நாட்டின் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பி அன்றாட வாழ்க்கை இயல்புநிலையை எட்டியிருக்கும் வேளையில், மீண்டும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. நோய்த்தொற்றுப் பரவல் முன்புபோல நாடுதழுவிய அளவில் இல்லையென்றாலும் கூட, நாம் மெத்தனமாக இருந்துவிட முடியாது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் புதிதாக 1,134 பேர் கொவைட் 19 தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடுதழுவிய அளவில் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,026-ஆக அதிகரித்திருக்கிறது. கொவைட் 19 மட்டுமல்லாமல், இன்னொருபுறம் இன்ஃப்ளுயென்சா காய்ச்சலும், பன்றிக் காய்ச்சல், எச்3என்2 காய்ச்சல் பாதிப்புகளும் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை உயர்நிலைக் குழு கூட்டம் கூட்டப்பட்டிருப்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. தீநுண்மியின் புதிய வகை உருமாற்றம், இன்ஃப்ளுயென்சா ஆகியவற்றால் ஏற்படும் பொது சுகாதார பாதிப்பு குறித்து பிரதமர் தலைமையில் விவாதிக்கப்பட்டது. கொவைட் 19, இன்ஃப்ளுயென்சா ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு இயந்திரம் மருத்துவத் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும்.
நோய்த்தொற்றை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. படுக்கை, பிராணவாயு வசதிகள், தடுப்பூசி கையிருப்பு, மருந்துகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒமைக்ரான் வகைகளான எக்ஸ்பிபி, பிஏ7 உருமாற்றம் பெற்ற பாதிப்புகள் பரவி வருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும், குறிப்பாக துபை, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழகம் வருபவர்களில் தோராயமாக இரண்டு விழுக்காட்டினருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 10 நாள்களில் நடத்தப்பட்ட 28,833 காய்ச்சல் முகாம்களில் சுமார் 10 லட்சம் பேர் சோதனை செய்யப்பட்டிருக்கின்றனர்.
கடந்த ஓராண்டாக அடங்கிப் போயிருந்த கொவைட் 19 தீநுண்மி மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருப்பது மருத்துவத் துறையினரை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் இரட்டை இலக்க அளவுக்கு குறைந்துவிட்டிருந்த நோய்த்தொற்றுப் பரவல், நான்கு இலக்க அளவில் அதிகரித்திருக்கிறது. ஒருசில உயிரிழப்புகளும் தெரியவந்திருப்பதுதான் கவலையை அதிகரிக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலும் நோய்த்தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஏழு நாள்களில் 6.65 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. அதுமட்டுமல்ல, 4,178 உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் 1.7 லட்சம் புதிய பாதிப்புகளும், 1,887 உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கின்றன. கடந்த ஏழு நாள்களில் சீனாவில் 55,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
உருமாற்றங்களுக்குப் பிறகு, கொவைட் 19 தீநுண்மித் தொற்றின் கடுமை குறைந்து வருகிறது என்றாலும்கூட, அதனால் மெத்தனமாக நாம் இருந்துவிட முடியாது. உருமாற்றங்களால் கடுமை குறைவதைப் போலவே, திடீரென்று கூடுதல் வலிமை பெற்று தீவிரமாகவும் கூடும். உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும் சில உருமாற்றங்கள் குறிப்பிட்ட சில முக்கியமான உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
பொருளாதாரம் மீண்டெழுந்து சர்வதேச அளவில் வணிகத்துக்காகவும், வேலை காரணமாகவும், சுற்றுலாவுக்காகவும் அதிக அளவில் மக்கள் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் விளைவாக, தீநுண்மித் தொற்றும் அதிவேகமாக நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பரவும் வாய்ப்பு அதிகமாகிறது. சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதால் தங்களது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று சுற்றுலாவை மையமாகக் கொண்ட நாடுகள் தயங்குகின்றன. அந்தத் தயக்கமேகூட நோய்த்தொற்றுப் பரவலுக்கு வழிகோலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்தப் பின்னணியில்தான் பிரதமர் நரேந்திர மோடி கொவைட் 19 தீநுண்மியின் ஆபத்து அகன்றுவிடவில்லை என்று நாட்டு மக்களை எச்சரித்திருக்கிறார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தீநுண்மியின் "மரபணு பகுப்பாய்வு' (ஜினோம் சீக்வன்சிங்) உறுதிப்படுத்தவும், நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்புகளை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். "மரபணு பகுப்பாய்வு' மூலம் தீநுண்மியின் உருமாற்றங்கள் குறித்த விவரங்கள் கிடைக்கப்பெறும். அதனால் அவற்றை எதிர்கொள்ளும் முன்னெடுப்புகளை மருத்துவத் துறையினர் மேற்கொள்ள முடியும்.
கொவைட் 19-ஐ எதிர்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நாடுதழுவிய அளவில் அநேகமாகக் கைவிடப்பட்டுவிட்டன. கைகளைக் கழுவுதல், கை சுத்திகரிப்பான் ஆகியவை மக்களுக்கு மறந்துபோய்விட்டன. முகக் கவசம் அணிவதையும் பெரும்பாலோர் கைவிட்டுவிட்ட நிலைமை. அதனால் மக்கள் மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை முன்புபோல ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.