முடிவு சரிதான்!
தில்லியிலுள்ள செங்கோட்டை உள்ளிட்ட 22 வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களின் பராமரிப்பை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.
தில்லியிலுள்ள செங்கோட்டை உள்ளிட்ட 22 வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களின் பராமரிப்பை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. 'நினைவுச் சின்ன நண்பர்கள்' என்றழைக்கப்பட இருக்கும் இந்த நிறுவனங்கள் நினைவுச் சின்னங்களைச் சுற்றியிருக்கும் பகுதிகளை அழகுபடுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளப் பணிக்கப்படுகின்றன. அதன் முதல் கட்டமாக 'டால்மியா பாரத்' என்னும் அமைப்பு தில்லி செங்கோட்டையை பராமரிக்க மத்திய சுற்றுலா துறையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
'நினைவுச் சின்னங்களை தத்தெடுத்துக் கொள்ளுதல்' என்கிற திட்டத்தின்கீழ் தனியார் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் நினைவுச் சின்னங்களைச் சுற்றி சுற்றுலா பயணிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து பராமரிக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் முதலில் 22 நினைவுச் சின்னங்களையும், அதைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள 93 முக்கியமான நினைவுச் சின்னங்களையும் இதுபோன்ற தனியார் அமைப்புகளிடம் பராமரிப்புக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அரசு - தனியார் கூட்டு முயற்சியான இந்தத் திட்டத்தில் பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய கார்ப்பரேட் சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்திக் கொள்ளவும் இது வழிகோலுகிறது. நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க முன்வரும் 'நினைவுச் சின்ன நண்பர்கள்' தங்களது நிறுவனத்தின் இலச்சினையை பயன்படுத்தி அந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றி விளம்பரப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன.
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட செங்கோட்டை, தனியாருடைய பராமரிப்புக்குத் தரப்படுவது சரிதானா என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. சர்வ வல்லமை படைத்த அரசு நிர்வாகத்தால் நமது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நினைவுச் சின்னங்களைக்கூட பராமரிக்கவும் பாதுகாக்கவும் முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
தேசத்தின் மீதான அக்கறையும் தனியாருடைய நோக்கமும் இதுபோன்ற செயல்பாட்டில் இணைந்து போவதில்லை என்பது என்னவோ உண்மைதான். தனியாருடைய முனைப்பெல்லாம் தங்களது ஆதாயத்தைப் பெருக்குவதிலும் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதிலும்தான் இருக்குமே தவிர, இதுபோன்ற நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் முனைப்புடனான
அக்கறை இருக்காது என்பதை நாம் மறுக்க முடியாது.
அதேநேரத்தில், செங்கோட்டையைப் பொருத்தவரை, பராமரிப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் டால்மியா பாரத் குழுமம், செங்கோட்டையைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் மட்டும்தான் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளைப் பெருக்குவதில் செயல்பட அனுமதிக்கப்படுமே தவிர, முக்கியமான பகுதிகள் இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில்தான் தொடரும் என்பது அரசு தரும் விளக்கம்.
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 4,000 நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. இந்த நினைவுச் சின்னங்களின் பராமரிப்பு மிகவும் மோசமானதாக இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நினைவுச் சின்னங்களில் பல பராமரிப்பு இல்லாமல் அழிந்துகொண்டிருக்கின்றன. பல முக்கியமான நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. செங்கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியமான நினைவுச் சின்னங்களில்கூட போதுமான கழிப்பறை வசதிகளும், சுத்தமான சுற்றுப்புறமும் இல்லாத நிலைமை காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது.
கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட், இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள கொலீசியம் உள்ளிட்ட எத்தனையோ நினைவுச் சின்னங்கள் தனியார் பராமரிப்பில் விடப்பட்டிருக்கின்றன. சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜெ. அல்போன்ஸ் கூறுவதுபோல, உலகளாவிய அளவில் சுற்றுலா பயணிகளைக் கவர வேண்டுமானால் அதற்கு ஏற்றாற்போல நமது சுற்றுலாத் தலங்கள் பராமரிக்கப்பட்டாக வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில் அரசுத்துறை அதிகாரிகளின் பராமரிப்பில் நமது சுற்றுலா மையங்கள் எந்த அளவுக்கு வாய்ந்த வசதிகளைப் பெற்றிருக்கின்றன என்பதை யோசித்துப் பார்த்தால், அரசின் இந்த முடிவை நாம் குறைகூற முடியாது.
ஆண்டுதோறும் சுற்றுலா ரூ.15.24 லட்சம் கோடி வருவாய் ஈட்டித்தருகிறது. 2017-இல் இந்திய ஜிடிபி-யில் 9.4 % சுற்றுலாவின் பங்களிப்பு. ஏறத்தாழ 4 கோடி பேர் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சுற்றுலாவால் வாழ்வாதாரம் பெறுகிறார்கள். இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 8% சுற்றுலாத் துறையின் பங்களிப்பு. ஆண்டொன்றுக்கு 6.9% அளவில் சுற்றுலா வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற நிலையில், இந்தியாவிலுள்ள அத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பராமரித்து, வசதிகளைப் பெருக்கி, தரம் உயர்த்தியாக வேண்டும்.
மத்திய அரசின் இந்த முயற்சியை முழுமனதுடன் வரவேற்க முடியாவிட்டாலும், இந்த முயற்சிக்குப் பின்னால் இருக்கும் அரசின் நோக்கத்தையும் அதன் மூலம் பெறப்படும் நன்மையையும் சிந்தித்துப் பார்க்கும்போது, காலத்தின் தேவையைக் கருதி எடுக்கப்பட்டிருக்கும் முடிவு இது என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது. சுற்றுப்புறத்தின் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் அதேநேரத்தில், நினைவுச் சின்னங்களின் பராமரிப்பு இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் அரசு கவனமாக இருக்க வேண்டும்.