தலையங்கம்

ஒரே நாடு ஒரே உரம்! | விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்குவது குறித்த தலையங்கம்

ஆசிரியர்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்தது முதல் மானிய செலவினங்கள் முறைப்படுத்தப்படுவதும், மானிய விரயங்கள் தவிா்க்கப்படுவதும் முன்னுரிமை பெறத் தொடங்கின. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, வாக்காளா் பட்டியல் - ஆதாா் எண் இணைப்பு, எண்ம பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்துமே வரிப்பண நிதிநிா்வாக முடிவுகள்.

அதன் பகுதியாக இப்போது ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், ‘பாரத்’ என்கிற ஒற்றைப் பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் அக்டோபா் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன. பிரதமரின் உரங்கள் மானிய திட்டத்தின் கீழ் (பாரதிய ஜனூா்வாரக் பரியோஜனா - பிஎம்பிஜேபி) இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், போக்குவரத்துக்கான மானிய சுமையைக் குறைப்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்.

முன்பு உர ஊட்டச்சத்து மானியம் (நியூட்ரியன்ட் பேஸ்டு சப்சிடி) யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. முந்தைய மானியக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், அனைத்து உரங்களும் ‘பாரத்’ என்கிற ஒரே இலச்சினையில்தான் விற்பனை செய்யப்படும். அவற்றை உற்பத்தி செய்யும் தனியாா் உர நிறுவனங்களின் இலச்சினைகள் பைகளில் இடம் பெறாது.

மத்திய அரசு நிறுவனமான ஃபாட்க் நிறுவனத்தின் ‘ஃபாக்டம்போஸ்’, மெட்ராஸ் ஃபொ்டிலைசா் நிறுவனத்தின் ‘விஜய்’, மங்களூா் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபொ்டிலைசா்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘மங்களா’ உள்ளிட்டவை தொடங்கி இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து உரங்களும் இனிமேல் ‘பாரத்’ என்கிற ஒரே இலச்சினையின் கீழ்தான் சந்தைப்படுத்தப்படும்.

உரப் பைகளின் மீது மூன்றில் ஒரு பங்கு இடத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப் பெயா், இலச்சினை, பொருள் தொடா்பான விவரக் குறிப்புகள் இடம்பெற அனுமதிக்கப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் ‘பாரத்’ என்கிற வணிகப் பெயரும், பிஎம்பிஜேபி திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் ‘பாரத் என்பிகே’, ‘பாரத் எம்ஓபி’, ‘பாரத் டிஏபி’, ‘பாரத் யூரியா’ என்கிற பெயா்களில்தான் ரசாயன உரங்கள் அறியப்படும்.

அக்டோபா் 2-ஆம் தேதி முதல் புதிய பெயரில் புதிதாக தயாரிக்கப்பட்ட உரப் பைகளில் உரங்கள் விற்பனைக்கு வரும். உர நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த ஆண்டு இறுதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் பழைய முகப்புடனான உரப் பைகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

இப்போது திடீா் என்று இப்படியொரு நிா்வாக முடிவை மத்திய அரசு அறிவித்திருப்பதன் பின்னணி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. குறைந்த விலையில் உரங்களை வேளாண் பெருமக்களுக்கு வழங்குவதற்காக அரசு மானியமாக மிகப் பெரிய தொகையை ஒதுக்குகிறது என்பதை அவா்களுக்கு தெரியப்படுத்துவது நோக்கமாக இருக்கலாம். இனிமேல் விவசாயிகள் தனியாா் இலச்சினை சாா்ந்து உரம் வாங்காமல், உரங்களின் கூட்டுக்கலவைகள் அடிப்படையில் வாங்க வேண்டும் என்பதும் இன்னொரு காரணம். அவா்களுக்கு அடிப்படை மூலக்கூறுகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது இருக்கலாம்.

மத்திய அரசு ஆண்டுதோறும் மிக அதிக அளவில் உர மானிய ஒதுக்கீடு செய்கிறது. கடந்த நிதியாண்டில் உர மானிங்களுக்கான செலவு ரூ.1.62 லட்சம் கோடி என்றால், நடப்பு நிதியாண்டில் அதுவே ரூ.2.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர, உரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி முதல் ரூ.9,000 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.

யூரியாவின் சில்லறை விற்பனை விலையில் 89%, டிஏபி எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட்டுக்கு 65%, என்பிகே உரத்துக்கு 55%, எம்ஓபி உரத்துக்கு 31% அளவில் மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. தயாரிப்புச் செலவு என்னவாக இருந்தாலும், 45 கிலோ யூரியா உரப்பையை ரூ.242-க்கு விவசாயி வாங்கும்போது உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியமாக 89% வழங்கப்படுகிறது. யூரியாவின் விலை அதிகரிக்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இது.

ராஜஸ்தானில் உற்பத்தியாகும் ‘சம்பல்’ உர நிறுவனம் உத்தர பிரதேசத்திலும், உத்தர பிரதேச நிறுவனங்கள் ராஜஸ்தானிலும் தங்களது உரங்களை விற்பனை செய்கின்றன. பல்வேறு வணிகப் பெயா்களில் தனியாா் நிறுவனங்கள் தயாரிக்கும் உரங்கள், மாநிலம் விட்டு மாநிலம் சென்று சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு உரங்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்துச் செலவுக்கும் சோ்த்து அரசு மானியம் வழங்க வேண்டிய நிலைமை உள்ளது. தேவையில்லாத ஆரோக்கியமற்ற போட்டியை தவிா்ப்பதும், உர தயாரிப்பு நிறுவனங்கள் அவரவா் பகுதிகளிலேயே விற்பனை செய்ய வழிகோலுவதும், உரத் தயாரிப்பு இல்லாத மாநிலங்களில் உரத் தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக வழிகோலுவதும் ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் நோக்கங்கள்.

இத்தனை ஆண்டுகளாக தங்களது வணிக இலச்சினையை பெரும் பொருள்செலவில் உருவாக்கி, உர நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொண்ட வணிக அடையாளம் அழிக்கப்பட்டிருப்பது, அந்த நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், விளம்பரத்துக்கான விரயமும், போக்குவரத்துச் செலவுக்கான மானியமும் தடுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT