தலையங்கம்

சமூக அவலம் தொடர்கிறது!

மனித இனம் கடந்த ஒரு நூற்றாண்டில் இதுவரை இல்லாத வளர்ச்சியைக்

ஆசிரியர்

மனித இனம் கடந்த ஒரு நூற்றாண்டில் இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதிலும் குறிப்பாக, இரண்டாவது உலகப் போருக்குப் பின் உலகம் மனிதவள மேம்பாட்டிலும், அறிவியல் சாதனைகளிலும், வாழ்க்கைத் தரத்திலும் கனவுகாணா உச்சத்தை எட்டியிருக்கிறது. இவ்வளவு இருந்தும், உலகின் பல பகுதிகளிலும் வறுமையும், நோயும், அடிமைத்தனமும் மண்டிக் கிடக்கிறது என்பதுதான் வேதனையளிக்கிறது.
வெரிங்க் மேப்பின்கிராப்ட் என்கிற மனித உரிமை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை திடுக்கிட வைக்கிறது. வால்மார்ட்டில் தொடங்கி, நமது ஊர் பல்பொருள் அங்காடிகள் வரையிலான சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்களில் அடிமைகளாக ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது குறித்து அந்த மையம் விரிவான ஆய்வு நடத்தியதில் ஏறத்தாழ 60% நாடுகளில் இந்த முறை காணப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது.
கூலி வேலைக்காக ஆள் கடத்துதல், அடிமைகளைக் கங்காணி முறையில் அழைத்துச் சென்று வேலைக்கு விடுதல் போன்றவை, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 198 நாடுகளில் 15 நாடுகளில் காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலகிலேயே மிக மோசமான அடிமைத் தொழிலாளர் முறை வட கொரியாவில் காணப்படுவதாவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
"வாக் ப்ரீ பவுண்டேஷன்' என்பது மனித உரிமைப் பாதுகாப்பு குழுக்களில் ஒன்று. இந்தக் குழு ஆண்டுதோறும் உலகில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, எங்கெல்லாம் தவறுகள் நடக்கின்றன என்பவற்றைப் பட்டியலிட்டு வெளிச்சம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதன் 2016-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளாவிய அளவில் ஏறத்தாழ 4.6 கோடி பேர் தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் பணி புரிகின்றனர். இவர்களில் பலரும் பிறப்பால் அடிமைகளாக்கப் பட்டவர்கள் என்று தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
அடிமைத்தனம் என்பது முன்பு இருந்ததுபோல அல்லாமல் சிறிது மாற்றமடைந்திருக்கிறது. அடிமைகள் விற்கப்படுவதில்லை. அவர்கள் ஆடு மாடுகளைப்போல நடத்தப்படுவதில்லை. ஆனால், தொழிலாளர் நலச் சட்டங்கள் அங்கீகரிக்கும் எந்தவித உரிமைகளும் வழங்கப்படாமல், நவீன அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுகிறார்கள். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தரப்படுகிறதே தவிர, மற்ற எல்லா வகையிலும் அவர்கள் சுரண்டப்படுவதுடன், கட்டாயத் திருமணம், பாலியல் வன்முறை ஆகியவற்றை அனுபவித்தாக வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள்.
மீன் பிடித்தல், கனிமச் சுரங்கங்கள், நூற்பு, ஆயத்த ஆடைகள், தொடர் சில்லறை வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில்தான் இதுபோன்ற தொழிலாளர் சட்டம் மீறப்படுகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு இந்தப் பிரச்னை குறித்த விமர்சனங்களும், சமூக அக்கறையும் பிரிட்டனில் எழுந்தன. பிரிட்டன் அடிமைத்தனத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றி, 36 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமான பற்றுவரவு உள்ள நிறுவனங்கள், அவர்களது நிறுவனங்களில் அடிமைத் தொழிலாளர்கள் இல்லாமல் இருக்க என்ன செய்கிறார்கள் என்று ஆண்டுதோறும் அறிக்கை அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
வட கொரியாவுக்கு அடுத்தபடியாக, சூடான், தெற்கு சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் அதிகமான அடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்குப் பயன்படும் "கோபால்ட்' என்கிற கனிமவளம் வெட்டி எடுக்கப்படும் சுரங்கங்களில் இந்த அடிமைத் தொழிலாளர்கள் அதிகமாகக் காணப்படுகிறார்கள்.
அடிமைத் தொழிலாளர்கள் அதிகமாக இல்லாத பகுதியாக ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்தான் காட்சியளிக்கின்றன. இங்கேயும்கூட பல்பொருள் தொடர் வணிக நிறுவனங்களில், அடிமைகளாக இல்லாவிட்டாலும், அதற்கு நிகரான நிலையில் அடித்தட்டு விற்பனை ஊழியர்கள் நடத்தப்படுகிறார்கள் என்று அறிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன. பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் அடிமைத் தொழிலாளர்கள் முறையைக் கணிசமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன என்று தெரிகிறது.
உலக நாடுகளில் நிலைமை இதுவென்றால், இந்தியாவின் நிலைமை மெச்சிக் கொள்ளும்படியாக இல்லை. ஏறத்தாழ 1.8 கோடி பேர் கொத்தடிமைகளாக,பிச்சைக்காரர்களாக, பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதுடன் இன்னொரு அதிர்ச்சியான செய்தியையும் அந்த அறிக்கை கூறுகிறது. பல தீவிரவாதக் குழுக்கள் சிறுவர் சிறுமியரைத் தங்களது தீவிர வாதச் செயல்களுக்கும், அரசுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் பயன்படுத்துகின்றன என்பதுதான் அது.
வாக் ப்ரீ பவுண்டேஷனின் அறிக்கையின்படி, அதிக அளவிலான அடிமைகள் உள்ள 167 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 1.4% பேர் ஏதாவது ஒருவிதத்தில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.
1976-இல் இந்தியா கொத்தடிமை முறையை ஒழிக்கச் சட்டம் இயற்றியது என்றாலும்கூட இன்னும் சில சமூகவிரோதக் கும்பல்கள் பிச்சைக்காரர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கட்டாயப் பாலியல் தொழிலாளர்கள் ஆகியவர்களை வைத்துத் தொழில் நடத்தி வருகின்றன. வீட்டு வேலை, பாலியல் தொழில், செங்கல் சூளைகள், ஜவுளித் தொழில், தோட்டங்கள், சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில்தான் மிக அதிகமான அடிமைத் தொழிலாளர்கள் பணியிலமர்த்தப்படுகின்றனர்.
இந்த சமூக அவலத்தைச் சட்டம் இயற்றுவதால் மட்டும் தடுத்துவிட முடியாது. இது குறித்த விழிப்புணர்வு சமூக அக்கறையுள்ள அனைவருக்கும் ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT