தலையங்கம்

இடைத்தரகர் இல்லாத இந்தியா!

கவர்ச்சிகரமான பெயர்களில் புதிய புதிய திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி இன்னொரு இந்திரா காந்தி. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அறிவித்திருக்கும் எல்லா திட்டங்களும் முழுமையான செயல்பாட்டுக்கு வராவிட்டாலும், சில திட்டங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

ஆசிரியர்

கவர்ச்சிகரமான பெயர்களில் புதிய புதிய திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி இன்னொரு இந்திரா காந்தி. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அறிவித்திருக்கும் எல்லா திட்டங்களும் முழுமையான செயல்பாட்டுக்கு வராவிட்டாலும், சில திட்டங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

"ஜன்தன்' மூலம் ஒரே மூச்சில் இத்தனை கோடி வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அடித்தட்டு மக்களையும் வங்கிப் பரிமாற்றத்திற்குப் பழக்கப்படுத்த முடியும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. கடந்த மே மாதம் முடிய 22 கோடியே ஒரு லட்சத்து

37 ஆயிரத்து 796 ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.38,411.79 கோடி சேமிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சகம் தெரிவிக்கிறது.

குஜராத் முதல்வராக இருக்கும்போதிலிருந்தே, லஞ்சத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் பிரதமர் நரேந்திர மோடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை முன்மொழிந்து வந்தார். மாநிலத்தின் எல்லையோர வணிகவரிச் சோதனைகளில் தொடங்கி, அன்றாட மின்சார, குடிநீர், வீட்டுவரிகள்வரை இணைய சேவையை அறிமுகப்

படுத்தி வெற்றி கண்ட முதல் மாநிலம் அவரது தலைமையில் இயங்கிய குஜராத் தான்.

இப்போது பிரதமர் மோடி முன்வைத்திருக்கும் புதிய கோஷம் "இடைத்தரகர்கள் இல்லாத இந்தியா!'. அப்படியொரு நிலைமை உருவாகுமானால், வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான முதலீடு அரசிடமே தாராளமாக இருக்கும் என்பதால் தனியாரைச் சார்ந்திருக்காமல் கட்டமைப்பு வசதிகளை விரைவாகப் பெருக்க முடியும்.

இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே ஏழைகளையும் அவர்களது வாக்குகளையும் குறிவைத்து, மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன. இதற்காகப் பல லட்சம் கோடி ரூபாய்கள் அரசின் நிதியாதாரத்தி

லிருந்து செலவிடப்படுகின்றன. இதில் பிரச்னை என்னவென்றால், மக்கள் நலத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் அரசு வருவாயில் கணிசமான பகுதி உண்மையான பயனாளிகளைப் போய்ச் சேராமல், இடையில் உள்ளவர்களால் உறிஞ்சப்பட்டு விடுகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் தெரிவித்த ஒரு கருத்து இன்றைக்கும்கூடப் பொருந்தும். ஏழைகளின் நலனுக்காக அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும் வெறும் 17 காசுகள் மட்டுமே அவர்களைப் போய்ச் சேர்கிறது என்றும், மீதமுள்ள தொகை அரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோரால் சுரண்டப்படுகிறது என்றும் ராஜீவ் காந்தி சொன்ன அதே நிலைமைதான் இன்றுவரை தொடர்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில்  இந்த நிலைமையை மாற்ற எந்தவோர் அரசும் முனைப்புக் காட்டவில்லை. முந்தைய மன்மோகன் சிங் அரசு ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்த முற்பட்டது, இடைத்

தரகர்களை அகற்றி நிறுத்தும் முயற்சிக்கான தொடக்கம். ஆனால், தனிநபர் சுதந்திரத்தை இது பாதிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்துவதற்குத் தடை வாங்கி விட்டனர். நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன், முந்தைய மன்மோகன் சிங் அரசின் ஆதார் அட்டைத் திட்டத்தைக் கைவிட்டுவிடாமல் அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முற்பட்டதன் விளைவு, இப்போது இடைத்தரகர்களை அகற்றி நிறுத்தும் பணி சுலபமாகி இருக்கிறது.

இந்தியாவில் பல கோடி ஏழைகள், மக்கள் நலத் திட்டத்தால் பயன்பட்டதுபோல, பல லட்சம் இடைத்தரகர்களும் இதனால் பெரும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, செல்லிடப் பேசி மூன்றையும் நரேந்திர மோடி அரசு இணைத்து இடைத்தரகர்களையும், போலிப் பயனாளிகளையும் அப்புறப்படுத்தி விட்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடி போலிப் பயனாளிகளை அகற்றி, சமையல் எரிவாயு மானியத்தில் மட்டும் அரசு ரூ.21,000 கோடியைச் சேமித்திருக்கிறது. அதேபோல, தில்லி, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் 1.6 கோடி போலி குடும்ப அட்டைகளைக் களையெடுத்துப் பொது விநியோக முறையில் ரூ.10,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. நேரடி வங்கிக் கணக்குத் திட்டத்தின் மூலம் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 2015-ஆம் ஆண்டில் மட்டும் அரசுக்கு ரூ.3,000 கோடி சேமிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்போது இணையதளம் சார்ந்த தேசிய விளைபொருள் சந்தை என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவிலுள்ள 200 விவசாய விளைபொருள் மொத்த விற்பனைச் சந்தைகள் இணையதளத்தின் மூலம் இணைக்கப்பட இருக்கின்றன. இதற்கு சில மாநில அரசுகள், தங்களது வரி வருவாய் பாதிக்கும் என்பதால் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன என்றாலும், இணையம் மூலம் சந்தைகள் இணைக்கப்படும் நிலைமை ஏற்பட்டால், விவசாயிகள் தங்கள் பொருள்களை இந்தியாவின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இடைத்தரகர்களே இல்லாமல் விற்பனை செய்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு விடும்.

அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்கம் உள்ளிட்ட ஏலங்களை இணையம் மூலம் நடத்துவதால் இப்போது அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல, மக்கள் நலத் திட்டங்கள் அனைத்திலும் தொழில்நுட்பத்தின் உதவியால் இடைத்தரகர்களே இல்லாத நிலைமை ஏற்பட்டால், அது நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் வரிப்பணம் விரயமாகாமல் தடுக்கப்படும். இந்திய மக்களின் நீண்டநாள் கனவான, பிரதமர் நரேந்திர மோடியின் "இடைத்தரகர்கள் இல்லாத இந்தியா' என்கிற அறிவிப்பை தொழில்நுட்பம் மூலம் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இனையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

இது தெரியுமா? பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

SCROLL FOR NEXT