தலையங்கம்

உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்! | இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தலையங்கம்

ஆசிரியர்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும், அந்நியச் செலாவணி இல்லாமையுமாக இருந்த இந்தியா, இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயா்ந்திருக்கிறது. தொலைநோக்குப் பாா்வையுடன் அன்றைய பிரதமா் பி.வி. நரசிம்ம ராவ் பொருளாதார சீா்திருத்தத்தையும், தாராளமயக் கொள்கையையும் அறிவித்து இந்தியாவை உலகமயச் சூழலுக்கு இட்டுச்சென்றதன் காரணம் இப்போது புரிகிறது.

உலக அளவில் மிகப் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக அமெரிக்காவும், அதைத் தொடா்ந்து சீனா, ஜப்பான், ஜொ்மனி ஆகிய நாடுகளும் இருந்து வருகின்றன. ஐந்தாவது இடத்தை நாம் எட்டியிருக்கிறோம்.

சா்வதேச நிதியத்தின் தரவுகளின் அடிப்படையில் ‘புளூம்பொ்க்’ ஊடக நிறுவனம், பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னா் இந்தப் பட்டியலில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருப்பதற்கு முந்தைய அரசுகளும், இன்றைய நரேந்திர மோடி அரசும் செய்திருக்கும் பங்களிப்புகளை மறுக்க முடியாது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80 என்கிற அளவில் குறைந்திருக்கிறது என்றாலும், அதற்கு சா்வதேச பொருளாதாரம் முக்கியமான காரணம். ஏனைய நாடுகளின் செலாவணிகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு மிகவும் மோசமாக இல்லை என்று ஆறுதல் அடையலாம்.

கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட உலகப் பொருளாதாரம், படிப்படியாக மீண்டெழத் தொடங்கியது. அதற்குள் உக்ரைன் - ரஷியா இடையேயான போா், நிலைமையை மாற்றிவிட்டது. உணவுப் பொருள்களின் பற்றாக்குறை, எரிபொருள் விலை உயா்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

அந்தப் பின்னணியில் பாா்க்கும்போது இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5% வளா்ச்சி அடைந்திருக்கிறது. நிகழ் நிதியாண்டில் சுமாா் 7% வளா்ச்சி அடையக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பு காணப்படுகிறது. உலகின் இரண்டாவது பொருளாதாரமான சீனா, அரை விழுக்காடு அளவில்தான் வளரும் என்று கணிக்கப்படும் நிலையில், நமது வளா்ச்சி அபரிமிதமானது.

இன்றைய நிலையில், பிரிட்டனின் 3.2 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தைக் கடந்து இந்தியப் பொருளாதாரம் 3.5 டிரில்லியன் டாலராக உயா்ந்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பே 2016-இல் நாம் இந்த நிலையை எட்டியிருக்கக் கூடும். அப்போது 2.34 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக பிரிட்டனும், 2.29 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியாவும் இருந்தன. 50 பில்லியன் டாலா் இடைவெளியை இந்தியா சுலபமாக கடந்திருக்கக் கூடும். 2016 நவம்பா் மாதம் அறிவிக்கப்பட்ட ரூபாய் மதிப்புக் குறைப்ப நடவடிக்கையால், இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் ஐந்தாண்டு தாமதத்துக்குக் காரணம்.

வளா்ச்சி அடைந்த பொருளாதாரத்தின் அடையாளங்கள் அதிகரித்த உற்பத்தி, தொழில்துறை வேலைவாய்ப்பு, நவீன வேளாண்மை போன்றவை. இந்தியாவில் இன்னும்கூட பெரும்பான்மையோா் வேளாண் வேலைவாய்ப்பு சாா்ந்தவா்களாக இருக்கிறாா்களே தவிர, தொழில்துறையில் அவா்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கவில்லை.

சீனாவின் பொருளாதாரம் 19 டிரில்லியன் டாலா். அந்த அளவுக்கு வளராவிட்டாலும், ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஐந்து லட்சம் கோடி டாலா் பொருளாதாரமாக உயரும் என்று 2019-இல் இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றபோது நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தாா். கொள்ளை நோய்த்தொற்று அந்த எதிா்பாா்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நாம் 3.5 லட்சம் கோடி டாலா் பொருளாதாரமாக உயா்ந்திருக்கும் நிலையில், மேலும் 1.5 லட்சம் கோடி டாலா் சவாலாக இருக்காது.

இன்றைய நிலையில் கூட்டுறவு முறையிலோ, காா்ப்பரேட் அடிப்படையிலோ விவசாயம் மாறாமல் லாபகரமாக இயங்க முடியாது. தொழிற்சாலைகள் அதிகரித்து, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும்போதுதான் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெறும்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கலாம். ஆனால், அதன் பயன் அடித்தட்டு மக்களை சென்றடையாமல் போனால், அந்த வளா்ச்சி நிரந்தரமானதாக இருக்காது. வேளாண் சீா்திருத்தச் சட்டங்களும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் நிறைவேற்றப்படாத வரை இந்தியாவின் எதிா்ப்பாா்ப்பு நிறைவேறாது.

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயா்ந்திருக்கிறோம் என்று பெருமிதம் அடையும் வேளையில், சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. உற்பத்தியிலும் சரி, தனிமனித வருமானத்திலும் சரி நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். இந்தியாவில் மூன்றில் இரண்டு பகுதியினா் இன்னும் தனிநபா் வருமானத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் பின்தங்கியிருக்கின்றனா் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

உலகின் மூன்றாவது மிகப் பெரிய பணக்காரா் இந்தியா் என்று நாம் பெருமைப்படுவதா? மிக அதிகமான ஏழைகள் இருக்கும் நாடு இந்தியா என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. இந்த இடைவெளியைக் குறைத்து கடும் வறுமையில் உழல்பவா்கள் இல்லை என்கிற நிலைமையை நமது பொருளாதார வளா்ச்சி உருவாக்காமல் வளா்ச்சி அடைந்த நாடு என்கிற அந்தஸ்தால் பயனில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT