முகப்பு
தலையங்கம்

மீண்டும் ட்ரூடோ!| கனடாவில் இரண்டாவது முறையாக  ஆட்சி அமைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறித்த தலையங்கம்

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:29 AM
பகிர்:

கனடாவில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பலம் பெறவில்லை என்றாலும், அதிக இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 
அதனால், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் சிறுபான்மை அரசு அமைய இருக்கிறது. 
338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களை வென்றிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களையும், கனடா வாழ் இந்தியரான ஜக்மீத் சிங்கின் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி 24 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. 
கனடாவில் சிறுபான்மை அரசு அமைவது புதிதொன்றுமல்ல. 1950-ஆம் ஆண்டு முதல் கனடாவில் நடந்த 20 நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒன்பது தேர்தல்களில் சிறுபான்மை அரசுகள்தான் அமைந்தன. அவை பெரும்பான்மை அரசுகளைவிட சிறப்பாகச் செயல்படவும் செய்தன. ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் ஆவதற்கு முன்னால் ஆறு ஆண்டுகள் கன்சர்வேட்டிவ் கட்சியின் சிறுபான்மை அரசு ஆட்சியில் இருந்தது. 
2015-இல் ஸ்டீபன் ஹாப்பர் தலைமையில் அமைந்த ஒன்பது ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1968 முதல் 1984 வரை லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடாவின் 15-ஆவது பிரதமராகவும் இருந்த பியரி ட்ரூடோவின் மகனான ஜஸ்டின் ட்ரூடோ, மிகுந்த மக்கள் செல்வாக்குடன் 2015-இல் கனடாவின் 23-ஆவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ஜஸ்டின் ட்ரூடோ உணர்ச்சிகரமான மேடைப் பேச்சாளர் அல்ல. ஆனால், அவருடைய தனிப்பட்ட கவர்ச்சியும், உற்சாகமும் மக்கள் செல்வாக்கை பெற்றுத் தந்தன. 2015-இல் அவர் அறிவித்த தாராளவாதம் (லிபரலிஸம்), சுற்றுச்சூழல் மீதான அக்கறை, பாலியல் சமத்துவம், கலாசார பன்முகத்தன்மை, இனவேற்றுமையின்மை ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தன. உலகம் முழுவதும் குடியேற்றத்துக்கு எதிராகவும், பெரும்பான்மை இனத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதிலும் முனைப்புக் காட்டிய நேரத்தில், ஜஸ்டின் ட்ரூடோவின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. 
கனடாவின் பொருளாதாரம் ஏனைய நாடுகளைப் போல அல்லாமல் வலுவாகவே இருக்கிறது. அவரது ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் மிகக் குறைவான அளவில் காணப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலைகள் குறைந்து, தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவையெல்லாம் இருந்தும்கூட, லிபரல் கட்சியால் 2015 தேர்தல் வெற்றியை மீண்டும் ஈட்ட முடியாமல் போனதற்கு அவரது ஆட்சியின் மீது எழுந்த சில ஊழல் குற்றச்சாட்டுகள்தான் காரணம். ஜஸ்டின் ட்ரூடோவின் சொந்த மாகாணமான கியூபெக்கில் உள்ள எஸ்.என்.சி. லவாலின் என்கிற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சாதகமாக அவரது அரசு செயல்பட்டதாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு ஒரு முக்கியமான காரணம்.
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோலியப் பொருள்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன. இதனால், கச்சா எண்ணெய் வளமிக்க அல்பர்டா, சஸ்கட்ஷேவொன் மாநிலங்கள் லிபரல் கட்சிக்கு எதிராகத் திரும்பின. அந்த மாநிலங்களில் ஓர் இடத்தில்கூட ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடுமையாக எதிர்க்கப்படும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களைப் பதிக்கும் திட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி மெத்தனம் காட்டியதை அந்த மாநில மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
முதல் முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கனடா அரசியலில் முக்கியமான பங்கு வகிக்கப் போகிறார். கூட்டணி ஆட்சி அமையும் நிலைமை ஏற்பட்டால், ஜக்மீத் சிங்கின் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக வெளிவந்த கருத்துக்கணிப்புகள் பொய்த்திருக்கின்றன. கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்ற புதிய ஜனநாயகக் கட்சி இந்த முறை 24 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு தேவைப்படும். 
பிரெஞ்சு பேசும் கியூபெக் பகுதியின் பிரிவினைவாதக் கட்சியான பிளைக் க்யூபிகோஸ் 33 இடங்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தாலும்கூட, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்தக் கட்சியின் ஆதரவை நாடமாட்டார் என்பதால் கனடா அரசியலில் இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங் முக்கியத்துவம் பெறுகிறார்.
122 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் வாதங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ, பல தவறுகளைச் செய்திருந்தாலும்கூட அவரது நோக்கத்தை மக்கள் சந்தேகிக்கவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 
இன்னாருக்கு வாக்களிப்பது என்பதைவிட, இன்னாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதில் கனடா மக்கள் தீர்மானமாக இருந்தது முடிவுகளின் மூலம் வெளிப்படுகிறது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரண்டாவது முறையாக கனடாவின் பிரதமராகிறார் என்பது மட்டுமல்ல, இந்தியாவை நேசிக்கும் ஒருவர் பிரதமராகிறார் என்பதுதான் அதைவிட முக்கியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.