யாருக்கும் கவலையில்லை!
தில்லியில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு எய்தியதைக் கொண்டாடிய பொதுக்கூட்டத்தில், தில்லியில் குடிநீர் இணைப்புப் பெற்றவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தில்லி முதல்வர் கேஜரிவால் அறிவிப்பு செய்தார். இந்த நிலுவையின் மொத்த மதிப்பு ரூ.3,778 கோடி!
தில்லியில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு எய்தியதைக் கொண்டாடிய பொதுக்கூட்டத்தில், தில்லியில் குடிநீர் இணைப்புப் பெற்றவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தில்லி முதல்வர் கேஜரிவால் அறிவிப்பு செய்தார். இந்த நிலுவையின் மொத்த மதிப்பு ரூ.3,778 கோடி!
இந்தத் தடாலடி சலுகை என்பது அவரது ஓராண்டு ஆட்சிக்காக மக்களுக்கு அளிக்கும் பரிசு என்றே வைத்துக் கொண்டாலும் அதற்கு அவர் கூறிய காரணம் நியாயமானது. குடிநீர் மீட்டரைக் கணக்கில் கொள்ளாமல் நுகர்வோரிடம் தோராயமாகக் குடிநீர்க் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, 2015 நவம்பர் 30-ஆம் தேதி வரையிலான நிலுவைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என்ற காரணத்தை அவர் குறிப்பிட்டார்.
இதுவும்கூட, அவரவர் சொத்துவரியைப் பொருத்து மாறுபடும். அதாவது ஏ, பி பிரிவில் இருக்கும் நுகர்வோருக்கு 25%, சி பிரிவில் உள்ளவர்களுக்கு 50%, டி பிரிவினருக்கு 75%, மற்ற பிரிவினர் அனைவருக்கும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
தில்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த நகரத்திலுமே குடிநீர்க் கட்டணம் மீட்டர்படி கணக்கிடப்படுவதில்லை. ஆனால், ஒவ்வொரு இணைப்புடனும் மீட்டர் பொருத்த மட்டும் செய்கிறார்கள். இதற்கு உள்ளாட்சி அமைப்புகள் சொல்லும் ஒரு காரணம், அலுவலர்கள் பற்றாக்குறை என்பதுதான். மின் மீட்டரை கணக்கெடுப்பது போன்று குடிநீர் மீட்டரை நேரில் வந்து கணக்கெடுக்காமல், மாதம் ஒரு தொகையைக் கட்டணமாக நிர்ணயித்து வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நடைமுறைச் சிக்கலைக் காரணம் காட்டி, தில்லி அரசு செய்திருப்பது போல தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங்களிலும் உள்ள, குடிநீர் இணைப்பு பெற்ற நுகர்வோருக்கும் கட்டணம் ரத்து செய்ய இயலுமா? இது சரியானதாக இருக்குமா?
யோசிக்கும் வேளையில், கட்டணத்தை ரத்து செய்யாமல் மீட்டர் பயன்பாட்டைக் கணக்கிட்டு, குடிநீரை அளந்து வழங்குவதே நுகர்வோருக்கும் சரி, அரசுக்கும் சரி பயனுள்ளதாக அமையும்.
தற்போதுள்ள சிக்கலே, யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தினார்கள் என்ற அளவீட்டு முறை இல்லாததால் ஆளாளுக்கு அதிக அளவு தண்ணீரை உறிஞ்சி வீணாக்குகிறார்கள் அல்லது வேறு வணிகப் பயன்பாட்டுக்கு எடுக்கிறார்கள் என்பதே.
சொத்துவரி செலுத்துவோரில் ஏ மற்றும் பி பிரிவினர், உள்ளாட்சிகளின் குடிநீர் இணைப்பில் இருந்து பெறும் நீரைக் குடிநீருக்காகப் பயன்படுத்துவதே இல்லை. இவர்கள் தோட்டத்துக்கும், புல்வெளிக்கும், வீடு கழுவுவதற்கும், துணி துவைப்பதற்குமே பயன்படுத்துகிறார்கள். மற்றபடி சமையலுக்கும் குடிப்பதற்கும் சுத்திகரிக்கப்பட்ட தனியார் கேன்களை பயன்படுத்துகிறார்கள். அப்படியானால், இவர்களுக்கு ஏன் சலுகை அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இன்னும் சில வீடுகளில் நிறைய உள்வாடகை வீடுகள் இருக்கும். ஆனால், மின் இணைப்புக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் தனி மீட்டர் வைத்திருப்பதுபோல, குடிநீர் மீட்டர் வைக்கப்படுவதில்லை. ஒரே மீட்டர். ஆனால், அனைவரும் குடிநீரை எடுத்து அனைத்து வகை பயன்பாட்டுக்கும் எடுத்துக்கொள்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்துக்குள் தண்ணீரை எடுத்தாக வேண்டும் என்பதற்காக மோட்டார் வைத்து உறிஞ்சுவதும் நடைபெறுகிறது. இந்த வீடுகளின் உரிமையாளரும் மாதக் கட்டணமாக சராசரித் தொகையைத்தான் செலுத்துகிறார். நியாயமாக இவர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியவர்.
மூன்றாவது தரப்பினர், சாதாரணக் குடும்பத்தினர். அவர்கள் பயன்பாடு மிகவும் அளவானது. ஒருவேளை மீட்டர் பயன்படுத்தி, அதன்படி கட்டணம் வசூலித்தால் அவர்கள் தற்போது செலுத்துவதைக் காட்டிலும் மிகவும் குறைவான கட்டணத்தையே செலுத்த நேரிடும். இத்தகையோர் சலுகைக்கு முழுத் தகுதி உள்ளவர்கள்.
மேலும், இன்றைய தேதியில், பல வீடுகளிலும் தனியார் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்கித்தான் சமையலுக்கும் குடிக்கவும் பயன்படுத்தும் நிலை உருவாகிவிட்டது. அப்படியானால், ஒரு குடிநீர் வாரியம், பல கோடி ரூபாய் செலவில் ஆறுகளிலிருந்தும் ஏரிகளிலிருந்தும் தண்ணீரை மேலேற்றிக் கொண்டுவந்து, அதற்கு குளோரின் மருந்து கலந்து சுத்திகரித்து, வீடுகள் தோறும் வழங்குவது அர்த்தமற்ற வீண்வேலையாக ஆகிப்போகிறது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள், ஊழியர்களுக்கான சம்பளம், நீரேற்று நிலையங்களுக்கான மின்கட்டணச் செலவு மற்றும் ஜெனரேட்டர் செலவு ஆகியன மிகமிக அதிகம்.
குடிநீர் வாரியத்தின் குடிநீரைக் குடிப்போர் மிகச் சில குடும்பங்கள் மட்டுமே என்றால், அவர்களுக்கு மட்டும்தான் இலவசக் குடிநீர் வழங்கப்படுவது நியாயம். குளோரின் கலந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வீட்டுத் தோட்டத்துக்கும் துணி துவைக்கவும் பயன்படுத்துவோருக்கு எதற்காக இவ்வளவு செலவு செய்து ஒரு குடிநீர் வாரியம் விநியோகம் செய்ய வேண்டும்? அவரவர் வீடுகளில் ஆழ்துளைக் கிணறுகளே போதுமானவைதானே!
ஆகவே, குடிநீர் விநியோக முறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பதைப் போன்று, குடிநீருக்கு மட்டுமான குழாய் இணைப்பு தனியாகவும், மற்ற பயன்பாட்டுக்கான சாதாரண நீர் மற்றும் மறுசுழற்சி நீர் விநியோகத்துக்கு தனியாகவும் இணைப்பு கொடுத்து, தரமான குடிநீரை அளந்து விநியோகித்து, பயன்படுத்திய அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பது அடுத்தத் தீர்வு.
இதுபற்றி எல்லாம் கவலைப்பட அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை; அதிகாரிகளுக்கு அக்கறையில்லை. தண்ணீராக வீணாவது மக்களின் வரிப்பணம் தானே, ஏன் கவலைப்படப் போகிறார்கள்?