தலையங்கம்

ஜனநாயகத்தின் தோல்வி!

ஆளும் கட்சியின் அலட்சியமோ எதிர்க்கட்சிகளின் பிடிவாதமோ எதுவாக இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகள் முறையாக செயல்படாமல் இருப்பதை மன்னிக்கவே முடியாது.

ஆசிரியர்

ஆளும் கட்சியின் அலட்சியமோ எதிர்க்கட்சிகளின் பிடிவாதமோ எதுவாக இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகள் முறையாக செயல்படாமல் இருப்பதை மன்னிக்கவே முடியாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையே விவாதம்தான் எனும்போது, அவைப்பெரும்பான்மை மட்டுமே போதும் என்று கருதுவது ஆபத்தான போக்கு. குற்றம் குறைகளை எடுத்துரைக்கவும், தவறுகளைத் தட்டிக் கேட்கவும் எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு என்பதை ஆளும் கட்சி மறுக்கக்கூடாது.

கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் எந்தவித அலுவலையும் மேற்கொள்ளாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி முடிவு எட்டப்பட வேண்டும் என்கிற அக்கறையே இல்லாமல் அவசியமற்ற பிடிவாதத்தை கடைப்பிடிப்பது வேதனையளிக்கிறது. 

மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்க்கட்சிகளை அழைத்துப் பேசியதைத் தவிர, அவைகளின் முடக்கத்துக்கு தீர்வு காணும் வேறு எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. 

ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும், நாடாளுமன்றத் துறை அமைச்சர் எல்லா கட்சிகளின் அவைத் தலைவர்களையும் அழைத்து அவையை நடத்துவது குறித்து விவாதிப்பார். எது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டும், என்னென்ன மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து அலுவல் ஆலோசனைக் குழு தீர்மானிக்கும். இந்த வழக்கங்களெல்லாம் அநேகமாகக் கைவிடப்பட்டுவிட்டன.

அதானி - ஹிண்டன்பெர்க் பிரச்னையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டிய வர்த்தகம் தொடர்பான பிரச்னையை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அரசியல் அல்லாமல் வேறென்ன? 

அதேபோல "இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது' என்று ராகுல் காந்தி பிரிட்டனில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டால்தான் அவை நடக்கும் என்று ஆளும் பாஜக வற்புறுத்துவது அதைவிட வேடிக்கை. ராகுல் காந்தியின் கருத்து விமர்சனத்துக்கு உரியது என்றாலும், அதை சாக்காக வைத்து நாடாளுமன்றத்தை ஆளும் கட்சியே முடக்குவது விநோதமாக இருக்கிறது.

பல முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. ரயில்வே, விவசாயம், சாலைப் போக்குவரத்து, சுகாதாரம், மகளிர் - குழந்தைகள் நலன் உள்ளிட்ட துறைகளின் ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். நிதி மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் செய்து கொண்டிருக்கின்றன ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும்.

மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிதி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். தற்போதைய முடக்கத்துக்கு முடிவு காணப்படாவிட்டால், மார்ச் 28-ஆம் தேதி எந்தவித விவாதமும் இல்லாமல், அத்தனை மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும். அதற்கு "கில்லட்டின்' முறை என்று பெயர். அதனால் இழப்பு அரசியல் கட்சிகளுக்கு அல்ல; வாக்களித்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குத்தான்! 

ஆளும் கட்சி தாக்கல் செய்யும் மசோதாக்களை உன்னிப்பாக கவனித்து அதில் காணப்படும் குற்றம், குறைகளை அவையில் பதிவு செய்வதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை; கடமை. மக்களின் வரிப்பணம் அரசால் எப்படி செலவிடப்படுகிறது என்பதை கண்காணிக்கும் உரிமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. வெட்டுத் தீர்மானங்கள், திருத்தங்கள் போன்றவை விவாதிக்கப்படுவதும், அதில் கூறப்படும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதும் ஆட்சியை செம்மைப்படுத்த உதவும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

நாடாளுமன்ற முடக்கம் என்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல. ஆளும் கட்சிக்கு இரு அவைகளிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில், அவையை முடக்குவதால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. அதற்குப் பதிலாக பட்ஜெட் விவாதத்தில் வெட்டுத் தீர்மானங்கள், திருத்தங்கள் மூலம் அரசை விவாதத்துக்கு இழுத்து அதன் பலவீனங்களை வெளிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனமான எதிர்க்கட்சி அணுகுமுறையாக இருக்கும். 

ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசுவதும், தனிப்பட்ட முறையில் அணுகி அவர்களது ஆதரவுடன் அவையை நடத்துவதும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை. 

அந்த அணுகுமுறை அநேகமாக கைவிடப்பட்டிருக்கிறது என்பது விசனத்துக்குரிய யதார்த்தம்.

இது ஏதோ நாடாளுமன்றத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று கருதிவிட வேண்டாம். அண்டை மாநிலமான கேரளத்தில் ஆளும் இடது முன்னணி அரசு, மத்தியில் பாஜக கடைப்பிடிக்கும் அதே போக்கைத்தான் கையாள்கிறது. இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நடக்க இருந்த சட்டப்பேரவைக் கூட்டம் எட்டு நாள்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்கிறது. 

8 நாள்களின் நடவடிக்கைகள் சுருக்கப்பட்டு, 31 நிமிடத்தில் நிதி மசோதா உள்பட அனைத்து மசோதாக்களும் "கில்லட்டின்' முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல்  எடுக்கப்பட்டிருக்கும் அந்த முடிவை என்னவென்பது? 

நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ளாமல் தங்களது பதவிக்காலத்தை முடித்துக்கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

மக்களவையும், மாநிலங்களவையும் ஒரு நிமிடம் கூடுவதற்கான செலவு சுமார் ரூ. 3.5 கோடி. மக்களின் வரிப்பணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் வீணாக்கப்படுவதை இந்திய ஜனநாயகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT