தலையங்கம்

தேர்தலும் நிதிநிலை அறிக்கையும்!

உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடுத்திருக்கும் முடிவால், நாளை மறுநாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்கிற ஐயப்பாடு விலகிவிட்டிருக்கிறது.

ஆசிரியர்

உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடுத்திருக்கும் முடிவால், நாளை மறுநாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்கிற ஐயப்பாடு விலகிவிட்டிருக்கிறது. ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடக்க இருப்பதால், மத்திய அரசு பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையைத் தள்ளிப்போட வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. சில மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது என்பதற்காக தேசத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்துவிடக் கூடாது என்கிற கருத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
நிதிநிலை அறிக்கை என்பது மிகவும் முக்கியமான நிர்வாக நடைமுறை. வரிகள் விதிப்பது, அகற்றுவது என்பது அரசு நிர்வாகத்தின் இன்றியமையாத, தவிர்க்க முடியாத நடைமுறை. உச்சநீதிமன்றத்திற்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ இதில் தலையிடவோ கருத்துக் கூறவோ இடமில்லை என்பதுதான், அரசியல் சாசனம் வகுத்திருக்கும் வரம்பு.
2012-இல் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடந்தபோது, அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நிதிநிலை தாக்கல் செய்வதை மார்ச் 16-ஆம் தேதி வரை ஒத்தி வைத்தது. அதைச் சுட்டிக்காட்டித்தான் இப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதைத் தள்ளிப் போடும்படி கோரிக்கை வைத்தன.
கடந்த முறைபோல அல்லாமல், இந்தத் தடவை ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் ஒரு மாதத்திற்கும் அதிகமான கால அவகாசத்தில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு, பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு மார்ச் 8-ஆம் தேதிதான் முடிவடைகிறது. மத்திய அரசு ஏற்கெனவே, நிதிநிலை அறிக்கையை வழக்கமாகத் தாக்கல் செய்யும் பிப்ரவரி மாதம் கடைசித் தேதியிலிருந்து மாற்றி, பிப்ரவரி 1-ஆம் தேதியே தாக்கல் செய்வது என்று முடிவெடுத்து விட்டிருக்கிறது. அதுதான் பிரச்னைக்கான அடிப்படைக் காரணம்.
உலகிலுள்ள 156 நாடுகளில் ஜனவரி முதல் தேதியிலிருந்து நிதியாண்டு பின்பற்றப்படுகிறது. அதற்கேற்றாற்போல நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியாண்டை மாற்றாமல், நிதிநிலை அறிக்கையை ஒரு மாதம் முன்னதாகத் தாக்கல் செய்து, ஏப்ரலில் நிதியாண்டு தொடங்கும்போதே, ஒதுக்கீடுகள் குறித்து முழுமையாக தெரிவிப்பதற்கும், தாமதமில்லாமல் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்குவதற்கும் வழிவகுப்பது என்று அரசு தீர்மானித்தது.
நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்வது என்கிற நரேந்திர மோடி அரசின் முடிவுக்குப் பின்னால், நிர்வாகத் தேவையைவிட அரசியல்தான் அதிகம் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் வாக்குப்பதிவில், நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் பல சலுகைகளும், அறிவிப்புகளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர்களது அச்சம். இது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்குத் தேர்தலில் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.
பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துகொள்ள அனுமதி வழங்கி இருக்கும் தேர்தல் ஆணையம், சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களை மட்டுமே குறிவைத்து எந்தவிதமான திட்டங்களையோ, சலுகைகளையோ நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கக்கூடாது என்றும், இந்த மாநிலங்களில் மத்திய அரசு செய்திருக்கும் சாதனைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து எதுவும் குறிப்பிடக்கூடாது என்றும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கை ஆளும்கட்சியின் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அது ஒட்டுமொத்த இந்தியாவை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் அச்சப்படத் தேவையில்லை.
ஒவ்வொரு முறை சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்படும்போதும், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமே ஸ்தம்பித்து விடுகிறது. அனைத்து வளர்ச்சிப் பணிகளும் அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஸ்தம்பித்து விடுகின்றன. எந்தவித முடிவையும் எடுக்க முடியாமல், திட்டங்களை அறிவிக்கவோ நிறைவேற்றவோ முடியாமல் ஆட்சியாளர்கள் முடக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு மாநிலத்தில், அல்லது சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. 2014-இல் ஒரு மாதமும், 2015-இல் இரண்டு மாதமும், 2016-இல் இரண்டரை மாதமும் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது. இந்த ஆண்டும் ஒரு மாதத்துக்கு மேல் நீண்டு நிற்கிறது. புதிய திட்டங்களை அறிவிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் உரிமையை, மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுக்காக முடக்குவது என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும்? என்பதுதான் அந்தக் கேள்வி.
மத்திய அரசின் ஐந்தாண்டுப் பதவிக் காலத்தில் ஒன்பது மாதங்கள் அரசு செயலற்றுப் போவது மிகப்பெரிய அவலம். இதை அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள்; ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டார்கள். உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் வரம்பை உணர்ந்து செயல்பட்டிருப்பதுபோல, நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவார் என்று எதிர்பார்ப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT