தலையங்கம்

வெள்ளை மாளிகையில் மோடி!

ஆசிரியர்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி வாஷிங்டனில் சந்தித்ததற்கும், அதிபர் டொனால்ட் டிரம்புடன் இன்று சந்திப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. அதிபர் பராக் ஒபாமாவின் அணுகுமுறையிலிருந்து முற்றிலுமாக வேறுபடுபவர் இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பதால் இந்த சந்திப்பு எப்படியிருக்கப் போகிறது என்பது குறித்து இரு தரப்பினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. "முதலில் அமெரிக்கா' என்கிற கொள்கை முடிவுடன் அவர் எடுத்திருக்கும் முடிவுகள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்க நட்பு நாடுகள் கூட்டணியான "நேட்டோ'விலுள்ள நாடுகளுடனான அமெரிக்காவின் அணுகுமுறை குறித்த மறுசிந்தனை, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவின் விலகல் தொடங்கி பல முக்கிய முடிவுகளை டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
அதிபர் டிரம்ப் பதவியேற்று ஐந்து மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருக்கிறார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் அதிபர் டிரம்பின் விருந்தினராக இரண்டு நாள் குளிர்கால வெள்ளை மாளிகையில் தங்கியிருந்தார். ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அதிபர் டிரம்ப்பின் விருந்தினராக இருந்தது மட்டுமல்லாமல் அவருடன் கோல்ப் விளையாடியபடி தனிமையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்துப் பேச முடிந்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் குடியேறிய அடுத்த சில நாட்களிலேயே சந்தித்தார். வியட்நாம், ஜோர்டான், ஈராக், துருக்கி ஆகிய நாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபரை ரியாத்தில் சந்தித்தனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அமெரிக்க அதிபர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வித்தியாசமான தனித்துவமிக்க வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடிப்பவர். இரண்டு தலைவர்களும் அவரவர் நாடு குறித்துத் தெளிவான வெளிவிவகாரக் கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள். அதனால் அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் சந்திக்கும்போது அமெரிக்கா - இந்தியாவுக்குள்ள வெளிநாட்டு கொள்கையில் எவைஎவை முன்னுரிமை பெறுகின்றன எவையெல்லாம் கருத்து வேறுபாடுக்கு உட்படும் என்பது தெரிய வரும்.
மோடி ஒபாமா காலகட்டத்தில் இருந்த இந்திய அமெரிக்க உறவு அதேபோல தொடர்வது என்பது நிச்சயமாக இயலாது. அதேநேரத்தில் ஒபாமா நிர்வாகத்தைப் போல அல்லாமல் இந்திய - பாகிஸ்தான் உறவு குறித்த அமெரிக்காவின் அணுகுமுறையில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. பாகிஸ்தானின் ஆதரவுடனான பயங்கரவாதத்திற்கு எதிராகவும், எல்லை கடந்த பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதையும் அதிபர் டிரம்ப் தெளிவாகவே எடுத்துரைத்திருக்கிறார். இந்த ஒரு பிரச்னையைத் தவிர ஏனைய பிரச்னைகளில் கருத்தொற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.
அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் இரண்டு முறை மோடியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அதேபோல தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை அனுப்பியிருக்கிறார். இதுஒருபுறம் இருக்க இன்னொருபுறத்தில் இந்தியாவின் இறக்குமதிக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருப்பதுடன் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகும்போது இந்தியா அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டாலர்களை பெறுவது குறித்துக் கடுமையாக விமர்சனமும் செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் வேலை தேடிச் செல்லும் இந்திய தொழில்நுட்பத் துறையினருக்கு வழங்கப்படும் குடியேற்றம் மற்றும் நுழைவு அனுமதி குறித்து கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் டிரம்ப் - மோடி சந்திப்பு இன்று நடைபெற இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. 2006-இல் வெறும் 45 பில்லியன் டாலராக (சுமார் ரூ.2,90,242 கோடி) இருந்த வர்த்தகப் பரிமாற்றம் 2016-இல் 115 பில்லியன் டாலராக (சுமார் 7,41,730 கோடி) அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்தான இறக்குமதிக்கும் இந்தியாவிலிருந்தான ஏற்றுமதிக்குமான வித்தியாசம் 2006-இல் 12,7 பில்லியன் டாலராக (ரூ.81,912.84 கோடி) இருந்தது, 2016-இல் 30.8 பில்லியன் டாலராக (ரூ.1,98,654.76 கோடி) இந்தியாவுக்கு சாதகமாக உயர்ந்திருக்கிறது. இந்த சந்திப்பை நமது ஏற்றுமதியை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்வது பிரதமர் மோடியுடைய திறமையைப் பொறுத்தது.
அமெரிக்க அதிபருடனான இந்த சந்திப்பு ஹெச்1பி விசா விவகாரம், பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, பயங்கரத்திற்கு எதிராக இணைந்து பணியாற்றுவது, அணுசக்தித் துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இரு நாடுகளுக்குமிடையே தெளிவை ஏற்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடியைத் தனது உண்மையான நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருப்பது உளப்பூர்வமானதா, உதட்டளவு வார்த்தையா என்பது ஹெச்1பி விசா விவகாரத்தில் இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா எடுக்கும் முடிவிலிருந்து வெளிப்படும்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியவர்களை விட அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவராக பிரதமர் நரேந்திர மோடி மாறினால் இந்திய - அமெரிக்க உறவு புதிய பாதையில் பயணிக்கக் கூடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT