உத்தரப் பிரதேச மாநில அரசின் பல்வேறு அலட்சியப் போக்குகளால் ஏற்படும் தீவினைப்பயன் பல உயிர்களை பலிகொள்வதென்பது வழக்கமாகிவிட்டது. இப்போது, மதுரா நகரில், ஜவாஹர் பாக் என்ற பொதுஇடத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றும் பணியில் கலவரம் ஏற்பட்டு, இதுவரை இரண்டு காவல் துறையினர் உள்பட 24 பேர் இறந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பூங்கா பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் தாற்காலிக குடிசை, கூடாரம் அமைத்துக்கொண்டு, ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இவர்களை அப்புறப்படுத்தும் பணியின்போது, காவல் துறையினர் கடுமையாக தாக்கப்பட்டனர். நகர காவல் கண்காணிப்பாளர் முகுல் துவிவேதி, தலைமைக் காவலர் சந்தோஷ் குமார் யாதவ் ஆகியோர் இத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
ஆஸாத் பாரத் வைதிக் வைசாரிக் கிராந்தி சத்யாகிரகி என்ற பெயரில், தங்களை நேதாஜி பிரிவு என்று சொல்லிக்கொள்ளும் இந்த அமைப்பினர், 2014-ஆம் ஆண்டு இந்த பூங்கா மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்காக வந்தவர்கள். இவர்களது கோரிக்கைகள் எந்த அரசாலும் ஏற்கப்பட முடியாதவை. தர்னா என்ற பெயரில் இந்தத் திடலுக்கு வந்தவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.
அவர்களை வெளியேற்றக் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பொது நல வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் இவர்களை அகற்றுவதற்காகக் காவல் துறையினர் அங்கு சென்றனர். நீதிமன்ற உத்தரவு இல்லையென்றால், அவர்கள் இந்த நடவடிக்கையையும்கூட எடுத்திருக்க மாட்டார்கள்.
காவல் துறையிடமிருந்து தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே விரட்டித் தாக்கினார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள் என்றால், இவர்கள் எத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோராகவும், சுற்றுவட்டார மக்கள் மற்றும் வணிகர்களுக்குத் தொல்லை தருபவர்களாகவும் இருந்திருக்கக்கூடும் என்று தெரிந்து கொள்ளலாம். இவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கியதைக் கண்டதும், எரிகிற நெருப்பில் நெய் ஊற்றுவது போல, இதில் பொதுமக்களும் சேர்ந்துகொண்டு, காவலர் இருக்கும் தைரியத்தில் தங்கள் கோபங்களை வெளிப்படுத்தியதும்கூட இது கலவரமாக வெடிப்பதற்குக் காரணமாக இருந்திருக்கும். பிரச்னையை எல்லாக் கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்தத் திடலிலிருந்து வெளியேறியவர்கள் கைவிட்டுச் சென்றதாக பெருமளவு ஆயுதங்கள், அதாவது கத்தி, 5 ரைஃபிள், 45 நாட்டுத் துப்பாக்கிகள், 178 ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றால் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் எத்தகையவர்கள் என்பதை உணர முடியும். இத்தகையவர்களைப் போராட்டம் நடத்தி முடித்தவுடன் வெளியேற்றாமல், இத்தனை நாள்களாக ஒரு மாநில அரசு வேடிக்கைப் பார்த்தது எதனால்? கலவரம் நடைபெற்ற இந்தத் திடலில் மகாராஷ்டிர மாநிலப் பதிவு எண் கொண்ட இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் யாருடையது, அவை எத்தனை காலமாக அங்கு இருந்தன என்பது குறித்து விசாரித்தால், இந்தக் கலவரத்துக்கு வேறு கோணங்களும் கிடைக்கக்கூடும்.
ஆக்கிரமிப்பு செய்து கடந்த இரு ஆண்டுகளாக ஓர் இடத்தில் தங்கி, பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கும் ஒரு பிரிவினர் குறித்தும், அவர்களின் செயல்பாடு, வாழ்க்கைமுறை என்ன என்பது பற்றியும் கண்காணிப்பு இல்லாமல் ஒரு காவல் துறை அந்த ஊரில் இயங்கியிருக்கிறது. ஆகவேதான், இவர்களிடம் இவ்வளவு ஆயுதங்கள் இருப்பது தெரியாமல் போய், வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராகப் பொறுப்பேற்ற நாள் முதலாக, காவல் துறையினர் மீதான தாக்குதல் மற்றும் காவலர் உயிரிழப்பு மும்மடங்கு அதிகரித்துள்ளதாகத் தேசிய ஆணையத்தின் குற்றப்பதிவுகள் குறிப்பிடுகின்றன. இதை வேறுவிதமாகச் சொல்வதென்றால், அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் வலுவாகவும் காவல் துறையினர் செயல்பட முடியாமலும் இருக்கின்றனர் என்று பொருள்.
ஆக்கிரமிப்புகளை எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்கிற கறாரான நடைமுறை எந்த மாநிலத்திலும், எந்த ஊரிலும் இல்லை. குறிப்பாக நகர்ப்புறங்களில் ஆக்கிரமிப்பு செய்வோருக்கு பாதுகாப்பாக அரசியல்வாதிகள் நிற்கிறார்கள். அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. நீதிமன்ற உத்தரவுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றவந்தால் அதற்குத் தடை உத்தரவு பெறுவதற்கு வழக்குரைஞரை நியமித்துத் தருவதும் இதே அரசியல்வாதிதான். இது உத்தரப் பிரதேச மாநிலம் என்றில்லை. தமிழ்நாட்டிலும்கூட இதே நிலைதான்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை, தனியார் நிறுவனம் அரசிடம் குத்தகைப் பெற்று, அந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் என்றால், நீதிமன்றங்களை நாடுவதில்லை. அவர்கள் இதே அரசியல்வாதிகளைத்தான் நாடுகிறார்கள். நள்ளிரவில் குடிசைகள் எரியும். மாற்று இடம், வாழ்வாதார நிதியுதவி கேட்டு போராட்டம் நடத்துவார்கள். அரசு தரும். அந்த இடத்தில் தனியார் கட்டடம் எழும்.
தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் உயிரிழப்புக்கு, கடந்த இரு ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்றாமல் வேடிக்கைப் பார்த்த மாநில அரசும், ஆட்சி செய்வோரும் பொறுப்பேற்றாக வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்கள் மக்கள் என்றாலும், அவர்களை பின்னின்று இயக்குவது அரசியல்வாதிகளே. ஆக்கிரமிப்புகளானாலும் விதிமீறல்களானாலும், யார் எவர் என்கிற பாரபட்சம் இன்றி சட்டம் தனது கடமையைச் செய்து தடுக்காமல் போனால், பிறகு அரசும் நிர்வாகமும் இருந்து என்ன பயன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.