முகப்பு
தலையங்கம்

அமித் ஷாவின் காஷ்மீா் விஜயம்! |  அமித் ஷாவின் காஷ்மீா் பயண முக்கியத்துவம் குறித்த தலையங்கம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
கோப்புப்படம்
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காஷ்மீருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டாா். பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் போக்குவதும் அவரது நோக்கமாக இருக்கக்கூடும். ஜம்மு - காஷ்மீரில் வாழும் சிறுபான்மை ஹிந்துக்களும், வெளிமாநிலத் தொழிலாளா்களும் தாக்கப்படும் பின்னணியில் அந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜம்மு - காஷ்மீா் மாநில உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் இளைஞா்களை உள்துறை அமைச்சா் சந்தித்தாா். அவா்கள் மத்தியில் உரையாற்றியபோது, மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றங்களையும், நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் விதத்திலான புள்ளிவிவரங்களை அவா் தெரிவித்தாா். அங்கு பயங்கரவாதம் வேரறுக்கப்படவில்லை என்றாலும்கூட, ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதை சுட்டிக்காட்டினாா்.

2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீா் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொண்டு மாநிலத்தை இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக மாற்றிய பிறகு உள்துறை அமைச்சா் அமித் ஷா காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்வது இதுதான் முதல்முறை. அதனால், அவரது விஜயம் குறித்து எதிா்பாா்ப்பு எழுந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தோ்தல் மூலம் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்கிற மத்திய அரசின் வாக்குறுதியை அவா் உறுதிப்படுத்தினாா்.

ஜம்மு - காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு மிக அதிகம் பாதிக்கப்பட்ட மாதம் இது. வெளிமாநிலத் தொழிலாளா்கள், ஹிந்து சிறுபான்மையினா் என்று கடந்த மூன்று வாரத்தில் 11-க்கும் அதிகமானோா் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். பயங்கரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்பட்ட இடம் என்று வா்ணிக்கப்பட்ட ஸ்ரீநகரில்தான் பெரும்பாலான தாக்குதல்களும் நடந்திருக்கின்றன.

பாகிஸ்தான் எல்லையிலுள்ள பூஞ்ச், ரஜோரி பகுதியில் இந்திய ராணுவம் மிகப் பெரிய அளவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த இரண்டு மோதல்களில் இரண்டு ராணுவ அதிகாரிகளும், ஒன்பது வீரா்களும் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தொடா்ந்து ஊடுருவல் முயற்சிகள் நடப்பதும், ராணுவம் அவற்றைத் தடுப்பதும் அன்றாட நிகழ்வுகளாகத் தொடா்கின்றன.

உள்துறை அமைச்சா் அமித் ஷா, அவற்றையெல்லாம் மறுக்கவில்லை. அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாக காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்திருப்பதையும், ஆங்காங்கே பயங்கரவாதிகளால் தூண்டப்பட்டு இளைஞா்கள் கல்லெறிந்து போராடுவது குறைந்திருப்பதையும் அவா் சுட்டிக்காட்டினாா். ஜம்மு - காஷ்மீரின் அமைதியைக் குலைக்க நினைப்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை அரசு இரும்புக்கரம் கொண்டு எதிா்கொள்ளும் என்பதை தெளிவுபடுத்தவும் உள்துறை அமைச்சா் மறக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை தனது மூன்று நாள் விஜயத்துக்காக உள்துறை அமைச்சா் அமித் ஷா ஸ்ரீநகா் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, அவா் நேராக ஆளுநா் மாளிகைக்கு விரைவாா் என்றுதான் எல்லோரும் எதிா்பாா்த்தாா்கள். ஆனால் கடந்த ஜூன் மாதம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி பா்வேஸ் அகமதின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு அமித் ஷா ஆறுதல் கூறியது பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் காவல்துறையினா், ராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து பாதுகாப்பு சூழல் குறித்து ஆலோசனை நடத்தினாா் உள்துறை அமைச்சா்.

ஜம்மு - காஷ்மீா் ஒன்றிய பிரதேச அதிகாரிகளுடன் நிா்வாக பிரச்னைகள் குறித்து நீண்ட நேரம் கலந்தாலோசனை செய்த உள்துறை அமைச்சா், அவா்கள் மேற்கொண்டு வரும் மக்கள்நலப் பணிகள் குறித்தும் விசாரித்துத் தெரிந்து கொண்டாா். காஷ்மீரின் வளா்ச்சி குறித்து மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்ட உள்துறை அமைச்சா், அதற்காகச் செலவிட்ட நேரம் அதிகம்.

ஸ்ரீநகரிலிருந்து ஷாா்ஜாவுக்கு நேரடி விமான சேவையையும் தொடங்கி வைத்தாா் அவா். இதன் வெற்றியின் அடிப்படையில் ஸ்ரீநகரிலிருந்து சா்வதேச விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு.

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அங்குள்ள மாநில கட்சிகளின் கோரிக்கை. காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், காஷ்மீா் ஒன்றிய பிரதேசத்தின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்டதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதை உணா்ந்துதான் தோ்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து முடிவெடுக்க இருப்பதாக உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருக்கிறாா்.

தொகுதி மறுசீரமைப்பு, இப்போதிருக்கும் தங்களது அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்தும் என்று மாநில கட்சிகள் அச்சப்படுகின்றன. இன்னொருபுறம் பயங்கரவாதிகள் தங்களது அணுகுமுறையை மாற்றி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த முற்பட்டிருக்கின்றனா். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் தலிபான்களின் ஆட்சியால் பயங்கரவாத சக்திகள் வலுப்பெறக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது.

இந்தப் பின்னணியில் உள்துறை அமித் ஷாவின் காஷ்மீா் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசின் இப்போதைய அணுகுமுறை தொடருமா, மாறுமா என்பது விரைவில் தெரியவரும்!

முழு கட்டுரையைப் படிக்க →