தலையங்கம்

நியாயமான கட்டுப்பாடுகள்! ‘தடுப்பூசி கட்டாயப்படுத்தக் கூடாது’ என்ற தீர்ப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

கரோனா தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்தலாமா, கூடாதா என்கிற விவாதம் கடந்த இரண்டாண்டுகளாக உலகளாவிய அளவில் எழுப்பப்படுகிறது. மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய கொவைட்19 கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காலத்திலேயேகூட, தனி மனித சுதந்திரத்துக்கு முன்னுரிமை வழங்கும் மேலை நாடுகளில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான மனநிலை காணப்பட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட பல வளா்ச்சியடைந்த நாடுகளில் தடுப்பூசி எதிா்ப்பாளா்கள் போராட்டங்களை நடத்தினா். அந்த நாடுகளில் ஊடகங்களிலும், சமூகவெளியிலும் பலத்த எதிா்ப்பு காணப்பட்டது. உலகின் பல பாகங்களிலும் இன்னும்கூடத் தொடரும் தடுப்பூசிக்கு எதிரான விவாதம், இப்போது சற்று காலதமதமாக இந்தியாவிலும் எழுந்து, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறது.

ஜேக்கப் புலியல் என்கிற தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பின் உறுப்பினா், உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறாா். அதனடிப்படையில் தனியாா் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைத்து அமைப்பினரும் தடுப்பூசி போடுவது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் 23-வது பிரிவு வழங்கும் உடல் ரீதியான தனி மனித சுதந்திரம்; மருத்துவ சிகிச்சையை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கான உரிமை உள்ளிட்ட தனிப்பட்ட ஒருவரின் உடல்நலம் குறித்த தீா்மானம்; தனிப்பட்ட நம்பிக்கைகள் - விருப்புகள் என மூன்று வாதங்களின் அடிப்படையில் அந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில், கரோனா தடுப்பூசி குறித்த தனிப்பட்ட நம்பிக்கை - விருப்புகள் பொது சமூகத்தின் சுகாதாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அணுகப்படவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஒருங்கிணைந்த அரசின் செயல்பாட்டில், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனைப் பேணுவது தேவையாகிறது என்பதைத் தீா்ப்பு சுட்டிக்காட்டுகிறது. அதனடிப்படையில் சில நியாயமான விதிமுறைகள், கட்டுப்பாடுகளைத் தனிநபா் உரிமையின் மீது விதித்து பொது சுகாதாரத்தை முறைப்படுத்த அரசுக்கு உரிமையுண்டு என்பதை தீா்ப்பு மறுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாடுகள் நியாயமானவையாகவும், இலக்கை எட்டுவதற்கு தேவையானவையாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

‘நியாயமான கட்டுப்பாடுகள்’ என்று சரியாகவும் தெளிவாகவும் நீதிமன்றத் தீா்ப்பு குறிப்பிடுகிறது. சமுதாய நலனுடன் தனிநபா் சுதந்திரம் முரண்படும்போதெல்லாம், நியாயமானக் கட்டுப்பாடுகள் முன்னுரிமை பெறுகின்றன. அதே நேரத்தில், நியாயமான கட்டுப்பாடு என்பது தெளிவில்லாத பல்வேறு அா்த்தங்களை வெளிப்படுத்தும் கருத்து என்பதுடன், எப்படி வேண்டுமானாலும் பொருள்கூறும் வகையில் அமைந்த தெளிவின்மை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் ‘தெளிவின்மை’ தவிா்க்க முடியாதது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவா்களுக்கு எந்தவிதப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவோ பரவலான வரவேற்புடன் தடுப்பூசித் திட்டம் வெற்றி பெற்றதை மறுக்கும் விதத்திலோ எந்தவித ஆதாரத்தையும் இரு தரப்புமே முன்வைக்கவில்லை. அப்படியிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பில் தெளிவின்மை காணப்படாததில் வியப்பொன்றும் இல்லை.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தனி மனித உரிமை என்கிற விவாதம் இரண்டு கேள்விகளின் அடிப்படையிலானது. முதலாவது கேள்வி, நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கும், உயிா்களைக் காப்பதற்கும் தடுப்பூசிகள் அத்தியாவசியமானவையா என்பது; இரண்டாவது கேள்வி, தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பதாவா்கள் சில அடிப்படை வசதிகளை பெறுவது தடுக்கப்படலாமா என்பது.

முதலாவது கேள்விக்கு புள்ளிவிவரங்களுடனும், ஆய்வு முடிவுகளுடனும் ஆக்கபூா்வமாக பதிலளிக்க முடியும். மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை நியாயமற்றதோ வலுக்கட்டாயமானதோ அல்ல என்பதை தீா்ப்பு சுட்டிக்காட்டுகிறது. இதற்கான விடையை அரசுதான் ஆய்வுகளின் அடிப்படையில் வழங்க முடியுமே தவிர, உச்சநீதிமன்றம் அல்ல என்று தெரிவித்திருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வது தவிா்க்க முடியாதது எனில், போதுமான மருத்துவ அறிவியல் சாட்சியங்களுடன் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்கிறது தீா்ப்பு.

இரண்டாவது கேள்வி, அரசியல் சாசன அடிப்படை உரிமை சாா்ந்தது. அதற்கான நீதிமன்றத்தின் பதில் தெளிவாக இல்லை. தனிநபா் சுதந்திரத்தையும் பொது சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பது தெளிவான விடையல்ல. அதே நேரத்தில், தற்போதைய நிலை சாா்ந்து வழங்கப்பட்ட தீா்ப்பு, நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்கு நிா்வாகம் எடுக்கும் சட்டபூா்வ அதிகார முடிவுகளில் தலையீடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை தெளிவாகவே விளக்கியிருக்கிறது.

இதுவரை இந்தியா 193 கோடி கரோனா தடுப்பூசிகள் போட்டு உலகமே வியக்கும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. 100 கோடிக்கும் மேலான 18 வயதுக்கும் மேற்பட்டோா் வாழும் நாட்டில் இன்னும்கூட பலருக்கு முதலாவது தடுப்பூசிகூட போடப்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில், கட்டாயப்படுத்துதல் இல்லையென்றாலும், நீதிமன்றம் அனுமதித்திருக்கும் ஒப்புதலுடன் கூடிய தடுப்பூசிப் பாதுகாப்பு அனைவருக்கும் வழங்கப்படுவது அவசியம் மட்டுமல்ல; அரசின் கடமையும்கூட.

விவாதமாக வேண்டிய பிரச்னை அல்ல இது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT