அராஜகத்துக்கு அச்சாரம்! | தில்லி விவசாயிகள் பேரணி குறித்த தலையங்கம்
"எந்தவொரு பிரச்னையையும் ஆட்சியாளர்கள் வலிய போய் வரவழைத்துக்கொள்ளக் கூடாது. அப்படியே ஏதாவது பிரச்னைகள் எழுமேயானால், அதை வளரவிடாமல் "சாம, தான, பேத, தண்டம்' (சமரசம், பொருளுதவி, பிரித்தாளும் சூழ்ச்சி, அடக்குமுறை) ஆகியவற்றைக் கையாண்டு முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்'' - இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சாணக்கியர் தனது "அர்த்த சாஸ்திரம்' நூலில் ஆட்சியாளர்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை.
1992 டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிப்பின்போது என்ன நடந்ததோ, அதேதான் நேற்று தில்லி விவசாயிகள் பேரணியிலும் நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஓர் இடத்தில் கூடுகிறார்கள் அல்லது பேரணி நடத்துகிறார்கள் என்றால், அதில் நிச்சயமாக வன்முறை வெடிக்கும் என்பது சிறு பிள்ளைக்குக்கூடத் தெரியும். அப்படி இருக்கும்போது, தலைநகர் தில்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது, விவசாயிகளின் டிராக்டர் பேரணியை அனுமதிக்கக் கூடாது என்கிற அடிப்படைப் புரிதல்கூடவா காவல்துறைக்கும் அரசுக்கும் இல்லாமல் போயிற்று?
தலைவர்கள் அமைதியாகப் பேரணி நடத்துவோம் என்று உறுதி அளிப்பதும், பேரணியில் கலந்து கொள்ளும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் ஈடுபடுவதும் புதிதா என்ன? ஒருவர் வரம்பு மீறினாலோ, கல்லெடுத்து எறிந்தாலோ போதும் கும்பல் மனோபாவம் தோன்றி வன்முறை வெடிக்கும் என்பது, வரலாறு பலமுறை உணர்த்தி இருக்கும் உண்மை.
சட்டங்களை இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிமை உண்டா என்று கேட்டால் நிச்சயமாக உண்டு. ஆனால், நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்திய நேரமும், வழிமுறையும் தவறானவை. விவாதத்துக்குரிய மசோதாவைக் கொள்ளை நோய்த்தொற்றைப் பயன்படுத்தி நிறைவேற்றிவிட வேண்டும் என்று அரசு நினைத்தது அதைவிடத் தவறு.
இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டிருக்கும் விவசாயம் தொடர்பான எந்தவொரு சட்டமாக இருந்தாலும் அது முறையான, முழுமையான, பொதுவிவாதத்துக்கும், நாடாளுமன்ற விவாதத்துக்கும் உட்படுத்தப்பட்ட பிறகு நிறைவேற்றப்படுவதுதான் நாணயமான அணுகுமுறை.
எல்லாம் சரி. ஆனால், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்ட புதிய வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று போராட அரசியல் சாசனப் பிரிவு 19 உரிமை வழங்கியிருக்கிறது. அதைப் பயன்படுத்தி தலைநகரை முற்றுகையிடுவதும், குடியரசு தின விழா அன்று போட்டிப் பேரணி நடத்துவதும், வன்முறையில் இறங்குவதும் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தக்கூடிய நடவடிக்கை அல்ல. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யவோ, திரும்பப் பெறவோ அரசுக்கு அதிகாரம் கிடையாது. நாடாளுமன்றம்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பாரதிய கிசான் கட்சி சில அடிப்படை அரசியல் சாசனக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. "விவசாயம் என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது. அரசியல் சாசனத்தின் ஏழாவது ஷெட்யூலின் கீழ் உள்ள இரண்டாவது பட்டியலில் காணப்படும் 14, 18, 30, 46, 47, 48 பிரிவுகளின் கீழ் விவசாயமும் வேளாண் பொருள்களும் வருகின்றன. அவை குறித்து சட்டமியற்றும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை' என்பது அதன் வாதம். அரசியல் சாசன அடிப்படையில் புதிய வேளாண் சட்டங்கள் செல்லுமா, செல்லாதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்துக்கு உண்டு.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதுதானா என்று பரிசீலிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. அவை அரசியல் சாசனத்தை மீறுவதாக இருந்தால், அவற்றை ரத்து செய்யும் அதிகாரமும் உண்டு. அரசும் சரி, போராட்டக்காரர்களும் சரி நீதித்துறையை சமரசம் பேச அழைக்காத நிலையில், சமரசப் பேச்சுக்குக் குழுவை அமைத்தது அதிகார வரம்புமீறல்.
போராட்டத்தின் பின்னணியில் பல்வேறு சக்திகள் செயல்பட்டிருக்கக்கூடும். அவற்றைத் தடுக்க முடியாது. அதேநேரத்தில், அந்த சக்திகளை வலுவிழக்கச் செய்து, வள்ளுவப் பேராசான் கூறுவதுபோல, "பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார் பொறுத்தலும் வல்லது' மத்திய அரசு. போராடும் விவசாயிகளைத் தன்வயப்படுத்தும் சாமர்த்தியம் பிரதமர் மோடிக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், அவர் ஏன் தயங்குகிறார் என்று தெரியவில்லை.
டிராக்டர் பேரணியில் கலந்துகொண்ட விவசாயிகள் நடந்துகொண்ட முறை கண்டனத்துக்குரியது. காவல்துறையின் அத்துமீறல் என்று குரலெழுப்புவதில் அர்த்தமில்லை. போராட்டம் என்கிற பெயரில் சட்டம் - ஒழுங்கை மீறி அராஜகத்தில் ஈடுபட்டால் அதை அடக்க வேண்டியது காவல்துறையின் கடமை. இல்லாவிட்டால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடும். அராஜகம் தலைவிரித்தாடும்.
இரு மாதங்களாக அமைதியாகப் போராடி அனைவரின் கவனத்தையும், அனுதாபத்தையும் பெற்ற பஞ்சாப் விவசாயிகள், இப்போது வன்முறையில் இறங்கி மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு விட்டார்கள். கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை காவல்துறை எதிர்கொண்ட விதம் கண்டனத்துக்குரியதல்ல, பாராட்டுக்குரியது.
தெருவில் இறங்கிப் போராடுவது என்று தொடங்கிவிட்டால் அதற்கு முடிவே இருக்காது. அதன் நீட்சி அராஜகத்திலும் சட்ட -ஒழுங்கு மீறலிலும்தான் முடியும். இந்த வழிமுறை தொடர அனுமதிக்கக் கூடாது!