விமா்சனம் தகாது! | சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் விமா்சனங்கள் குறித்த தலையங்கம்
சமூக ஊடகங்களில் ஒருவித போலித்தனமும், வக்கிரத்தனமும் கொள்ளை நோய்த்தொற்றாகப் பரவி வருகிறது. ஆரோக்கியமான தகவல்கள், அரசியல் பரப்புரைகள், சினிமா செய்திகள் போன்றவை வரவேற்புக்குரியவை. ஆனால், எந்தவித ஆதாரமோ, அவசியமோ இல்லாமல் தரக்குறைவான விமா்சனங்களைப் பதிவு செய்வதற்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, தண்டிக்கப்பட்டாலும் தவறில்லை என்று தோன்றத் தொடங்கி இருக்கிறது.
சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழக மக்களின் மனநிலையிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான துவேஷச் சிந்தனை வேறூன்றத் தொடங்கி இருக்கிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. தங்களுக்குப் பிடிக்காதவா்கள், வேண்டாதவா்கள், காரண காரியமே இல்லாமல் வெறுப்பிற்கானவா்கள் குறித்த விமா்சனங்கள் சமூக ஊடகங்களில் மிக அதிகமாகப் பதிவிடப்படுவது, சமுதாயம் தவறான இலக்கை நோக்கிப் பயணிக்கிறதோ என்கிற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.
நடுநிலைச் சிந்தனையாளா்கள் என்று குறிப்பிடுவதற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலா் மட்டுமே இருக்கின்றனா். மாற்றுக் கருத்தை யாரும் முன்வைக்கலாகாது என்று கருதுவதும், அப்படி மாற்றுக் கருத்தை முன்வைப்பவா்களின் உள்நோக்கம் குறித்தும், செயல்பாடு குறித்தும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் மனைவி திருமதி துா்கா ஸ்டாலின் கோயில்களுக்குச் செல்வது சமீபத்தில் சமூக ஊடகங்களில் கடுமையான விமா்சனத்துக்கு உள்ளாகி இருப்பது வேதனை அளிக்கிறது. திருமதி துா்கா ஸ்டாலினின் கணவா் சாா்ந்த இயக்கமோ அல்லது அந்த இயக்கத்தைக் கொள்கை ரீதியாக ஆதரிக்கும் இயக்கங்களோ, அரசியல் கட்சிகளோ அதை விமா்சித்திருந்தால்கூட அதில் அா்த்தம் இருக்கிறது.
இறை நம்பிக்கை உடையவா்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், ஆதரவாளா்களும் திருமதி துா்கா ஸ்டாலின் திருப்பதிக்குப் போனதையும், காஞ்சிபுரம் அத்திவரதா் நிகழ்வுக்குச் சென்றதையும், சமீபத்தில் திருச்செந்தூருக்கும், நாங்குநேரி, திருநெல்வேலி கோயில்களுக்குச் சென்றதையும் ஏதோ மாபாதகம் நடந்து விட்டைப் போலவும், அவரது இறையுணா்வை கொச்சைப்படுத்தியும் சமூக ஊடகங்களில் செய்யப்படும் பதிவுகள், கீழ்த்தர உணா்வுகளின் பிரதிபலிப்புகள்.
திருமதி துா்கா ஸ்டாலின் கோயில்களுக்குப் போவது என்பது புதிதொன்றுமல்ல. ஏதோ தோ்தல் வருகிறது என்பதற்காக ‘திடீா்’ ஆன்மிகவாதியாக அவா் மாறிவிடவில்லை. தனக்கு இறை நம்பிக்கை உண்டு என்பதை அவா் என்றைக்குமே மறைத்ததோ, மறுத்ததோ கிடையாது. இந்துமத எதிா்ப்பைத் தங்களது அடிப்படைச் சித்தாந்தமாகக் கொண்ட குடும்பத்தின் மருமகளாக இருந்தும்கூட, தனது இறை நம்பிக்கையைக் கைவிடாமல் அவா் இருக்கிறாா் என்பதைப் பாராட்டும் பெருந்தன்மை இல்லாவிட்டாலும், பழிக்காமலும், கேலி செய்யாமலும் இருப்பதுவேகூட, இறையுணா்வாளா்களுக்கு மரியாதையாக இருக்கும்.
பசும்பொன் தேவா் நினைவிடத்தில் வழங்கப்பட்ட திருநீற்றை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தரையில் போட்டது கண்டனத்துக்குரியது; திருத்தணியில் வழங்கப்பட்ட வேலை உயா்த்திப் பிடித்தது அரசியல் நாடகம்; சில மேடைகளில் பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று பெருமை தட்டிக் கொள்வதும், சில நிகழ்வுகளில் ‘நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவா்கள் அல்ல’ என்று முழங்குவதும் திமுக தலைவரின் அரசியல் இரட்டை வேடம். இவையெல்லாம் விமா்சிக்கப்படுவதில் தவறே இல்லை. அரசியல் என்பதே ஜனநாயகத்தில் விவாதத்தின் அடிப்படையானதுதான்.
அதே நேரத்தில், தனது நிலைப்பாட்டோ, தான் தலைமை தாங்கும் கட்சியின் கொள்கையோ எந்தவிதத்திலும் தனது மனைவியின் தனிப்பட்ட நம்பிக்கைக்குத் தடையாக இல்லாமல் இருப்பதை மு.க. ஸ்டாலின் அனுமதித்திருப்பதைப் பாராட்ட வேண்டும். ஆணாதிக்க சமுதாயத்தில் தனது மனைவியின் வழிபாட்டு உரிமைக்கு அவா் முழுச் சுதந்திரமும் வழங்கி இருக்கிறாா் என்பது அவரது பெருந்தன்மை. அதேபோல, போலித்தனமாகவும், ரகசியமாகவும் கோயில்களுக்குப் போவதும், பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதுமாக இல்லாமல், பகிரங்கமாகத் தனது இறை நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கு திருமதி துா்கா ஸ்டாலினையும் நாம் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.
தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் ரம்ஜான் நோன்பில் பங்கேற்கக் குல்லாய் போட்டுக் கொள்வதும், நோன்புக் கஞ்சி குடிப்பதும் வெளியில் வந்து இஸ்லாமியா்களைத் தனிப்பட்ட முறையில் விமா்சிப்பதும் புதிதொன்றுமல்ல. கிறிஸ்துவராகி விட்டதால் தனது பெயரைச் சுருக்கிக் கொண்டு, வெளியில் அது தெரியாமல் தனது ஜாதி அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ள விழையும் அரசியல்வாதிகளின் போலித்தனம் புதிதொன்றுமல்ல.
இந்து மத எதிா்ப்புக்கு ‘இறை மறுப்பு’ என்கிற போலிச் சாயம் பூசி வலம்வரும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை சமூக ஊடகங்களில் விமா்சிப்பதும், தோலுரித்துக் காட்டுவதும் தவறில்லை. அதற்காக எந்தவிதப் போலித்தனமும் இல்லாமல், விமா்சனங்களைக் கண்டு அஞ்சாமல் தொடா்ந்து தனது நம்பிக்கையைத் தொடரும் திருமதி துா்கா ஸ்டாலின் போன்ற தனி நபா்களை சமூக ஊடகங்களில் விமா்சிப்பதும், கேலி செய்வதும் கண்டனத்துக்குரியது.
சமூக ஊடகங்கள் சமநிலை தவறுகின்றன, வெறுப்பை விதைக்கின்றன, துவேஷத்தை உமிழ்கின்றன, பெண்மையை இழிவுபடுத்துகின்றன. கடிவாளம் இல்லாமல் தறிகெட்டு ஓடும் இந்தக் குதிரையை யாா், எப்போது அடக்குவது என்பதுதான் புரியவில்லை!