னும் பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.
 மும்பைத் தாக்குதல் வழக்கில் ஹெட்லியின் வாக்குமூலம் பொதுவில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதால், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பசுத் தோல் போர்த்திய அமைப்புகள் எரிச்சல் அடைந்துள்ளன. இவை பெருந்திரள் கூடும் இடங்களில் நேரடியாகவோ அல்லது இயல்பான தோற்றம் தரும் வகையிலோ தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக் கூடும் என்பதால், மும்பை நிர்வாகம் இன்னும் சற்று எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
 இது மகாராஷ்டிர அரசு நிகழ்ச்சி என்பதாலும், அங்கு ஏற்கெனவே 10 தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாலும், உடனடியாக 45 நிமிடங்களில் தீயை அணைக்க முடிந்திருக்கிறது. முதலீட்டாளரைக் கவரும் மாநாடு என்பதால் இந்த விபத்து ஒரு அபசகுனமாக அமைந்துவிட்டது. உயிரிழப்பு இல்லை என்றாலும்கூட, முதலீட்டாளர்களின் மனத்தடையைப் போக்குவது எளிதான செயல் அல்ல.
 கலைநிகழ்ச்சிக்கான நடன மேடை வழக்கமான தீ தடுப்பு சோதனைகள் செய்யப்பட்டதும், அத்தகைய சோதனைகளில் எல்லா ஏற்பாடுகளும் செவ்வனே செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும்கூட, கலையரங்க மேடையாக இருந்த மரப்பலகைகளின் அடியிலிருந்தே தீ கிளம்பியிருக்கிறது. இது நாச வேலை அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு மகாராஷ்டிர அரசுக்கு உள்ளது.
 கடற்கரையில் அமைக்கப்பட்ட மேடை என்பதாலும், திறந்தவெளி அரங்கம் என்பதாலும் பார்வையாளர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் வெளியேற்றுவதில் நெரிசல் ஏற்படவில்லை. மற்றபடி, இதுவே ஓர் உள்ளரங்க நிகழ்வாக இருந்திருப்பின் நிச்சயமாக 10 நிமிடங்களில் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு பெயர்தல் என்பது இயலாதவொன்று. இதில் மிகப்பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கக் கூடும்.
 தில்லியில் உப்ஹார் திரையரங்கில் நேர்ந்த மிகப்பெரும் தீ விபத்தும் உயிரிழப்புகளும் காலமறதியில் கரைகின்றன. ஆகவே, தீ விபத்துகள் ஒவ்வொரு முறையும் புதுப்புது வடிவம் கொள்கின்றன. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, கலையரங்க மேடைகள் நிகழ்வுகளுக்கு புதியக் கட்டுப்பாடுகள் அறிவியல்பூர்வமாக விதிக்கப்பட வேண்டும்.
 தற்போதைய கலைநிகழ்ச்சிகளில் பலவண்ண விளக்குகளும், வண்ணப்புகைகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. விளக்குகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதன் ஒளி வெப்பத்தில் மிகச்சிறிய தாள்கள் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால்தான், அரபு மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளின்போது வண்ணக் குறுந்தாள்களைப் பொழிவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
 இன்றைய கலை நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள் ஆகியவற்றில் எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை எவை, தவிர்க்கப்பட வேண்டியவை எவை என்பதை பாகுபடுத்தி அனுமதிப்பது இன்றியமையாதது.
 இப்போது எல்லா நகரங்களிலும் விமரிசையாக கலைநிகழ்ச்சிகள் நடத்துவது என்பது வழக்கமாக ஆகிவிட்டது. அவை உள்ளரங்கமா, திறந்தவெளி அரங்கமா என்றில்லாமல் எல்லா இடங்களிலும் தீ தடுப்பு மற்றும் பார்வையாளர் வெளியேறும் அவசர வழிகள் ஆகியவற்றை உறுதி செய்வது இன்றியமையாதது.
 இன்றைய பல உள்ளரங்குகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இவற்றில் பார்வையாளர் இருக்கைகள் நடுவழியின் வலப்புறம் 20 இருக்கைகள், இடப்புறம் 20 இருக்கைகள் என்று இருப்பதை 10 இருக்கைகளுக்கு இடையே கட்டாயமாக ஒரு நடைவழி இருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பத்து நிமிடத்தில் அனைவரும் வெளியேறுவது இயலாது; நெரிசல் ஏற்படும். மேலும், ஒரு நபர் ஏற்கெனவே இருக்கையில் அமர்ந்திருப்பவரை சங்கடப்படுத்தாமல் கடந்துபோய் தன் இருக்கையில் அமரும் வகையில் இருக்கை வரிசைகளுக்கு இடையே இடைவெளி தேவை. இவைதான், தீ விபத்து அல்லது வெடிகுண்டு புரளி ஆகியவற்றின்போது பார்வையாளர்கள் வெளியேறுவதை விரைவுபடுத்த உதவும்.
 பேரிடர் மேலாண்மைக்கு எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்கிறோமோ, அதே அளவு முனைப்புடன் செயற்கையான பயங்கரவாதத் தாக்குதல்களையும், விபத்துகளையும் எதிர்கொள்வதிலும் கவனம் செலுத்தியாக வேண்டும்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →