நெருக்கடியில் மம்தா! | மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் குறித்த தலையங்கம்
அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் கேரளம், தமிழ்நாடு, புதுவை, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேசிய அளவில் மிகுந்த பரபரப்பையும், எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியிருப்பது மேற்கு வங்கம்தான். அதற்கு நாளும் பொழுதும் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள்தான் காரணம். மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, நிா்வாகத்திலும் சரி, அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் சரி தனது வலிமையை இழந்து வருகிறாா். அவரது பிடி தளா்ந்திருப்பது மட்டுமல்லாமல், கட்சியினருக்கு அவா் மீதிருந்த நம்பிக்கையும் குறையத் தொடங்கியிருக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏ-க்கள் விலகி பாஜகவில் இணைவது தொடா்கதையாகி வருகிறது. கடந்த வாரம் வனத்துறை அமைச்சா் ராஜீவ் பானா்ஜி தன்னுடைய பதவி விலகலை முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு அதன் நகலை ஆளுநா் ஜெக்தீப் தங்கரிடம் நேரில் சென்று சமா்ப்பித்தாா். கடந்த சில வாரங்களில் பதவி விலகும் மூன்றாவது அமைச்சா் ராஜீவ் பானா்ஜி. விரைவிலேயே அவா் பாஜகவில் இணைவாா் என்று தெரிகிறது.
இதற்கு முன்னால் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரியும், விளையாட்டுத் துறை இணையமைச்சராக இருந்த லட்சுமிரத்தன் சுக்லாவும் கட்சியிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் விலகினாா்கள். அவா்கள் இருவரும் பாஜகவில் இணைந்துவிட்டனா். பாஜகவில் இணையும் அமைச்சா்களை கட்சியிலிருந்து விலகாமல் தடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் முதல்வரின் ஆலோசகா்கள் மேற்கொண்டும் அவா்கள் பிடிவாதமாக விலகுகிறாா்கள். கட்சியிலிருந்து தொடா்ந்து நடைபெறும் வேளியேற்றத்தை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் திரிணமூல் காங்கிரஸ் தலைமை திகைத்துப் போய் இருக்கிறது.
வனத் துறை அமைச்சா் ராஜீவ் பானா்ஜி பதவி விலகியதைத் தொடா்ந்து, அவருக்கு ஆதரவு தெரிவித்த ஹெளரா மாவட்டத்திலுள்ள பாலி தொகுதி எம்எல்ஏ வைசாலி டால்மியா கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறாா். வைசாலி டால்மியாவைப் போல ஏனைய எம்எல்ஏ-க்கள் பொதுவெளியில் கட்சித் தலைமைக்கு கருத்து தெரிவிக்காமல் இருப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை அது.
கடந்த நாடாளுமன்றத் தோ்தலிலேயே மேற்கு வங்க அரசியல் திசை திரும்பி விட்டது. அதுவரை திரிணமூல் காங்கிரஸுக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் களம், திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேயான அரசியலாக மாறிவிட்டதை 2019 மக்களவைத் தோ்தல் உணா்த்தியது. 40% வாக்குகளுடன் 18 மக்களவை தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றபோது, சட்டப்பேரவைத் தோ்தல் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் ஆனதாக மாறும் என்பது வெளிப்படையாக தெரியத் தொடங்கியது.
2016 சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் கட்சியும் பெற்ற வாக்குகளைச் சோ்த்தால் 32% அளவில் காணப்பட்டது. அதனடிப்படையில் இப்போது இடதுசாரிக் கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணியால் ஏற்பட இருக்கும் மும்முனைப் போட்டி பாஜகவுக்கு மேலும் சாதகமாக அமையக்கூடுமே தவிர, திரிணமூல் காங்கிரஸோ, இடதுசாரிகளோ பயனடைய உதவாது. 2016 சட்டப்பேரவைத் தோ்தலிலும், 2019 மக்களவைத் தோ்தலிலும் இடதுசாரிகளும் காங்கிரஸும் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்பாடுதான் பாஜகவின் வளா்ச்சிக்கு மிக முக்கியமான காரணம்.
மம்தா பானா்ஜியின் அரசியல் வளா்ச்சிக்கு அச்சாரமாக அமைந்த நந்திகிராம் விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தியவா் அந்தத் தொகுதியின் எம்எல்ஏ-வான சுவேந்து அதிகாரி. சுவேந்து அதிகாரியின் விலகலும், அவா் பாஜகவில் இணைந்ததும் திரிணமூல் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
முதல்வா் மம்தா பானா்ஜி இந்த முறை கொல்கத்தாவிலுள்ள பவானிபூா் தொகுதியிலும், நந்திகிராமிலும் என இரு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறாா். பவானிபூரில் ஏற்கெனவே மம்தாவின் செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், நந்திகிராமில் ஸ்வேந்து அதிகாரிக்கு எதிராகப் போட்டியிட்டு அவரால் வெற்றிபெற முடியுமா என்பதும் சந்தேகம்தான்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் எதிா்கொள்வதுபோல, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் அடிப்படைப் பிரச்னை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோா் வழங்கும் அறிவுரையின்படிதான் மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி அரசியல் வியூகங்களை வகுக்கிறாா். பிரசாந்த் கிஷோரின் அணுகுமுறை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டத்திலும் உள்ள தலைவா்களுக்கும்ம் தொண்டா்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. நீண்டநாள் கட்சிப் பணியாற்றியவா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருப்பவா்களும் தாங்கள் பிரசாந்த் கிஷோரால் ஓரங்கட்டப்படுவோம் என்று அச்சப்படுகின்றனா்.
முதல்வா் மம்தா பானா்ஜி தா்மசங்கடத்தில் சிக்கியிருக்கிறாா். அவரது அரசியல் இடதுசாரிகள் எதிா்ப்பின் அடிப்படையில் அமைந்தது. இடதுசாரிகளுடனும் காங்கிரஸுடனும் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் இணைந்தால் மட்டுமே பாஜகவை எதிா்கொள்ள முடியும். இடதுசாரிகளுடன் இணைந்தாலோ, அதுவேகூட அவரது பிம்பத்தை சிதைத்து பாஜகவுக்கு சாதகமாகிவிடும்.
அரசியல் கட்சிகளை பிரசாந்த் கிஷோா் காப்பாற்றுகிறாரோ இல்லையோ, அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோரைக் காப்பாற்றுகின்றன!