தலையங்கம்

தங்க மங்கையர்!

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார் நிகாத் ஜரீன்.

ஆசிரியர்

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார் நிகாத் ஜரீன். மற்றொரு இந்திய வீராங்கனையான லவ்லினா போரோகைன் முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வேறொரு பிரிவில் வென்றிருக்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் நிது கங்காஸ் 48 கிலோ எடைப்பிரிவிலும், சவீட்டி போரா 81 கிலோ எடைப்பிரிவிலும் தங்கம் வென்று உலக சாம்பியன்களாகி இருக்கிறார்கள்.

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் இரண்டும் இணைந்து கடந்த வாரம் தில்லியில் ஐபிஏ உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தின. அதில் 65 நாடுகளைச் சேர்ந்த 324 வீராங்கனைகள் 12 எடைப்பிரிவுகளில் பங்கேற்றனர். 

நிகாத் ஜரீன், லவ்லினா போரோகைன், நிது கங்காஸ், சவீட்டி போரா ஆகிய நால்வரும் இந்தியாவுக்கு ஈட்டித் தந்திருக்கும் பெருமை சாதாரணமானதல்ல. நான்கு தங்கப்பதக்கங்களுடன் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதலிடம் வகிக்க அவர்களது சாதனை உதவியிருக்கிறது. 

கடந்த முறை 2006-இல் இதே போன்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த நான்கு குத்துச்சண்டை வீராங்கனைகள் நிகழ்த்தினார்கள். மேரி கோம், சரிதா தேவி, கே.சி. லேகா, ஆர்.எல். ஜென்னி ஆகிய நால்வரும் தங்கப்பதக்கங்களை 2006-இல் குவித்ததற்கும், இப்போதைய வெற்றிக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. அப்போது மகளிர் குத்துச்சண்டை போட்டி ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறவில்லை. 2012-இல் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டி இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, லண்டன் ஒலிம்பிக்கில் மேரி கோமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினாவும் வெண்கலப் பதக்கம் வென்றனர். 

இரண்டு முறை ஆசிய சாம்பியனான வியத்நாமின் நுயென் தி டாமை 50 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஜரீன் தோற்கடித்தார். 2022 உலக போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியனான நிகாத், ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவு இடம் பெற்றதால் அதற்கு மாறினார். எடைப்பிரிவு மாறிய பிறகும் மீண்டும் உலக சாம்பியனாவது சாதாரணமான சாதனையல்ல.

அதேபோல, லவ்லினாவும் எடைப்பிரிவு மாறியும் ஆஸ்திரேலிய வீராங்கனை காஸ்திரின் பார்கலை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றியிருக்கிறார். இவர் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கிலும், 2018, 2019 இரண்டு ஆண்டுகளிலும் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலம் வென்றவர். 

அடுத்தாற்போல வரவிருக்கும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீனாவின் ஹாங்ஷெள நகரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அவற்றில் நிகாத்தும், லவ்லினாவும் இந்திய அணியின் நட்சத்திரங்களாக திகழ்வார்கள். நிதுவும், சவீட்டியும் அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கு தங்களது எடைப்பிரிவை மாற்றிக்கொள்ள வேண்டும். 

50 கிலோ எடைப்பிரிவில் உள்ள நிகாத்துக்கும், 75 கிலோ எடைப்பிரிவில் உள்ள லவ்லினாவுக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதில் பிரச்னையில்லை. ஆனால், 48 கிலோ எடைப்பிரிவில் உள்ள நிதுவும், 81 கிலோ எடைப்பிரிவில் உள்ள சவீட்டியும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கும் தங்களது எடைப்பிரிவுகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

50 கிலோ, 54 கிலோ, 57 கிலோ, 60 கிலோ, 66 கிலோ, 75 கிலோ என ஆறு எடைப்பிரிவுகளில் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. அதற்கு தங்களைத் தயார் செய்துகொள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த வீராங்கனைகளுக்கு அடித்தளம் அமைக்கும். 

தில்லியில் நடந்த மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற இந்த நான்கு வீராங்கனைகள் மட்டுமல்லாமல், சில புதிய திறமைகளும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 54 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட 19 வயது பிரீத்திசாய் பவார், 60 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட ஜெய்ஸ்மைன் லம்போரியா இருவரும் வருங்காலத்தில்  சாதனையாளர்களாக வலம்வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியைச் சேர்ந்த வீராங்கனைகளின் சாதனைகள், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்தான் நம்மால் பெற முடிந்திருக்கிறது. பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை அணியினர் தங்கப்பதக்கம் வெல்லக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது, தில்லியில் நடந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள்.

ஏற்கெனவே மகளிர் கிரிக்கெட் அணியின் சாதனைகளும், சமீபத்திய மகளிர் கிரிக்கெட் பிரீமியர் லீக் அடைந்த வெற்றியும் விளையாட்டு அரங்கில் அவர்களது பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன. குத்துச்சண்டை, மல்யுத்தப் பிரிவுகளில் வீராங்கனைகளின் சாதனைகள் இந்தியாவுக்கு பெருமையும், வலிமையும் சேர்க்கின்றன. பி.டி. உஷாவும், மேரி கோமும், சானியா மிர்ஸாவும் முன்னோடிகளாக இருந்து பல இளம் வீராங்கனைகளுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். 

பெற்றோரும், பயிற்சியாளர்களும் வழங்கும் உற்சாகமும், மத்திய - மாநில அரசுகளின் ஆதரவும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதிக அளவில் விளையாட்டின் எல்லா பிரிவுகளிலும் வீராங்கனைகளின் சாதனைகள் அதிகரிக்கும்போது, பாலின சமத்துவத்துக்கான அஸ்திவாரம் வலுவாகக் கட்டமைக்கப்படுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT