முகப்பு
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் - ஊழலை விசாரிக்க ஆணையம் : எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் தரமற்ற மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு மடிக்கணினி ஊழல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் எனப் பேச்சு...

Updated On : 29 மார்ச், 2026 at 12:11 PM
எடப்பாடி பழனிசாமி - யூடியூப் / அதிமுக
பகிர்:

திமுக ஆட்சியில் தரமற்ற மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு மடிக்கணினி ஊழல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலையேற்றுள்ள அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, அமமுக, தமாக, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிதாக இணைந்துள்ள சிங்கத் தமிழர் முன்னேற்றக் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட்டுள்ளது.

கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''அதிமுக அரசு தமிழ்நாட்டில் 68 கல்லூரிகளைக் கொடுத்தது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை அதிமுக அரசு கொண்டுவந்தது. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரப்படவில்லை.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலத்தில் கொண்டுவரப்பட்டது. பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில்தான் மடிக்கணினி கொடுத்தோம். இந்தியாவிலேயே யாரும் கொண்டுவராத இந்தத் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தினார்.

ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம். அதை முடக்கியது திமுக அரசு. ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதியில் மினி கிளினிக் அமைக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் கொடுக்கப்பட்டன. திமுக அரசின் லேப்டாப் ஊழல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும்.

சிறப்பாக செயல்பட்டதற்காக மின்சாரத் துறை, போக்குவரத்து துறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது பெற்றோம். மத்திய அரசின் அதிக விருது பெற்ற நிர்வாகம், அதிமுக நிர்வாகம்தான்.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 2 ஆயிரம் கொடுத்தோம். அம்மா உணவகம் மூலம் மூன்று வேளையும் உணவு கொடுத்தோம்.

கரோனா பெருந்தொற்று, வெள்ளம் போன்ற சூழலில் ஒரு ரூபாய் வரி வசூலிக்காதபோது கூட சிறப்பான நிர்வாகம் அளித்த அரசு, அதிமுக அரசுதான். ஆனால், எந்தவித இடர்பாடுகளும் இல்லாதபோது கூட மோசமான நிர்வாகத்தை அளித்துள்ளது'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

summary

Laptops Corruption Under DMK Rule Commission to Investigate Corruption Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.