தலையங்கம்

பாலியல் சமநிலையை நோக்கி...

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

ஆசிரியர்

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. பெண் காவலர்கள் பொன்விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு "அவள்' திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.


தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முதலாக பெண்களும் காவலராகலாம் என்பதை அறிமுகப்படுத்திய பெருமை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கே உரியது. 1973-ஆம் ஆண்டு காக்கி சீருடையுடன் கையில் துப்பாக்கி ஏந்திய பெண் காவல் உதவியாளர், பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு அவரால் பிறப்பிக்கப்பட்டது. இன்று தமிழக காவல்துறையில் 35,329 பெண் காவலர்கள் பணியாற்றுகிறார்கள். தமிழக காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்து நிலைகளிலும் அவர்களது பங்களிப்பு காணப்படுகிறது. 


மாநிலத்திலுள்ள 1,356 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்களில், 503 காவல் நிலையங்களில் மகளிர்தான் ஆய்வாளர்களாக உள்ளனர். அதாவது பெண் ஆய்வாளர்களின் பங்கு 37%. இந்த ஆண்டு பணியில் சேர்ந்திருக்கும் 21 காவல் துணை கண்காணிப்பாளர்களில் (டிஎஸ்பி) 17 பேர் பெண்கள்.
1973-இல் காவல் உதவி ஆய்வாளராக நியமனம் பெற்ற ஏ.பி. உஷா, இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். பணியில் இணைவதற்கு  ஜூடோ, கராத்தே, குதிரை ஏற்றம் உள்ளிட்டவை மட்டுமல்லாமல், சட்ட விதிகள் குறித்தும் தனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதை பதிவு செய்திருக்கிறார் அவர். அவரது தலைமையில் 22 பெண் காவலர்கள் கொண்ட பிரிவு அப்போது உருவாக்கப்பட்டது. 


ஆரம்ப காலங்களில் ஆண் அதிகாரிகள் பாலியல் தொழில் உள்ளிட்ட ஆய்வுகளுக்குச் செல்லும்போது அவர்களுடன் செல்வதற்கும், அரசியல் கூட்டங்களின் பாதுகாப்பிற்கும் மட்டுமே பெண் காவலர்கள் இணைக்கப்பட்டனர். இப்போது அனைத்து காவல்துறை பணிகளிலும் அவர்களின் பங்களிப்பு காணப்படுகிறது என்பது மிகப் பெரிய மாற்றம். 


தமிழகத்தில் 222 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் இருக்கின்றன. 2005-இல் முதல் முறையாக காவல்துறையின் முதலாவது மகளிர் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக 1,078 பேர் கொண்ட மகளிர் காவல்துறை பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் காவல்துறையின் அனைத்துப் பதவி நிலைகளும் இருந்தன. 
இப்போது பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் காவல்துறையைச் சேர்ந்த பெண்களின் பங்களிப்பு காணப்படுகிறது.

உயர்நீதிமன்றப் பாதுகாப்பு, குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறார் குற்றப் பிரிவு, மத்திய குற்றப் புலனாய்வு உள்ளிட்ட காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பெண் அதிகாரிகள், காவலர்களின் பங்களிப்பு காணப்படுகிறது.


சமீப காலமாக காவல்துறையில் பணிபுரியும் மகளிரின் செயல்பாடுகள் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன. சமீபத்தில் காவல் உதவி ஆய்வாளர் டி. மீனா, சூர்யா என்கிற குற்றப்பின்னணி உடையவர் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியபோது அவரை தயவுதாட்சண்யமில்லாமல் சுட்டது; சென்னை, டி.பி. சத்திரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, மயக்கத்தில் இருந்த ஒருவரை மனிதாபிமானத்துடன் தனது தோளில் தூக்கிச் சென்றது போன்ற செய்திகள் காவல்துறையில் பணியாற்றும் மகளிர் எந்தவிதத்திலும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றன. 


பெண் காவலர்களின் துணிவும், செயல்பாடும் மெச்சத்தகுந்ததாக இருக்கின்றன என்றாலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் தொடர்கின்றன. பல காவல் நிலையங்
களில் அவர்களுக்குத் தனியாக கழிப்பறை கூட கிடையாது. பாதுகாப்புப் பணியில்  ஈடுபடும்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். சட்டம் - ஒழுங்கு பிரிவில் இன்னும் கூட பெண்கள் ஆய்வாளர்களாக நியமிக்கப்படுவதில் தயக்கம் காணப்படுகிறது. 


எல்லாவற்றிற்கும் மேலாக, காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து சொல்லி மாளாது. உயர் பதவிகளில்கூட காவல்துறை பெண் அதிகாரிகள் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்கிறார்கள் என்றால், கீழ்நிலை அளவில் பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்கவே வேண்டாம். பாலியல் சமநிலை, அரைநூற்றாண்டு கடந்தும் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். 


பொன்விழா நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதுபோல, காவல் பணியோடு சேர்ந்து குடும்பப் பணிகளையும் செய்தாக வேண்டிய நெருக்கடி பெண் காவலர்களுக்கு இருக்கிறது. அதை உணர்ந்து அவர் காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் நலனுக்காக ஒன்பது முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். 
அவர்களது நீண்டநாள் கோரிக்கையான காவல் வருகை அணிவகுப்பு காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும்; சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள்; அனைத்து காவல்நிலையங்களிலும் தனியாக கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள்; குழந்தைகளைப் பராமரிக்க குழந்தைகள் காப்பகம்; குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்; அவர்களுக்குத் தனியாக துப்பாக்கி சுடும் போட்டி; ஆண்டுதோறும் "காவல்துறையில் பெண்கள்' எனும் தலைப்பில் தேசிய மாநாடு; பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு; கலைஞர் காவல்பணி விருதும், கோப்பையும் - இவைதான் முதல்வரின் ஒன்பது அறிவிப்புகள். 
காவல்துறையில் மகளிரின் பங்கு மேலும் அதிகரிப்பதன் மூலம்தான் பாலியல் சமநிலை ஏற்பட முடியும். முதல்வரின் அறிவிப்புகள் அதை நோக்கிய நகர்வு என்று கருதலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT