தாயின் மணிக்கொடி பாரீர்!
எதையெடுத்தாலும் அதைப் பிரச்னையாக்குவது, அரசியல் ஆதாயம் தேடுவது என்பதைக் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் வழக்கமாக்கிவிட்டிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், தேசியக் கொடி ஏற்றுவதைக் கூட விமர்சித்து, அதைப் பிரச்னையாக்க, இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சியே முற்படுகிறது என்பதை நினைக்கும்போது, மகாத்மா காந்தியும், பண்டித நேருவும், ராஜன் பாபுவும், சர்தார் படேலும் வழிநடத்திய
எதையெடுத்தாலும் அதைப் பிரச்னையாக்குவது, அரசியல் ஆதாயம் தேடுவது என்பதைக் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் வழக்கமாக்கிவிட்டிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், தேசியக் கொடி ஏற்றுவதைக் கூட விமர்சித்து, அதைப் பிரச்னையாக்க, இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சியே முற்படுகிறது என்பதை நினைக்கும்போது, மகாத்மா காந்தியும், பண்டித நேருவும், ராஜன் பாபுவும், சர்தார் படேலும் வழிநடத்திய அந்தக் கட்சியின் இன்றைய தேசியத் தலைமை எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்கிற வருத்தம்தான் மேலிடுகிறது.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடந்த, 46 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் 12 முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட 11 முடிவுகளைப் பற்றி யாரும் பேசாமல், "எல்லா பல்கலைக்கழக வளாகங்களிலும், பள்ளிக்கூடங்களில் ஏற்றப்படுவது போல தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்' என்கிற முடிவு மட்டுமே பரபரப்பாக விமர்சிக்கப்படுவது சிரிப்பையும், வியப்பையும் ஒருசேர வரவழைக்கிறது.
ஹைதராபாத் ஆய்வு மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலைக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், ஜாதி, மதக் காரணங்களால் மாணவர்களோ, ஆசிரியர்களோ புறக்கணிக்கப்படுதல் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் புறக்கணித்தல் விசாரணை அலுவலர் ஒருவரை (Anti-Discrimination officer) நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேனிலைப் பள்ளியிலிருந்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதாசாரத்தை 30%-க்கும் அதிகமாக உயர்த்த வழிகாண வேண்டும் என்றும், இதற்காக தற்போதுள்ள மனித ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு இரு "ஷிப்ட்டு'களாக வகுப்புகளை நடத்துவது குறித்தும் முடிவு காணப்பட்டுள்ளது. காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய பாடத் திட்டங்கள் எந்தெந்தப் பிரிவுகளில் தேவை என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பல்கலைக்கழகங்களில் ஏற்படும் பல பிரச்னைகளுக்குக் காரணம் துணைவேந்தர், பதிவாளர் பொறுப்பில் இருப்போரின் நெளிவுசுளிவு இல்லாத அணுகுமுறைதான் என்பதால், துணை வேந்தர், இணை வேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு ஒரு வார கால தலைமைப் பண்பு குறித்து பயிற்சி அளிக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல எடுக்கப்பட்ட ஆரோக்கியமான பல விஷயங்கள் குறித்து ஊடகங்களில் ஒரு வரிகூட விவாதிக்கப்படவில்லை; செய்தி வெளியாகவில்லை. ஆனால், தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்கிற முடிவுக்கு, உடனடியாகக் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றன. இது தேவையில்லாத வேலை என்று எதிர்வினை எழுப்பியிருக்கின்றன.
தேசப்பற்று என்பது தேசியக் கொடியை ஏற்றுவது, தேசியக் கீதம் பாடுவது, வந்தே மாதரம் இசைப்பது ஆகியவற்றில் இல்லை என்றும், அரசமைப்புச் சட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையில்தான் தேசப்பற்று எதிரொலிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கருத்து தெரிவித்திருக்கிறது. காங்கிரஸின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத்.
குடியரசு தின விழா, விடுதலை விழா நாள்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களால் கொடியேற்றி கொண்டாடப்படுகிறது. ஆனால், தினமும் கொடியேற்றப்படுவதில்லை. பள்ளிக்கூடங்களில் இன்றளவும், ஒவ்வொரு திங்கள் கிழமையும் கொடியேற்றி வணக்கம் சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. "நான் ஓர் இந்தியன், இந்தியர்கள் அனைவரும் என் சகோதரர்கள்' என அனைத்து மாணவர்களும் ஒரேநேரத்தில் உறுதிமொழி ஏற்பதும் நடைபெறுகிறது. ஆனால், கல்லூரிகளில் அவ்வாறு வாரம்தோறும் நடைபெறுவதில்லை.
தேசியக் கொடியை ஏற்றுவதால் மட்டுமே தேசப்பற்று வந்துவிடாது என்றால், பள்ளிகளில் திங்கள்தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டியதில்லையே. அல்லது கொடியேற்றுவதை விட்டுவிட்டு, அனைவருக்கும் அரசியல்சாசன சட்டத்தைப் படிக்கச் செய்யலாமே! நேரடியாக அரசியலமைப்புச் சட்டத்தைப் புரிந்துகொள்ள முயன்றால் போதுமே.
தேசப்பற்று என்பது இந்த மண்ணில் பிறந்ததாலும், இந்த நீரைச் சுவைத்ததாலும், இந்த மலைக்காற்றாலும், இந்த மண் தந்த உணவாலும், உயிராலும், இந்த மண் சார்ந்த அறத்தாலும் வந்த பற்றுதல். கொடி என்பது காலங்காலமாக ஓர் அரசு கோலோச்சும் அடையாளச் சின்னம். தேசியக் கொடி பறக்கும் இடத்தில் இந்திய மண்ணுக்குரியவன் என்ற சிந்தனையும் அங்கே வந்து நிற்கிறது என்று பொருள்.
இத்தனை காலமாக நமது பல்கலைக்கழகங்களில் தேசியக் கொடியை ஏற்றாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டியவர்கள், இப்பொழுதாவது விழித்துக் கொண்டோமே என்று ஆறுதல் அடைய வேண்டியவர்கள், தேசியக் கொடி ஏற்றுவது என்கிற முடிவைக் கேலிப் பேசி விமர்சிக்க முற்பட்டதில் வியப்பில்லைதான். ஏனென்றால், இன்றைய காங்கிரஸ் தலைமைக்கு தேசியக் கொடியைப் பற்றியும், அதன் உணர்வுபூர்வமான முக்கியத்துவம் பற்றியும் தெரிந்திருக்க வழியில்லை.
"தாயின் மணிக்கொடி பாரீர்' என்று பாடிக் களித்த எட்டயபுரத்துப் புரட்சிக் கவி இருந்திருந்தால், இன்றைய காங்கிரஸ் தலைமையின் தேசியக் கொடி குறித்த விமர்சனத்தைக் கேட்டிருந்தால், இவர்களை அறம்பாடியே அழித்திருப்பான்!
தேசியக் கொடி விமர்சிக்கப்படும் அவலம் குறித்து மட்டுமல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்திருப்பதை நினைக்கும்போதும் தலைக்குனிவு ஏற்படுகிறது.