தலையங்கம்

நிதிநிலை அறிக்கை 2017 - V

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல்

ஆசிரியர்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் நான்காவது நிதிநிலை அறிக்கை இது. அவருக்கு முதல் நிதிநிலை அறிக்கையில் வெளிப்படுத்திய இலக்குகளை எட்ட இன்னும் ஒரே ஒரு நிதிநிலை அறிக்கை தான் இருக்கிறது. அந்த கவனத்துடன் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
நரேந்திர மோடி அரசு, நிதிப் பற்றாக்குறையையும், வருவாய் பற்றாக்குறையையும் திறமையாக நிர்வகிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த ஆட்சியின் மிகப்பெரிய பலவீனம் இதுவாகத்தான் இருந்தது. அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக குறுகியகால கண்ணோட்டத்துடன் நிதி நிர்வாகத்தைக் கைவிடுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சியிலோ, அந்நிய முதலீட்டை ஈர்ப்பதிலோ சுணக்கம் ஏற்படுவதும் நல்லதல்ல.
இந்த நிதிநிலை அறிக்கையின் முழுமையான முனைப்பு ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியாகத்தான் இருக்கிறது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசி நிதிநிலை அறிக்கையான 2013 - 14 ஆண்டு அறிக்கையில், உணவு மற்றும் உரத்திற்கான மத்திய அரசின் மானியம் ரூ.1,59,339 கோடி. அதே ஆண்டில் விவசாயம் மற்றும் ஊரகத் துறை அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீடு வெறும் ரூ.92,642 கோடி. மானியத்தின் அளவு, ஒதுக்கீட்டின் அளவைவிட அதிகம்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நரேந்திர மோடி அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்த இடைவெளி குறைந்திருக்கிறது என்பது ஆறுதலான முன்னேற்றம். உணவு, உரத்துக்கான மானியம் ரூ.2,15,339 கோடி. ஊரக விவசாயம் மற்றும் உரத்துக்கான ஒதுக்கீடு ரூ.1,58,784 கோடி. ஆனால், பெரிய அளவு குறைந்திருக்கிறதா என்றால் இல்லை.
நெல், கோதுமை போன்ற உணவுப் பொருள்களுக்கும், விவசாயிகளின் பயன்பாட்டுக்கான உரங்களுக்கும் மானியமே வழங்கப்படக்கூடாது என்பதல்ல. அந்த மானியங்கள் போய்ச் சேர வேண்டியவர்களை முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்பதுதான் கேள்வி. அதை உறுதிப்படுத்தினால் மட்டுமே விவசாயத்திற்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவும் ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணம், ஊரக வளர்ச்சிக்கு உதவும்.
சாலைகள், மின் வசதி, வாகனம், தகவல் தொடர்பு, தொலைத்தொடர்புக் கட்டமைப்பு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் என்று எல்லா வகையிலும் மிகப்பெரிய முதலீடு ஊரக வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. இந்த விஷயத்தில் மோடி அரசின் செயல்பாடு குறைகூற முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை. ஆனால், பாராட்டும்படியாக இருக்கிறது என்றும் சொல்லிவிட முடியவில்லை.
கிராமப்புற சாலைகளுக்காக இந்த நிதியாண்டுக்கான ஒதுக்கீடு ரூ.19,000 கோடி. இது 2013 - 14இல் கடந்த ஆட்சியில் செய்த ரூ.9,806 கோடியைப்போல இரு மடங்கு. அதேபோல, "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' எனப்படும் கிராமப்புற வீடுகள் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.23,000 கோடி, 2013 - 14இல் ஒதுக்கப்பட்ட ரூ.12,982 கோடியைப்போல இரு மடங்கு. இதிலெல்லாம் குறைகாண முடியாது. அதே நேரத்தில், எதிலெல்லாமோ மறைமுக மானியங்களைக் குறைத்து பயனாளிகளுக்கு நேரடியாக மானியங்களை வழங்கும் முறையை இதிலும் பின்பற்ற அரசு ஏன் தயங்குகிறது என்பதுதான் புரியவில்லை.
2014-இல், தனது முதல் நிதிநிலை அறிக்கையில் நிதிப்பற்றாக்குறையை மொத்த உற்பத்தி விகிதத்தில் (ஜி.டி.பி.) 3%-ஆகக் குறைப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி கூறியிருந்தார். அப்படி இலக்கு நிர்ணயிக்க யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை. அவராகவே நிர்ணயித்துக் கொண்ட இலக்கு அது. கடந்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச கச்சா எண்ணைய் விலை மிகப்பெரிய சரிவைக் கண்டிருக்கிறது. இருந்தும்கூட மத்திய - மாநில அரசுகளின் மொத்த நிதிப்பற்றாக்குறை 6 முதல் 7 விழுக்காடு என்கிற நிலைமைதான் தொடர்கிறது.
உலக அளவில் இது மிக மிக அதிகமான அளவு. இந்த அளவை எட்டிய பல நாடுகள் திவாலாகி, மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இந்தியா அந்த நிலைமைக்குப் போகாமல் இருப்பதற்குக் காரணம் அதிகரித்த சேமிப்பும், வளர்ச்சியும். அவற்றை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. உடனடியாக இது குறித்து கவனம் செலுத்தாவிட்டால், வட்டி விகிதம் அதிகரித்து கடுமையான விலைவாசி உயர்வையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் நாடு எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்.
ஆமாம், 2014 நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, செலவின நிர்வாகக் குழு அமைக்கப் போவதாகவும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கப் போவதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதை அவருக்கு யாராவது நினைவுபடுத்தினால் நல்லது.
அருண் ஜேட்லி தவறவிட்ட அருமையான வாய்ப்பு, செலாவணி செல்லாததாக்கிய முடிவை அரசியல் ஆதாயமாக்காமல் விட்டது. ரூ.500, 1000 செலாவணியில் அரசுக்குத் திரும்பி வராதது வெறும் 2% முதல் 3%-ஆக இருந்தாலும்கூட அதன் மொத்த மதிப்பு ரூ.30,000 கோடி முதல் ரூ.45,000 கோடி வரை. தானாக முன்வந்து கணக்குக் காட்டும் திட்டத்தில் கிடைத்த வரி வருவாயும் இருக்கிறது. இதிலிருந்து 26 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளின் மூலம் சில ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் அரசு மக்களுக்கு அளித்திருக்குமாயின், அதனால் கிடைத்திருக்கும் அரசியல் ஆதாயம் நினைத்துப் பார்க்க முடியாதது.
அதுபோன்ற புத்திசாலித்தனங்கள் எதுவும் இல்லாத, திறமையான கணக்குப் பிள்ளையின் சாமானிய நிதிநிலை அறிக்கை இது!
(முற்றும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT