நம்பிக்கை துளிர்க்கிறது! | ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிப்பு குறித்த தலையங்கம்
புத்தாண்டில் இந்தியப் பொருளாதாரம் நம்பிக்கையை ஏற்படுத்துவது ஆறுதலாக இருக்கிறது. நிகழ் நிதியாண்டான 2020-21-இல் ரூ.4 லட்சம் கோடி அளவில் வருவாய் பற்றாக்குறை காணப்படும் என்கிற கணிப்பு ஒருபுறமிருந்தாலும், வரி வருவாய் அதிகரிப்பு காரணமாக பெருமளவிலான பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. நிகழ் நிதியாண்டில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் காணப்படுவது இந்தியப் பொருளாதாரம் சுறுசுறுப்படைந்திருப்பதன் வெளிப்பாடு என்று கருதலாம்.
2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1.15 லட்சம் கோடி இதுவரையில் இல்லாத சாதனை. 2019 டிசம்பர் வசூலான ரூ.1.03 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 12% அதிகரித்திருக்கிறது.
கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் வெளியிட்டிருக்கும் அரசின் நிதி நிலைமை குறித்த புள்ளி விவரங்களின்படி, பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்திருப்பது தெரிகிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது நான்கு செல்திசைகள் (ட்ரெண்ட்ஸ்) தென்படுகின்றன.
முதலாவதாக, அரசின் நிகர வரி வருவாய் மூன்றாவது மாதமாக அதிகரித்திருப்பது பொருளாதாரம் வேகமெடுத்திருப்பதன் அறிகுறி. இரண்டாவதாக, மறைமுக வரி வருவாய் மட்டுமல்லாமல் தனியார் வருமான வரி வருவாயும் அதிகரித்திருப்பது பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி நகர்கிறது என்பதன் வெளிப்பாடு. மூன்றாவதாக, ஒருபுறம் வரி வருவாய் அதிகரிக்கிறது என்றாலும்கூட, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில் காணப்படும் சுணக்கம் குறிப்பிடத்தக்க பின்னடைவு. நான்காவதாக, அதிகரித்த வரி வருவாய் காரணமாக மத்திய அரசின் பொருளாதார ஊக்குவிப்புக்கான செலவினமும் அதிகரித்திருக்கிறது. அதனால் பொருளாதாரம் மேலும் சுறுசுறுப்படையக் கூடும்.
மத்திய அரசின் நிகர வரி வசூல் அக்டோபர் மாதம் 16.9% அதிகரித்தது என்றால், நவம்பர் மாதம் 23% ஆக அதிகரித்தது. அதில் கணிசமான பகுதி மறைமுக வரிகள் மூலம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அக்டோபர் மாதம் 23.6% ஆக இருந்த மறைமுக வரி வசூல், நவம்பர் மாதம் 27.2% ஆக அதிகரித்ததை புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
நேரடி வரி வசூலைப் பொருத்தவரை தனியார் வருமான வரி ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்திருப்பதைப்போல, கார்ப்பரேட் வரிகள் அதிகரிக்கவில்லை. வரும் மாதங்களில் பொதுமக்கள் மத்தியில் வாங்கும் சக்தி அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியின் அறிகுறிகள் மக்கள் மத்தியில் பிரதிபலிக்கத் தொடங்கும்போது, கார்ப்பரேட் வரி வசூலும் அதிகரிக்கக்கூடும். கார்ப்பரேட் வரி வசூலைப் பொருத்தவரை கடந்த ஆண்டு அளவை எட்டவில்லை என்பது மிகப்பெரிய குறை.
அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்டுதான் இந்திய அரசு கடந்த பல ஆண்டுகளாகப் பற்றாக்குறையை ஈடுகட்டிக்கொண்டு இருக்கிறது. நிகழாண்டு பட்ஜெட்டில் அரசு நிறுவன பங்கு விற்பனை
களின் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி திரட்டுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பங்குகளை விற்றதில் அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் ரூ.11,843 கோடி மட்டும்தான். ஏர் இந்தியா, பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்து தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நிகழ் நிதியாண்டு முடிவதற்கு மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த நிறுவனங்களின் பங்கு விற்பனை முயற்சிகள் வெற்றியடைந்து உடனடியாக அரசுக்குப் பணம் வந்துவிடாது. அதனால், அரசின் எதிர்பார்ப்புகள் பொய்த்து மிகப் பெரிய துண்டு விழுவதைத் தவிர்க்க முடியாது.
கடந்த மூன்று மாதங்களாகக் கூடுதல் வரி வருவாய் கிடைத்திருப்பது பேருதவியாக இருக்கிறது. பல மாதங்களாக அரசின் திட்டங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடந்தன. நவம்பர் மாதத்திலிருந்து மூலதனச் செலவுகளில் பெரிய அளவிலான அதிகரிப்பு காணப்படுகிறது. கடந்த பல மாதங்களாக செலவுகள் சுருக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் மாதம் அரசின் ஆக்கப்பூர்வ செலவினங்கள் 48% அதிகரித்தன.
நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அரசின் செலவினங்கள் 15.6% குறைந்தது. இப்போது மூன்றாவது காலாண்டில் அக்டோபர் - நவம்பர் மாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலே 22.4% அதிகரித்திருக்கிறது. இதனை பொருளாதாரம் விரிவடைவதற்கான அறிகுறி என்றுதான் கருத வேண்டும்.
பொருளாதார இயக்கத்தை விரைவுபடுத்த பல்வேறு உதவித் திட்டங்களையும் ஊக்குவிப்பு அறிவிப்புகளையும் அரசு செய்தாலும்கூட, ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான நிகழ் நிதியாண்டின் 8 மாதங்களில் அரசின் செலவினம் வெறும் 4.7% தான் அதிகரித்திருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த 12.7% அளவை எட்டவில்லை. இனி இருக்கும் மூன்று மாதங்களில் பல்வேறு திட்டங்களுக்கான செலவினங்களை அரசு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, பொருளாதாரம் எதிர்பார்த்த வேகத்தில் மீண்டெழ முடியும்.
நிகழ் நிதியாண்டு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியில் முடிந்துவிடாது என்கிற நம்பிக்கையை புத்தாண்டின் சமிக்ஞைகள் ஏற்படுத்துகின்றன!