ஏழைகளுக்கு மட்டும் மானியம்!
பொருளாதாரக் கணக்காய்வு 2015-16 தந்துள்ள விவரங்களின்படி, சற்றொப்ப ரூ.1 லட்சம் கோடி மானியம் வசதியானவர்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த கணக்காய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அடுத்தவாரம் மத்திய நிதிநிலை அறிக்கை இந்த பரிந்துரைகளைக் கருத்தில்
பொருளாதாரக் கணக்காய்வு 2015-16 தந்துள்ள விவரங்களின்படி, சற்றொப்ப ரூ.1 லட்சம் கோடி மானியம் வசதியானவர்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த கணக்காய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அடுத்தவாரம் மத்திய நிதிநிலை அறிக்கை இந்த பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால், வசதி படைத்தோர் மானியப் பயன் அடையும் வழிமுறைகளைச் சிறிதேனும் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவே செய்வார்கள்.
பொருளாதாரக் கணக்காய்வின் பட்டியலில், வசதி படைத்தோர் உணவு, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், மின்சாரம், ரயில்வே கட்டணம், விமான பெட்ரோல், தேசிய சிறுசேமிப்புத் திட்டம் என ஆறு இனங்களில் பயனடைவதாக வரிசைப்படுத்துகிறது.
தொழில்துறைக்கு ஊக்குவிப்பதற்காக ஏற்றுமதி - இறக்குமதிக்கான சலுகைகள், வரி விலக்குகள் போன்றவை நீங்கலாக, சமூகத் திட்டங்களுக்காக அளிக்கப்படும் மானியங்களுக்காக மட்டும் ரூ.3.77 லட்சம் கோடி, அதாவது மொத்த வருவாயில் (ஜி.டி.பி.) 4.25% செலவிடப்படுகிறது.
ரயில்வே கட்டணங்களை உயர்த்தாமல் இருக்க ரூ.51,000 கோடி, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.23,746 கோடி, மண்ணெண்ணெய்க்கு ரூ.20,415 கோடி, யூரியா உரத்துக்காக ரூ.73,790 கோடி, அரிசி, கோதுமைக்கு (குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பொது விநியோகத் திட்டம்) ரூ.1,29,000 கோடி, பருப்பு வகைகள் விநியோகம் ரூ.158 கோடி, மின்கட்டணங்கள் ரூ.32,300 கோடி, குடிநீர் ரூ.14,208 கோடி, சர்க்கரைக்காக ரூ.33,000 கோடி என வரிவருவாயில் கணிசமான தொகை செலவிடப்படுகிறது.
ரயில் கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதால் ஏழைகளில் 28% பேர் மட்டுமே பயனடைகிறார்கள். மற்ற பயனாளிகளில் பெரும்பாலோர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் மற்றும் வசதி படைத்தோர்.
யூரியா மானியத்தைக் குறைக்க முடியாது. இதில் ஏழை விவசாயி, பணக்கார விவசாயி என்று பார்க்காமல் விலையைக் குறைத்து வழங்கி, உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இருப்பினும், விளைவிக்கப்படும் அரிசி, கோதுமை பொதுவிநியோகத்துக்கு வரும்போது அது முறையாகப் பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமாகச் சென்றடைவதில்லை. வழி இழப்பில் 15% காணாமல் போய்விடுகிறது. மீதமுள்ள அரிசி, கோதுமையில் 53% மட்டுமே ஏழை மக்களுக்குப் போய்ச் சேருகிறது. எஞ்சியுள்ள அரிசி கோதுமையை வசதி படைத்தவர்கள் வாங்குகிறார்கள் அல்லது அவர்கள் வாங்கியதாகக் கணக்கெழுதி கடைகளுக்கு விற்கப்படுகிறது. இந்த வகை மானியம் 1.29 லட்சம் கோடி!
இதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றால், எல்லா மாநிலங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தாக வேண்டும். ஆனால், பல மாநிலங்களில் இன்னும் முறையான பொது விநியோக முறையே நடைமுறையில் இல்லை எனும்போது, எப்படி உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது?
மின்கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதற்காக அரசு செலவிடும் மானியத் தொகை ரூ.32,300 கோடியில் பயனடையும் ஏழைகள் 10% மட்டுமே. நடுத்தரக் குடும்பங்களும் பயனடைகின்றன. அதே சமயம், 37% வசதி படைத்தோர் பயனடைகின்றனர்.
60% ஏழைக் குடும்பங்கள் பொதுக் குழாயில்தான் குடிநீரைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால், குடிநீருக்காக செலவிடப்படும் மானியம் ரூ.14,208 கோடி. வீட்டு இணைப்புபெற்ற நடுத்தர மற்றும் வசதி படைத்தோருக்குத்தான் இந்த மானியத்தின் பெரும்பலன் கிடைக்கிறது. அதேபோன்று மண்ணெண்ணெய்யில் 46% மட்டுமே ஏழைகளைப் போய்ச் சேருகிறது.
நேரடியாக மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை தற்போது சமையல் எரிவாயுவுக்கு மட்டுமே உள்ளது. இந்த நடைமுறை பல்வேறு முறைகேடுகளையும், போலி இணைப்புகளையும் தடுக்க உதவியுள்ளதே தவிர, மானியத்தின் அளவை முழுமையாகக் குறைக்க உதவிடவில்லை.
இந்த ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் சரக்குப் போக்குவரத்தின் கட்டணத்தை உயர்த்தியிருக்கலாம். வெளிச்சந்தையில் லாரிகளில் கொண்டு செல்லும் பொருள்களுக்கு ஆகும் செலவையும், ரயில்களில் கொண்டு செல்லப்படும் அதே அளவு எடைகொண்ட பொருள்களுக்கு ஆகும் செலவையும் ஒப்பீடு செய்தால் பெரும் இடைவெளி இருக்கவே செய்கிறது.
தேசிய சிறுசேமிப்புத் திட்டங்களை ஊக்குவித்து, அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்காகக் கூடுதல் வட்டி வழங்குகிறார்கள். இந்த வட்டியால் அரசுக்குக் கூடுதல் செலவு. தேசிய சிறுசேமிப்பு பத்திரங்களை வாங்குவோர் யாரும் ஏழைகள் அல்லர். வசதி படைத்தவர்கள் அல்லது நல்ல ஊதியம் பெறுவோர்தான் இத்தகைய முதலீடுகளைச் செய்து, வரி விலக்கு பெறுகின்றனர். இவர்கள் இரு பலன்களை ஒரு சேர அனுபவிக்கின்றனர். கூடுதலாக 0.5% வரை வட்டி வருவாய் கிடைக்கிறது. வரி விலக்கும் கிடைக்கிறது. இந்த பத்திரங்கள் முதிர்வடைந்து பணமாக மாற்றப்படும் வேளையில், இதை வருமானக் கணக்கில் சேர்ப்பதும் கிடையாது. இதனால் பல வகைகளிலும் அரசுக்கு இழப்பு.
இந்தியா போன்ற நாடுகளில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படைத் தேவைகள்கூட இல்லாத நிலையிலும், இன்னொரு மூன்றில் ஒரு பகுதியினர் நடுத்தர வர்க்கத்தினராக வயிற்றுக்கும் வாய்க்குமாக கௌரவமாக வாழ உழன்று கொண்டிருக்கும் நிலையிலும், மானியங்களை முற்றிலுமாக அகற்றிவிட முடியாது. அதேநேரத்தில் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது பழமொழி. ஏழைக்கு மட்டும் மானியம் கொடு என்கிறது பொருளாதார கணக்காய்வு!