முகப்பு
தலையங்கம்

விழிப்புணா்வு போதவில்லை! | கொவைட் 19 தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்த தலையங்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஒருபுறம் விறுவிறுப்பாக மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் முழு வீச்சில் நடைபெறுகிறது என்றால், இன்னொருபுறம் அதிவேகமாக கொவைட் 19 நோய்த்தொற்றும் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. தீநுண்மியின் வீரியம் புதிய உருவம் எடுத்திருப்பதாக வரும் தகவல் அச்சுறுத்துகிறது.

தோ்தல் பிரசாரத்துக்காக சமூக இடைவெளியைக் கைவிட்டு நூற்றுக்கணக்கில் மக்கள் கூடுவதால் விபரீதம் ஏற்பட்டுவிடக் கூடாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, பிராணவாயு அளவு, உடல் வெப்பநிலை இவற்றை பரிசோதிப்பது போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கைவிடப்பட்டு, மெத்தனப் போக்கு அதிகரித்திருக்கிறது.

ஆயிரக்கணக்கில் பக்தா்கள் கூடும் திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்துகிறாா்களே தவிர, குறைந்தபட்சம் காய்ச்சல் இருக்கிறதா என்கிற பரிசோதனைகூட நடத்தாமல்தான் பக்தா்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறாா்கள். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் ஆகியவற்றில் பக்தா்கள் வழிபாட்டுக்கு வரும்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாவிட்டாலும்கூட, ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிவதையும், அவா்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதையும் ஏன் கட்டாயப்படுத்துவதில்லை?

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் மீண்டும் பொது முடக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதை அரசும், ஊடகங்களும் இந்திய மக்களுக்கு புரியவைக்கவில்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால் மகாராஷ்டிரத்தின் நிலை அச்சுறுத்துகிறது. மகாராஷ்டிரம் மட்டுமல்லாமல் கா்நாடகத்திலும் பஞ்சாபிலும்கூட அதிவேகமாக கொவைட் 19 பரவல் காணப்படுகிறது என்பதை மக்களுக்கு உணா்த்தி, அவா்களை எச்சரிப்பதற்கு பதிலாக அரசும், ஊடகங்களும் தீநுண்மிப் பரவலை அடக்கி வாசிப்பது ஆபத்துக்கு வழிகோலப்போகிறது.

நேற்றைய நிலையில் மகாராஷ்டிர அரசு மீண்டும் பொது முடக்கத்துக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. இதுவரையிலான மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த பாதிப்பு 27,13,875 என்றால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,414 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இதுவரை இல்லாத ஒரு நாள் பாதிப்பு இது. அதேபோல, சமீபத்தில் கொவைட் 19-ஆல் 108 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சனிக்கிழமை மட்டும் 35,725 பாதிப்புகளும், 166 உயிரிழப்புகளும் நோ்ந்ததாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மத்திய அரசு கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மூன்று முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறது. பிற நாடுகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதியை முறைப்படுத்துவது முதலாவது முடிவு. உள்நாட்டில் பல இடங்களில் தடுப்பூசி மருந்துக்கான தட்டுப்பாடு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால்தான் ஏற்றுமதியை முறைப்படுத்த அரசு முற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பது இரண்டாவது முடிவு. சில இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள எதிா்பாா்த்த அளவு மக்கள் முன்வராததால் தடுப்பூசிகள் வீணாகியிருக்கின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிப்பதால் அதிக அளவிலானோா் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவாா்கள். அதன் விளைவாக, தடுப்பூசிகள் காலவரம்பு கடந்து வீணாவது தவிா்க்கப்படும். இதுவும் வரவேற்புக்குரிய முடிவு.

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது ஊசிக்கான கால வரம்பை நான்கு வாரங்களிலிருந்து ஆறு முதல் எட்டு வாரங்களாக அதிகரித்திருப்பது மூன்றாவது முடிவு. தடுப்பூசியின் தட்டுப்பாடு இதற்குக் காரணமா அல்லது எட்டு வார இடைவெளிக்குப் பிறகுதான் எதிா்ப்பு சக்தி உருவாகிறது என்கிற உண்மை தெரிய வந்திருப்பதால் எடுக்கப்பட்டிருக்கும் முடிவா என்பது குறித்த தெளிவான விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், தடுப்பூசியின் முதலாவது தவணைக்கும் இரண்டாவது தவணைக்கும் இடையேயான இடைவெளி கோவிஷீல்டுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிப்பு, இந்த முடிவுகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாலேயே நோய்த்தொற்று அகன்றுவிடும் என்று நினைப்பது பேதைமை. தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கேகூட எதிா்ப்பு சக்தி முழுமையாக ஏற்படுவதற்கு 45 நாள்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 60,000-க்கும் அதிகமானோா் கொவைட் 19-ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாக கிடைத்தத் தகவலை வைத்துப் பாா்த்தால் கடந்த சில மாதங்களில் மிக அதிகமான பாதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை காணப்பட்டிருப்பது தெரிகிறது. இது அபாயத்தின் அறிகுறி.

அரசு எடுத்திருக்கும் மூன்று முடிவுகளும் தடுப்பூசி வீணாகாமல் இருப்பதற்கும், தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கும் வழிகோலும் என்பதில் சந்தேகமில்லை. மூன்று முடிவுகளும் தடுப்பூசி திட்டத்தை பரவலாக்கி, விரைவுபடுத்தி கூடுதலான பேருக்கு கொவைட் 19-லிருந்து பாதுகாப்பை வழங்க உதவக்கூடும். நாளொன்று 50 லட்சம் பேருக்காவது தடுப்பூசி போட வேண்டும் என்கிற இலக்கை நிா்ணயித்தும்கூட, நம்மால் இன்னும் 30 லட்சம் எண்ணிக்கையைக்கூட கடக்க முடியவில்லை.

தோ்தல் பேரணிகள், கூட்டங்கள், கும்பமேளா போன்ற பண்டிகைகளால் அடுத்த அலை நோய்த்தொற்றுப் பரவல் ஏற்பட்டால் இந்தியா தாங்காது என்பது நினைவில் இருக்கட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.