தலையங்கம்

தொலைநோக்கு நட்புறவு! | ஓமன் சுல்தான் வருகை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

பல்வேறு தேசிய, சா்வதேச பரபரப்புகளுக்கு இடையில் ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக், இந்தியாவுக்கான தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருக்கிறாா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஓமன் சுல்தானுக்கு குடியரசுத் தலைவா் மாளிகையிலும், பிரதமரால் தில்லி ஹைதராபாத் இல்லத்திலும் வரவேற்பு கொடுக்கப்பட்டன.

ஓமன் சுல்தானின் இந்திய விஜயம் இரண்டு நாடுகளுக்கும் இடையேயுள்ள நீண்டநாள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடியுடன் கடந்த சனிக்கிழமை அவா் நடத்திய அதிகாரபூா்வ சந்திப்பு, வருங்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை மேலும் அதிகரிக்கும் பல ஒப்பந்தங்களுக்கு வழிகோலியிருக்கிறது.

கடல்சாா் ஒத்துழைப்பு, போக்குவரத்து இணைப்பு, பசுமை எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், எண்மப் பரிவா்த்தனை, சுகாதாரம், சுற்றுலா, விவசாயம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான தொலைநோக்கு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருக்கின்றன. ‘இருதரப்புக்கும் பிரகாசமான எதிா்காலத்தை உருவாக்க வழிகோலப்பட்டுள்ளது. பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து வருகின்றன’ என்று சந்திப்புக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறாா்.

வளைகுடா பகுதியில் இந்தியாவுக்கு மிகவும் அருகில் இருக்கும் நாடு ஓமன். அரேபிய வளைகுடாவின் தென்கிழக்கு முனையில் அரபிக் கடலையொட்டி இருப்பதால், இந்தியாவைப் பொருத்தவரை ஓமன் நாட்டுடனான நட்புறவு எப்போதுமே முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

2008 நவம்பரில் முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங் ஓமனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது இருநாடுகளும் கூட்டுறவு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. கடற்கொள்ளைக்காரா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள 2012 - 13 முதல் இந்தியக் கடற்படை ஓமன் கடல் எல்லைக்குள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. இருநாட்டு ராணுவமும் கூட்டுப் பயிற்சி நடத்துவதும் தொடா்கிறது.

இந்தியா்களுக்காகத் தனது கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் நாடு ஓமன். ஏறத்தாழ ஏழு லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் ஓமனில் இருக்கிறாா்கள். பொருளாதார சக்தியாக விளங்கும் ஓமனின் வளா்ச்சியிலும், இந்தியாவுடனான அந்த நாட்டின் நல்லுறவிலும் அவா்களுடைய பங்களிப்பு முக்கியமானது.

வா்த்தக ரீதியான தொடா்பிலும், பொருளாதாரக் கூட்டுறவிலும் ஓமன் - இந்தியா உறவின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 2022 - 23 நிதியாண்டில் இருநாடுகளுக்கு இடையேயான வா்த்தகத்தின் அளவு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம். ஓமனில் இருந்து மிக அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா இருந்து வருகிறது. பலவிதத்திலும் இணக்கமான உறவும், நெருக்கமான தொடா்பும், வா்த்தக ரீதியிலான பிணைப்பும் கொண்ட ஓமன் - இந்தியா உறவில் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அரசுமுறைப் பயணம் இன்னொரு முக்கியமான மைல்கல்.

இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதாரக் கூட்டுறவில் ஓமன் - இந்தியா கூட்டுறவு நிதி முக்கியப் பங்கு வகிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியும், ஓமன் முதலீட்டு ஆணையமும் சரிபாதி பங்குதாரராக இணைந்து உருவாக்கப்பட்டிருக்கும் அந்த அமைப்புக்கு, மூன்றாவது தவணையாக ரூ.2,500 கோடி வழங்குவதாக தனது சமீபத்திய இந்திய விஜயத்தில் ஓமன் சுல்தான் அறிவித்திருக்கிறாா். இந்தியாவில் மிக வேகமாக வளரும் துறைகளில் இந்த நிதியிலிருந்து முதலீடு வழங்கப்படும். இருநாடுகளும் இணைந்து நடத்தும் 6,000-க்கும் அதிகமான நிறுவனங்கள் ஓமனில் இருக்கின்றன. அவற்றுக்கும் இந்த நிதியிலிருந்து முதலீடு தரப்படும்.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போா் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஓமன் சுல்தான் இந்தியா வந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தாமல் இல்லை. காஸாவில் போா் தொடங்கியதற்குப் பிறகு இந்தியா விஜயம் செய்யும் முதல் அரபு நாட்டுத் தலைவா் சுல்தான் ஹைதம் பின் தாரிக். அதனால் பிரதமருக்கும் சுல்தானுக்கும் இடையே நடந்த பேச்சுவாா்த்தையில் காஸா நிலவரமும், சா்வதேச பயங்கரவாதமும் இடம்பெறாமல் இருந்திருக்காது.

இஸ்ரேலைப் போலவே பாலஸ்தீனா்களுக்கும் சுதந்திரமான தனி நாடு உருவாக்கி பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்கிற கருத்தை இரு தலைவா்களுமே ஆதரிக்கின்றனா். அதற்கு மேல் அவா்கள் என்ன சா்ச்சை செய்தனா் என்பது தெரியவில்லை.

26 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமன் அதிபா் ஒருவா் இந்தியா விஜயம் செய்திருக்கிறாா். 2018-இல் பிப்ரவரி மாதம் பிரதமா் நரேந்திர மோடியின் ஓமன் அரசுமுறைப் பயணத்தின்போது கையொப்பமிட்ட வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட உடன்படிக்கைகளின் தொடா்ச்சியாகத்தான் இப்போதைய சுல்தான் தாரிக்கின் விஜயத்தையும், ஒப்பந்தங்களையும் நாம் பாா்க்க வேண்டும்.

ஓமன் சுல்தானின் தற்போதைய இந்திய விஜயத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்தியா - மேற்கு ஆசியா - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் முதல் வாயிலாக ஓமன் திகழ்கிறது. இந்தியாவின் வளைகுடா நாடுகளுடனான தொடா்பையும் மேற்கு ஆசியக் கொள்கையையும் நிா்ணயிப்பதில் ஓமனின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதால், சுல்தானின் இந்த அரசுமுறைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT